முடிவின் தொடக்கம்!

அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கத் தயார் என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தென்கொரியா மூலம் தூது அனுப்பியதும்,

அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கத் தயார் என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தென்கொரியா மூலம் தூது அனுப்பியதும், அந்த அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டதும் உலகத்தையே புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
2017-ஆம் ஆண்டு முழுவதும் கிம்முக்கும், டிரம்ப்புக்கும் இடையில் நடந்த வார்த்தைப் போரைக் கண்டு உலகமே பதைபதைத்துக் கிடந்தது. அணுகுண்டை முதலில் அமெரிக்கா வீசுமா, வடகொரியா வீசுமா என்று அச்சப்படும் அளவுக்கு இரு தலைவர்கள் இடையே மோதல் வெடித்தது. ஆனால், நிகழாண்டு தொடக்கத்தில் இருந்தே வடகொரியாவின் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றங்கள்.
தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்க அனுமதித்தார் கிம். அத்துடன் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவுக்குத் தன் சகோதரி கிம் யோ ஜாங்கையும் தென்கொரியாவுக்கு கிம் அனுப்பி வைத்ததை மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்தன உலக நாடுகள். அதன் உச்சகட்டம்தான், வரும் மே மாதம் டிரம்ப்பை நேருக்கு நேர் சந்தித்துப் பேச விரும்புவதாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் கிம் தற்போது விடுத்துள்ள தூது.
இரு நாடுகள் தங்கள் இடையேயான பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததில் உலக நாடுகளுக்கு என்ன வியப்பு என்கிறீர்களா? சர்வதேச விவகாரத்தை அணுகுவதில் இரு தலைவர்களும் இதுவரை கடைப்பிடித்து வரும் அதிரடி முறையே இதற்குக் காரணம்.
வடகொரியா தனது நிலையிலிருந்து தடாலடியாக இறங்கி வந்திருப்பதன் பின்னணியில் என்னதான் உள்ளது? தென்கொரிய அதிபர் மூன் ஜே-வுக்கு இதில் பெரும் பங்கிருக்கிறது. படிப்படியாக வடகொரியாவுடனான பதற்றத்தைத் தணித்தது, தென்கொரிய அரசுக் குழுவினர் கிம்மை சந்தித்துப் பேசும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்செய்தது என மூன் ஜே-வின் உழைப்பு முக்கியமானது. மற்றொன்று வடகொரியா மீதான பொருளாதாரத் தடை.
வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரிப்பதையும், ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடுவதையும் தடுக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டிலிருந்தே அந்த நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பல பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அந்நாட்டிலிருந்து நிலக்கரி, இரும்பு, ஜவுளி, கடல் உணவுப் பொருள்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுவதையும், அந்நாட்டுக்கு கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதையும் தடுக்கிறது இந்தத் தடை. இது தவிர அமெரிக்காவும் தன் பங்குக்கு இதுபோன்ற பொருளாதாரத் தடைகளை வடகொரியா மீது விதித்திருக்கிறது. பொதுவாக, பொருளாதாரத் தடைகளை எல்லாம் வடகொரியா பொருள்படுத்துவதில்லை என்றாலும், சில தினங்களுக்கு முன் அமெரிக்கா புதிதாக விதித்த பொருளாதாரத் தடை வடகொரியாவை சற்றே அசைத்துப் பார்த்துவிட்டது எனலாம்.
அதிபர் கிம்மின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நம் மலேசியாவில் வி.எக்ஸ். என்கிற ரசாயன ஆயுதத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். சர்வதேச தடையை மீறி ரசாயன ஆயுதத்தை வடகொரியா பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, புதிய பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா. இந்தப் புதிய தடையானது வடகொரியாவின் 28 வர்த்தக கப்பல்களையும், 27 கப்பல் நிறுவனங்களையும் குறிவைத்தது. இதன்மூலம் கடல் வழியாகக் கூட வடகொரியாவுக்குள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அதிபர் டிரம்புடன் கிம்மே நேரடியாகப் பேச விரும்புகிறார் எனச் சொன்னதற்கு இந்தப் புதிய தடையே கூடக் காரணமாக இருக்கலாம்.
டிரம்ப்-கிம் இடையே நிகழப் போகும் இந்த சந்திப்பை சீனா, ஜப்பான் உள்பட பல நாடுகள் வரவேற்றுள்ளன. இந்தச் சந்திப்பின்போது, வடகொரியா என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. 'பொருளாதாரத் தடைகளை விலக்க வேண்டும்; தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்; தென்கொரியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அணு ஆயுதங்களைக் கைவிடத் தயார் என வடகொரிய அதிபர் கிம் நிபந்தனை விதிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதற்கு முன்னதாக, இந்தச் சந்திப்பு நிகழ வேண்டுமானால், ஏப்ரல் மாதம் தென்கொரிய, வடகொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச வேண்டும்; அதுவரை எந்த ஏவுகணை சோதனையையும் வடகொரியா மேற்கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. மேலும், 'வடகொரியா தனது பேச்சில் உண்மையாக இருக்க வேண்டும்; இந்தச் சந்திப்பை வைத்து ஏதாவது விளையாட்டு காட்ட நினைத்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் லிண்ட்úஸ கிரஹாம் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது, வடகொரியா அதிபர் கிம் என்ன கேட்பார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன கொடுப்பார் என்கிற கேள்விக்கான விடை தெரிய சில நாள்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலோ, பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி நடக்காவிட்டாலோ வடகொரியா கேட்காததையும் அமெரிக்கா தரக் கூடும் என்பதே உண்மை.
மொத்தத்தில், வடகொரியாவும், அமெரிக்காவும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதத்தை ஒழிக்கும் முடிவின் தொடக்கமாக இருக்கட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com