மாணவர்களுக்கு அரசியல் அறிவு மட்டுமே தேவை!

காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட இயக்கத்தின்போது அவர் அதில் மாணவர்களின் பங்கேற்புக்கு அறைகூவல் விடுத்து அதைச் சாதிக்கவும் செய்தார் என்பதன் அடிப்படையில்,

காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட இயக்கத்தின்போது அவர் அதில் மாணவர்களின் பங்கேற்புக்கு அறைகூவல் விடுத்து அதைச் சாதிக்கவும் செய்தார் என்பதன் அடிப்படையில், இன்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதையே கூறிக் கொண்டிருக்கின்றனர். காந்தியடிகள் கூறிய மற்றவற்றையெல்லாம் அறவே புறக்கணித்துவிட்டுத் தங்கள் கட்சிகளுக்கு வலுச் சேர்க்கக் கூடிய இதை மட்டும் இவர்கள் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டுள்ளார்கள்! 
விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காந்தியடிகள் மத உணர்வை வலியுறுத்தினார் என்கிற 'குற்றச்சாட்டு' கடவுள் நம்பிக்கையும் மதப் பற்றும் இல்லாதவரிடையே நிலவிவந்துள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது மகாத்மாவைப் பொருத்தமட்டில் நீதி, நேர்மை, அறம் சார்ந்த சிந்தனை, மனச்சாட்சியின் குரல் ஆகியவைதான். இதனை ஆன்மிகம் என்றும் கூறலாம். மதம் என்பதைச் சரியான அணுகுமுறையுடன் நெருங்கி அதைப் புரிந்துகொள்ளாதவர்களே காந்தியின் மதப் பற்றைக் குறை கூறுபவர்கள்.
இந்தப் புரிதலின்மை ஒரு புறமிருக்க, இன்றைக்கு நிலவும் சூழலில் மாணவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து அவற்றின் போராட்டங்களிலும் நேரடியாக ஈடுபட்டால், அவர்களது கல்விக்குக் குந்தகம் ஏற்படும் என்பதோடு, கல்விக்கூடங்களில் பல்வேறு பிரச்னைகளும் அதன் விளைவாய்த் தலைதூக்கும். ஏற்கெனவே, கிட்டத்தட்ட அனைத்துக் கல்விக்கூடங்களிலும் புகுந்துள்ள கட்சிகளை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டியதே மக்களின்பால் அக்கறை இருந்தால் அரசு செய்ய வேண்டிய வேலையாகும். 
இவற்றால் ஏற்கெனவே மாணவர்கள் மிக இள வயதிலேயே கட்சிவாரியாய்ப் பிளவுபட்டுள்ளனர். இதனை நாம் இன்று பல்வேறு கல்விக்கூடங்களில் பார்த்து வருகிறோம். கல்வி பயிலும் மாணவர்களின் தந்தையரோ, நெருங்கிய உறவினரோ, காப்பாளர்களோ கட்சித் தலைவர்களாக இருப்பின், தங்கள் செல்வாக்கால் கல்விக்கூடங்களிலும் தங்களின் கட்சிகளைப் புகுத்தி விடுகிறார்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்று இக்கட்சிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டாத மாணவர்களையும் இந்த நிலை பல்வேறு வகைகளில் பாதித்துவிடுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி, கல்விக்கூட நிர்வாகிகளும் பல்வேறு பிரச்னைகளை இதனால் சந்திக்க நேர்கிறது. 
மாணவர்களை அரசியலில் பங்கேற்க காந்தியடிகள் அழைத்ததை மட்டும் தங்களுக்குச் சாதகமாய்ச் சுட்டிக்காட்டும் சில கட்சித் தலைவர்கள், அன்றைய அரசியல் தலைவர்களின் தேசப்பற்று மிகுந்த தரத்தையும், இன்றுள்ள தலைவர்களின் தரமின்மையையும் ஒப்பிடாமல், காந்தியடிகளின் ஒரு செயற்பாட்டை மட்டுமே தங்களுக்குச் சாதகப்படுத்தி வருவது வெட்கக் கேடானதாகும். 
அதே போது, மாணவர்களிலும் கணிசமான எண்ணிக்கையினர் இன்று வாக்குரிமை பெற்றுள்ளதால், பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றிய அடிப்படை அறிவு அவர்களுக்கு இருந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்வேறு கட்சித் தலைவர்களுடைய, சட்ட மன்றத்தில் உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ள கட்சியினருடைய நடவடிக்கைகளை உற்று கவனித்து உள்வாங்கிக் கொண்டு, அதன் விளைவான மதிப்பீட்டின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டிய பொறுப்பு பெற்றவர்களாக இவர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே அரசியல் நிகழ்வுகளை கவனித்து, அவை பற்றிய அறிவை இவர்கள் வளர்த்துக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் தங்கள் கல்விக்குக் குந்தகம் விளையும் வண்ணம் அரசியல் கட்சிகளின் மாயவலைக்குள் அவர்கள் நேரடியாய்ச் சிக்கிக் கொள்ளக் கூடாது. நிற்க.
அரசியலில் புகுந்து ஆட்சி செய்வதன் மூலம் மட்டுமே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று சிலர் நினைப்பதும் விந்தையானது. மக்களுக்கு சேவை செய்ய நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன என்பதும் இவர்களுக்குத் தெரியாததன்று. இது நன்றாகவே தெரிந்தாலும், சில நல்லவர்கள் மக்களின் வற்புறுத்தலால் தாங்கள் விரும்பாத நிலையிலும் அரசியலில் குதிக்க நேர்கிறது. வேறு சிலர் எம்.ஜி.ஆர். போல் தாங்களும் பேசப்பட வேண்டும் என்னும் புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அரசியலில் சுய விருப்பத்தோடு குதிக்கிறார்கள்.
இன்று எல்லாரும் காமராஜ் ஆட்சி, காமராஜ் ஆட்சி என்று பெருந்தலைவரின் பெயரை உச்சரித்துப் புலம்பி வருகிறார்கள். ஆனால், காமராஜ் அவர்கள் சாதித்தை இவர்களால், இன்றைய சூழ்நிலையில் சாதிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. காமராஜ் அவர்களின் அந்த நாளைய அமைச்சர்களைப் போலவா இன்றைய அமைச்சர்கள் உள்ளார்கள்? அவருக்கு வாய்த்தவர் போன்ற நேர்மையான அமைச்சர்கள் இனி வரப்போகும் முதலமைச்சருக்குக் கிடைப்பார்களா! ஒருபோதும் இது நடக்கப் போவதில்லை.
ஒரு குழந்தையை மழலை வகுப்பில் சேர்ப்பதற்குக் கூட அதன் பெற்றோர் இரண்டு லட்சம் நன்கொடை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தத் தொகைக்கு ரசீதும் தரப்படுவதில்லை. ஒரு தனி ஏட்டில் மட்டும் குறித்துக்கொள்ளுகிறார்கள். மாணவர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், இத்தொகையில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு மீதியைத்தான் தருகிறார்கள். சில பள்ளிகள் முழுத் தொகைக்கும் 'பெப்பே'தான் காட்டுகின்றன. எனவே இப்படிப் பொதுமக்களை ஏமாற்றாத கல்விக்கூடங்களை இவர்கள் தொடங்கலாமே! 
இதே போல், மருத்துவமனைகளையும் இவர்கள் தொடங்கலாம். மருத்துவம் வணிகமாகியிருப்பதை விடுத்து, ஏழை மக்களுக்கு உதவி புரியும் நோக்கில் நல்ல முறையில் அவற்றைச் செயல்பட வைக்கலாம். இதையெல்லாம் காட்டிலும் பெரிய சேவை என்ன இருக்க முடியும்? இவை போன்ற இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளனவே!
தப்பான வழிகளில் செயல்பட்டு வரும் மக்களைத் திருத்தி ஜப்பானியர்களைப் போல் பொறுப்பானவர்களாக அவர்களை மாற்ற வேண்டியதுதான் இன்றைய மிகத் தேவையான சமுதாயத் தொண்டு.
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பது முதுமொழி. மக்கள் எவ்வழி, மன்னர் (ஆள்வோர்) அவ்வழி என்பது புதுமொழி. நம் மக்களிலும் முக்கால்வாசிப் பேர் சட்டத்தை மதிக்காதவர்களாகவும், தன்னலவாதிகளாகவும் இருப்பதாலுமே அரசியல்வாதிகள் கொழிக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. சாலை விதிகளைக் கூடப் பின்பற்ற நம்மில் பலர் தயாராக இல்லையே! நடைபாதைகளில் பலர் சைக்கிள், ஸ்கூட்டர், பைக் ஓட்டுகிறார்கள். ஒருவழிப் பாதையாக நடைபாதையைப் பயன் படுத்திக்கொண்டிருந்தவர்கள் இப்போது இருவழிப் பாதையாக அதை உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். முன்னாலும் பின்னாலும் வண்டிகள் வேகத்துடன் துரத்தினால் மக்கள் எப்படி அச்சமின்றி நடப்பார்கள்? நடைபாதையாவது சமதளமாய் இருக்கிறதா? குண்டும் குழியுமாகப் போடப்பட்டுள்ள இதில் நடப்பதே ஒரு சர்க்கஸ் போன்றதாயிற்றே? மக்கள் இதை கவனித்து நடப்பார்களா, இல்லாவிடில் முன்னாலும் பின்னாலும் துரத்தும் வண்டிகளைக் கவனித்தா? பாதசாரிகள் ஆட்சேபித்துக் கத்தினாலோ, திட்டினாலோ கூட மனசாட்சியோ, வெட்கமோ இல்லாத இவர்கள் காதில் வாங்காமல், காரியமே குறியாகத் துளியும் உறுத்தலே இன்றிக் கடந்து போகிறார்கள்! 
கியூவில் நிற்கக் கூட நம் மக்கள் தயாராக இல்லை. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் வரிசையில் நிற்க வேண்டியவர்கள் முண்டியடித்துக் கொண்டு பெண்கள் என்றும் பாராமல் தொட்டுத் தள்ளிவிட்டு வரிசையின் முன்னால் போய் நிற்கிற அவலத்தை என்ன சொல்லுவது! 
'என் காதலை நீ ஏற்றே ஆகவேண்டும்' என்கிற ஆணவத்துடன் பெண்களைத் துரத்தும் இளைஞர் திலகங்களையும், ஏற்காவிடில் அப் பெண்களைக் கொல்லவோ, எரிஅமிலம் வீசி அவலட்சணப்படுத்தவோ முனையும் ஒருதலைக் காமுகர்களைத் திருத்த வேண்டாமா? கோயில்களில் ஏழைகளுக்காக நடத்தப்படும் அன்னதானக் கூடத்தில் போய் உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு, கைப்பெட்டியுடன் அலுவலகத்துக்குச் செல்லும் ஐந்திலக்கச் சம்பளம் வாங்கும் படித்த பக்தர்களை' (அல்லது பதர்களை) யார் திருத்துவது? 
உணவகங்களில் உட்கார்ந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு, ஓட்டலுக்குப் பணம் கொடுக்காமல் அதையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டுப் போகும் வெட்கங்கெட்ட பிச்சைக்காரக் காவல்துறையினர் திருடர்களிலும் மோசமானவர்கள் அன்றோ? இவர்களையெல்லாம் திருத்துவதுதான் இன்றைய, தலையாய சமுதாயப் பணியாகும்.
இன்னும் எத்தனையோ 'செய்யலாம்'களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்போது கட்சி தொடங்கும் இரு நடிகர்களில் ஒருவர் மட்டுமே அரசியல் கட்சியைத் தொடங்கவும், மற்றவர் மேற்குறிப்பிட்ட சமுதாயப் பணிகளில் ஈடுபடவும் முன்வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com