கலக மானிடப் பூச்சிகள்

நந்தவனத்திலே யாழ் மீட்டுவதைப் போன்று ரீங்காரமிடும் தேனீக்கள், மலர்களின் முதுகில் காற்றைப் போல் வந்து தங்கும்;

நந்தவனத்திலே யாழ் மீட்டுவதைப் போன்று ரீங்காரமிடும் தேனீக்கள், மலர்களின் முதுகில் காற்றைப் போல் வந்து தங்கும்; தேனைக் குடிக்கும். அதற்குமேல் அந்தச் செடிகொடிகளின் இனப்பெருக்கத்திற்கு மகரந்தச் சேர்க்கை மூலம் வழி வகுக்கும். தாமும் வாழ்ந்து, தாவரங்களையும் வாழ வைக்கின்றன தேனீக்கள். எனவேதான் ஓர் ஆங்கிலக் கவிஞன், 'தேனீக்கள் மட்டுமே மலர்களிலிருந்து தேனை எடுக்க முடியும்; சிங்கம், புலி போன்ற விலங்குகளால் அது முடியாது' என்றான்.
கலக மானிடப் பூச்சிகள் தேனீக்கள் இனத்தில் இல்லை; மானுடத்தில்தான் உண்டு போலும்.
ஆனால், குரங்குகள் ஒரு வாழை மரத்திலிருந்து, வாழைப் பழங்களைப் பறித்துப் பாதி தின்றுவிட்டு மீதிப் பாதியைக் கீழே தூக்கி எறியும். அதே குரங்கு எதிர்த்த வாழை மரத்தில் உட்கார்ந்திருக்கும் குரங்கோடு சண்டை போட நினைத்தால், வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து, எதிர்த்த மரத்தில் எறியும். எதிர்த்த மரத்தில் இருக்கும் குரங்கு, ஏட்டிக்குப்போட்டியாக தானிருக்கும் மரத்திலிருந்து பழங்களைப் பறித்து முதல் குரங்கின் மீது எறியும். அந்தக் கோரக் காட்சியைக் கண்டுகொண்டிருக்கும் தோட்டக்காரன், பல நாட்களாகக் காலையும் மாலையும் தண்ணீர்விட்டு வாழைத் தோட்டத்தை வளர்த்தவன், இப்பொழுது தண்ணீருக்குப் பதிலாகக் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பான். குரங்குகள் தெய்வாம்சத்தோடும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவற்றை அவன் அடித்துத் துரத்தவும் முடியாது.
குரங்குகள் செய்யும் வேலையைச் சமீப காலமாகப் பக்குவமில்லாத - ஆறறிவும் சரியாக வளரப் பெறாத மனிதர்களும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். 'விலங்குகளுக்குக் கால்நடைகள் எனப்பெயர்; ஏனென்றால், அவைகள் காலால் மட்டுமே நடக்கக் கூடியவை; ஆனால், மனிதனுக்கும் கால்கள் உண்டு. அவனைக் கால்நடை எனச் சொல்வதில்லை. ஏனென்றால், மனத்தாலே நடக்கக் கூடியவன்; தேவைப்பட்டால், காலாலேயும் நடப்பான்' என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
சமீப காலமாகச் சில மனதர்கள் காலாலே மட்டும் நடக்கிறார்கள். அதனால் மாவீரன் லெனின் சிலைகளும், டாக்டர் அம்பேத்கர் சிலையும் பின்னப்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் டகோடா கருமலைத் தொடரின் அண்ணாந்து பார்க்கின்ற உச்சியில் ரஷ்மோர் குன்றில், ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகிய நான்கு அதிபர்களின் திருவுருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். அயல்நாட்டுப் பயணிகளும், உள்நாட்டுப் பார்வையாளர்களும் கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்து, வீர வணக்கம் செலுத்த முடியுமே தவிர, யாரும் கிட்டே நெருங்க முடியாது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் மாவீரன் லெனினுடைய கல்லறை மாடம் அமைந்திருக்கிறது. 1924-ஆம் ஆண்டு, இயற்கையெய்திய அந்தப் புரட்சித்தலைவனுடைய புகழுடம்பு, பக்குவப்படுத்தப்பட்டு மிகக் கவனத்தோடு பாதுகாக்கப்படுகிறது. இன்றைக்கும் அங்கு செல்கின்ற பார்வையாளர்கள் மெளன அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டார். அதனால், ஆலைத் தொழிலாளர்கள் அனைவரும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்துவிட்டனர். இதைப் படித்த மாவீரன் லெனின், 'லோகமான்ய திலகர் கைது செய்யப்பட்டதால், பாட்டாளி வர்க்கம் களத்தில் இறங்கிவிட்டது. இதன் மூலம் இந்திய விடுதலை உறுதியாகிவிட்டது' என்றான். தோழமைக்குரல் கொடுத்த அந்த மாவீரனுக்கு திரிபுராவில் பொக்லைன் மூலம் நன்றி செலுத்தப்படுகின்றது. குழாயடிச் சண்டைக்காரர்கள் செய்யும் சிறுபிள்ளைத்தனங்களால், பாரதப் பிரதமரே இன்று சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
மானுடத்தை ஈடேற்றம் செய்வதற்காகவே சர்வோபரித் தியாகம் செய்த உத்தமர்களின் நினைவு காலங்கள்தோறும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே உருவச்சிலைகள் நிறுவப்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்கும் தேசத் தலைவர்களின் தியாகங்கள் மனத்தில் படிய வேண்டும் என்பதற்காகவே நினைவுச் சிலைகள் நிறுவப்படுகின்றன. 
ஊருக்குழைத்த உத்தமர்களைப் பற்றி படிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, இடிக்க வேண்டும் என்ற உணர்வு, இந்தியாவில் மட்டுமன்றி, உலகெங்கும் ஊடுருவி நிற்கிறது. உலகத்திற்கே ஞானத்தைப் போதித்த புத்தர் சிலைகளை, ஆப்கானிஸ்தானத்திலுள்ள தலிபான்கள் வெடிகுண்டுகளை வீசி சிதைத்தனர். மானுடத்தின் ஈடேற்றத்திற்காக மாளிகையைத் துறந்து, மரத்தடிக்கு வந்த புத்தரின் விக்கிரகங்களை, 2001-லிருந்து 2008 வரை கொலைவெறியாடி சின்னாபின்னமாக்கினார்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து சீனச் சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களை, ஈவிரக்கமின்றித் தகர்த்து எறிந்தனர்.
கயாவில் ஒரு தந்தைக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இருவரும் புத்தருடைய போதானா மொழிகளைச் செவிமடுத்துக் குடும்பத்தை விடுத்து, துறவுபூண்டனர். வம்சத்திற்கு ஒரு பிள்ளையில்லாமல் போனதால், ஆத்திரம் அடைந்த அந்தப் பிள்ளைகளின் தகப்பன், புத்தர் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று அவர் முகத்தில் காறித் துப்பிவிட்டு வந்தான். புத்தர் சாந்த முகத்தோடு, அதனை மார்புத்துணியால் துடைத்துக் கொண்டார். மறுநாள் மனம் திருந்திய அந்தத் தகப்பன், புத்தர் முன் சென்று மன்னிப்புக் கேட்டான். அதற்கு புத்தர், 'நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைக்கு வந்திருக்கின்ற நீ, நேற்றைக்குத் துப்பியவனல்ல; நேற்றைய தினம் துப்பியவன் இன்று வரவில்லை. அதனால் பாதகம் இல்லை' என்றார். அந்த உத்தமனின் உருவச்சிலைகளைத்தான் பயங்கரர்கள் குண்டுகளால் துளைத்தனர்.
கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் வாழ வேண்டும் என்பதை உலகத்திற்கே சொல்லிக் கொடுத்தது இப்பாரத பூமி. முதல் சுதந்திரப்போர் எனக் கருதப்பட்ட சிப்பாய்க் கலகத்தை முன்னின்று தோற்கடித்தவன், ஜெனரல் நீல் என்ற ஆங்கிலேயன். அந்தப் போராட்டத்தின்போது, பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் கொஞ்சமும் அஞ்சாமல் செய்தவன் அந்தப் பாதகன். இராணுவத்தில் காட்டுத் தர்பாரை நடத்தினான். ஆண்கள் - பெண்கள் அத்தனை பேரையும் ஓடோட விரட்டியவன். ஆங்கிலேயருக்குத் தேடிக் கொடுத்த வெற்றிக்காக, அவனுக்கு ஆங்கில அரசு சென்னை மவுண்ட் ரோடில் சிலை ஒன்றை நிறுவியது.
ஜெனரல் நீல் சிலையை எப்படியாவது இரவோடு இரவாக அகற்றிட வேண்டும் என்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் துடித்தனர். அந்த அறப்போருக்குத் தலைமை ஏற்றவர் கர்மவீரர் காமராசர். அப்பொழுது மகாத்மா காந்தியடிகள் சென்னையில் எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்கியிருப்பது தெரிய வரவே, காமராசர் காந்தியடிகளிடம் சென்று அப்போராட்டத்தை எப்படி நடத்துவது என ஆலோசனை கேட்டார். அதற்குக் காந்தியடிகள், வன்முறையற்ற வகையில், வெறுப்பை மட்டும் காட்டத் தக்க வகையில், பொதுமக்கள் பார்த்து ஏளனம் செய்யும் வகையில், நீல் சிலை மீது சிறு சிறு களிமண் உருண்டைகளை உருட்டிப் போடும்படி ஆணையிட்டார். அந்த மறியலுக்குத் தலைமை தாங்கியவர் கர்மவீரர் காமராசர் என்பதால், காந்தியடிகள் தெரிவித்தவாறு கண்ணிய முறையில் நடத்திச் சென்றார்.
இந்த மண்ணின் நயத்தக்க நாகரிகத்திற்கு மேலும் ஒரு சுவையான செய்தி உண்டு. சோவியத் நாட்டு அதிபரான நிகிடா குருச்சேவ், இந்திய அரசின் விருந்தினராக தில்லிக்கு வருகை புரிந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, குருச்சேவுக்குக் குடியரசுத் தலைவரின் மாளிகையைச் சுற்றிக் காண்பித்தார். குடியரசுத்தலைவர் மாளிகையின் சுவர்களில் வரிசையாக நம்மையாண்ட ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களின் ஓவியங்கள் சட்டம் போட்டு மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்துக் குருச்சேவ் திடுக்கிட்டார். உடனே, நம்முடைய பிரதமரைப் பார்த்து, 'என்ன இது! உங்களை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களின் படங்களை இன்னும் இங்கு மாட்டி வைத்திருக்கிறீர்கள்?' என வினவினார்.
அதற்குப் பண்டித ஜவாஹர்லால் நேரு, 'வரலாறு அவ்வளவு சீக்கிரம் துடைத்தெறியப்படக் கூடியதன்று' என்றாராம்.
என்றாலும், நாம் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! தப்புவதற்கு வழிகள் இருக்கின்றன என்பதற்காகத் தவறுகளைச் செய்யக்கூடாது. அண்மையில் எகிப்திய பிரபல பாடகி ஷெரின் அப்தெல் வஹாபிற்குக் கிடைத்த தண்டனையை எண்ணிப் பார்க்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஷெரினிடம் 'நீங்கள் நைல் நதியின் தண்ணீரைக் குடித்திருக்கிறீர்களா?' என ஒரு ரசிகர் கேட்டுவிட்டார். அதற்கு அப்பாடகி, 'நைல் நதி நீரைக் குடித்தால் நோய்த் தாக்குதலுக்கு அல்லவா உள்ளாவோம்' எனப் பதிலிறுத்துவிட்டார். செய்தி அரசுக்கு எட்டி, வழக்கு பாய்ந்தது. நாட்டுப்பற்றைக் குறைத்துப் பேசியதற்காக, ஷெரினுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.
மனிதர்கள் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பேச்சு இருக்கிறது; எழுத்து இருக்கிறது. கடப்பாரையும் பொக்லைனும் எதற்கு?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com