காவலருக்குப் பாதுகாப்பு!

தற்போதைய காவல் துறையின் பணித்திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

தற்போதைய காவல் துறையின் பணித்திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. உயிரிழப்புகள் மட்டும் அதிகரித்துக்கொண்டுடிருக்கிறது. குற்றவாளிகளுக்கு கிடைக்கும் அறிவியல் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சி வசதி, விசாரணை அதிகாரிகளுக்கு கிடைப்பதில்லை. களப்பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ் நிலை அலுவலர்களில் ஓரளவு கணிப்பொறி பற்றித் தெரிந்தவர்கள் அல்லது படித்தவர்களே 'சைபர்' கிரைம் பிரிவில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவ காவல்துறையில் பொறியியல் வல்லுநர்கள் போதுமான அளவில் இல்லை. 
கைப்பேசி உரையாடல் மற்றும் தகவல் பறிமாற்றங்கள் பல வழக்குகளில் துப்புத்துலங்க உதவியாய் இருக்கிறது. ஆனால் அந்த தகவல்களை சேகரிக்கவும் கண்காணிக்கவும் தனியார் நிறுவனத்தின் தயவையே காவல் துறை நாட வேண்டியுள்ளது. அந்தப் பிரிவில் குவியும் வழக்குகளுக்கு ஈடான அலுவலர்களும் உபகரண வசதியும் இல்லை. கீழ்மட்ட காவலர்கள் முதல் சப்இன்ஸ்பெக்டர் வரை அவர்களின் திறமை வீணடிக்கப்படுகிறது. ஒரு புகாரைப் பெற்று சி.எஸ்.ஆர். ரசீது கொடுக்கக் கூட இன்ஸ்பெக்டரின் அனுமதிக்காகவும், எப்.ஜ.ஆர். போட எஸ்பியின் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இப்போதெல்லாம் காவலர் பதவிக்கே பட்டதாரிகள் அதிகம் வருகின்றனர். ஆனால் அவர்களின் திறமைக்கேற்ற பணிகள் கொடுக்கப்படுவதில்லை. முன்பெல்லாம் எட்டாம் வகுப்பு படித்த 'ஏட்டய்யா' புகார்களை விசாரித்து சமரசம் செய்து வைத்து பிரச்னைகள் பெரிதாகாமல் தடுத்துவிடுவார். இப்போதெல்லாம் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வருகிறவர்கள் இன்ஸ்பெக்டருக்காக காத்துக் கிடந்துவிட்டு, தாதாக்களிடமும் கூலிப் படையினரிடமும் போக ஆரம்பித்துவிட்டனர். 
இன்னொருபுறம், கடந்த 2017 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 138 காவல்துறையினர் உயிரிழந்தனர். இவர்களில் 15 பேர் தற்கொலை செய்துகொண்டனர். 20 பேர் மாரடைப்பாலும் 29 பேர் சாலை விபத்துகளிலும் உயிரிழந்தனர். புற்றுநோய், மஞ்சள் காமாலைக்கு 5 பேர் பலியாகினர். மீதமுள்ள 69 பேர் பல்வேறு காரணங்களினால் உயரிழந்தனர் என்று காவல்துறை பதிவேடுகள் மற்றும் பல்வேறு பத்திரிக்கை குறிப்புகளிருந்து தெரியவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதுகாப்பு பணிலிருந்தபோது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 14-ஆவது பட்டாலியன் காவலர் உட்பட 6 பேர் தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டுள்ளனர். 
அண்மையில் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய காவலர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதி உள்ள இடத்தில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரே வாரத்தில் காவல்துறையை சார்ந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அண்மையில் திருச்சி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் சென்றபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் அதிகாரி தடுத்து நிறுத்தி நிற்காததால் துரத்திச் சென்று வாகனத்தை காலால் எட்டி உதைத்தார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த அந்த கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து உயிரிழந்த கோர சம்பவம் காவல்துறையினர் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் கூட காவல்துறையினரின் தாக்குப் பிடிக்க முடியாத பணிச்சுமையின் ஒரு வடிவமாகவே பார்க்க முடிகிறது. பணிச்சுமையில் ஏற்படும் மன அழுத்தமே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். 
உயரதிகாரிகள் கீழ்நிலை காவலர்களை சொந்தப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்குத் தொடர்ந்து நிர்பந்திக்கப்படுவதும், தங்களுடைய உத்தரவுக்குப் பணியாத கீழ்நிலை அதிகாரிகளை குறிவைத்துப் பழிவாங்குவதும் காவல்துறையினரிடம் மனஅழுத்தத்தை கூடுதலாக்குகிறது. இடைவேளையின்றி நீண்டநேரம் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருப்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. பல பேர் குடும்பத்தினரை பிரிந்து வேறு ஊரில் வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக காவல்துறையினர் அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உயரதிகாரிகளின் நிர்பந்தத்தாலும் சிலர் தவறான முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர். 
காவல்துறையினரின் பணிநேரம் ஒழுங்கற்றதாக இருப்பதால் அவர்களால் சரியான நேரத்திற்கு உணவு அருந்த முடிவதில்லை. பாதுகாப்பு என்ற பெயரில் பல நாட்கள் வெளியூரில் தங்க வைக்கப்படும்போது குடிநீர் கூட சில நேரங்களில் கிடைப்பதில்லை. உணவுப் பழக்கத்தில் மாற்றம் எற்பட்டு நோய்களில் சிக்கி இளம் வயதிலேயே காவல்துறையினர் பலர் உயிரிழந்து வருகின்றனர். 
காவல்துறையினரின் பணிநேரத்தை வரையறுத்து செயல்படுத்த வேண்டும். காவலர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். காவல்துறையில் காலியாக உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங், பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு ஊழியர்கள் போல் காவல்துறையினருக்கும் 8 மணி நேரம் வேலை, ஊதிய முரண்பாட்டைக் களைதல், 7 ஆண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு, அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், அவர்களுக்கான படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். அப்போதுதான் காவல்துறையில் தொடரும் குறைபாடுகளை களைய முடியும். காவல்துறையினரின் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த முடியும். தற்போதைய தேவை, காவலரின் நல்வாழ்வை உறுதி செய்யும் பாதுகாப்பு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com