வேலைவாய்ப்புக்குத் திறவுகோல்

இந்தியாவின் உடனடித் தேவை வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியே. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வெளிவரும் இளைஞர்களும், பாலிடெக்னிக் போன்ற கல்விக்கூடங்களில்

இந்தியாவின் உடனடித் தேவை வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியே. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வெளிவரும் இளைஞர்களும், பாலிடெக்னிக் போன்ற கல்விக்கூடங்களில் தொழில் பயிற்சி பெற்று வெளிவரும் மாணவர்களும் வேலைக்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருக்கிறது என்பது உண்மைதான். அத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் எவ்வளவோ மேல். 2014-15இல் நமது மொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 7.5%; 2015-16இல் 8%; 2016-17இல் 7.1%; 2017-18இல் 6.5%. வரும் ஆண்டில், அதாவது 2018-19இல் ஜி.டி.பி. அதிகரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் புதிய பட்ஜெட்டுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பணவீக்கம் கட்டுக்குள்- ரிசர்வ் வங்கியின் இலக்கான 5 சதவீதத்திற்குள் இருக்கிறது. உலக அளவில் பெட்ரோலிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்வதால், விலைவாசியும் பணவீக்கமும் உயர்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
இந்தப் பொருளாதார நிலைமையை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வேலைவாய்ப்புகள் ஓரளவேனும் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை என்பதே கவலையளிக்கும் விஷயம்.
பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புதிய வேலைகளை உருவாக்க முடியும். ஜிடிபியில் ஆலைகளின் பங்கு 17% மட்டுமே. சீனாவில் அதன் பங்கு 35%. அதாவது நம்மைவிட இரு மடங்கு.
சமீப காலங்களில் டிஜிட்டல், கணினி, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை வேகமாக வளர்ந்து வருவது கண்கூடு. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதே÷நேரம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதவளத்தின் தேவை குறைகிறது. மனிதர்களின் தேவையைவிட இயந்திரங்களின் தேவை அதிகரிக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பொருளாதார ஆய்வறிக்கையின்படி ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் முதல் ஒரு கோடியே 50 லட்சம் வரையிலானவர்கள் வேலை தேடி களம் இறங்குகிறார்கள். 2017ஆம் ஆண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும், பல லட்சம் அளவில் வேலை இழப்பு நேர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச தொழிலாளர் நல நிறுவனம் ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 89 லட்சமாக இருக்கும் என்று தெரிகிறது. அது தவிர, வேலையில் இருப்பவர்களில் 77% பேர் தற்காலிக வேலை, அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலையில் இருப்பார்கள் என்று கூறுகிறது. இது கவலைக்குரிய செய்தி.
உலகிலேயே மிகப்பெரிய சேவை அமைப்பாகவும், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் திகழும் இந்திய ரயில்வே அமைப்பு அண்மையில் மேற்கொண்டுள்ள முடிவு கவலை அளிப்பதாக உள்ளது. ரயில்வே துறையில் லிமூத்த பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தால், அவற்றில் ரயில்வே துறையிலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்களை நியமிக்க வேண்டும். ஒருவேளை பொருத்தமான ஓய்வுபெற்ற பொறியாளர்கள் இல்லாவிட்டால், அந்த காலிஇடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளியிலிருந்து பொறியாளர்களை நியமிக்கலாம். மேற்கூறிய நியமனங்கள் ஓராண்டுக்கு மட்டுமே. இந்த திட்டம் இரண்டு ஆண்டு காலத்துக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது ஒன்றரை லட்சம் காலி இடங்கள் உள்ளன. அவற்றில் 75,000 காலியிடங்கள் மேற்கூறிய முறையில் நிரப்பப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலையில், ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல், ஓராண்டு காலத்துக்கு, ஓய்வூதியதாரர்களையும், ஒப்பந்தப் பணியாளர்களையும் நியமிப்பது எந்த விதத்தில் நியாயம்?
தேசப்பிதா காந்தியடிகள், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தனக்கே உரிய நெடுநோக்குப் பார்வையில், கதர் (காதி) ஆடை திட்டத்தை அறிமுகம் செய்தார். அதற்கும் வந்துவிட்டது ஆபத்து! காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பாரம்பரிய வடிவமைப்பிலான ராட்டையை ஒதுக்கிவிட்டு நவீன ராட்டையை அறிமுகம் செய்ததன் விளைவாக, சமீபத்தில் ஏழு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலிலம் உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காக காத்திருக்கும் வேளையில், இருக்கும் வேலைவாய்ப்பையும் கைநழுவவிடுவது ஓர் எதிர்மறையான நிகழ்வு. இதனால் பாதிக்கப்படுபவர்களின் மனஉளைச்சல் மற்றும் இன்னல்கள் சாதாரணமானவை அல்ல. நவீனமயமாக்கல் மூலம் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறைவது புரிந்துகொள்ளக்கூடியது. வேலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் மாற்று வேலை வழங்க அரசு முயலவேண்டும்.
தொழிற்கூடங்கள் தவிர, விவசாயம் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவது மத்திய அரசின் இலக்கு. இந்த இலக்கு வசப்பட வேண்டுமானால், விவசாய வளர்ச்சி 14%ஆக உயரவேண்டும். ஆனால் தற்சமயம் வளர்ச்சி விகிதம் 2% முதல் 4% மட்டுமே இருக்கிறது. விவசாய வளர்ச்சி 14 சதவீதமாக வளருவதற்கு, வரும் ஆண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு உரிய அளவில் உயர்த்தப்பட வேண்டும்.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் 738 கடைநிலை ஊழியர்களுக்கான வேலைக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.இவர்களில் பல்லாயிரம் பேர் உயர்படிப்பு பெற்றவர்கள்.
அந்த மாநலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2015இல் 15.6 லட்சம். 2017இல் அந்த எண்ணிக்கை 23.7 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலைதான்.
அதேபோல் தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புணே போன்ற பெரிய நகரங்களில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் 1 முதல் 8% அளவுக்கு மட்டுமே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று 'மான்ஸ்டர் எம்ப்ளாய்மெண்ட் இண்டெக்ஸ்' தெரிவிக்கிறது. பெரிய நகரங்களுக்கிடையே மும்பை மட்டுமே 18% வேலைவாய்பை அளித்துள்ளது.
மனநிறைவு தரக்கூடிய விஷயம் என்னவெனில், இரண்டாம் நிலை நகரங்களான சண்டீகர், கொச்சி, வடோதரா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்கள் வேலைவாய்ப்பில் 25% வளர்ச்சி எட்டியுள்ளன. இதற்கு காரணம் நுகர்பொருள்கள் உற்பத்தி, சில்லறை வியாபாரம் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போன்றவை) மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுகர்பொருள்களின் வியாபாரம் ஆகியவை என்கிறது அந்த ஆய்வறிக்கை.
இன்னுமொரு நல்ல செய்தி என்னவென்றால், அரசு சார்ந்த தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, வரும் ஜுலை-செப்டம்பர் மாதங்களில் ஆலை உற்பத்திதுறையில் 89,000 புதிய வேலைகளும், கல்வித்துறையில் 21,000 வேலைகளும், போக்குவரத்துத் துறையில் 20,000 வேலைகளும், சுகாதாரத்துறையில் 11,000 வேலைகளும், ஹோட்டல் துறையில் 2000 வேலைகளும், தகவல் தொழில்நுட்பத்துறையில் 1000 வேலைகளும் புதிதாக உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு திறவுகோல் புதிய முதலீடுகளே என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு புதிய முதலீடுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திரட்டப்படுகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு ஆலைகள் விரிவாக்கமும் புதிய தொழிற்சாலைகளும் உருவாகும். அதன் பயனாக வேலைவாய்ப்புகள் பெருகும்.
தமிழ்நாட்டின் நிலை என்ன? 2017ஆம் ஆண்டில், இந்தியா முழுவதுமாக ரூ.3.95 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு திரட்டிய முதலீடு வெறும் ரூ.3,131 கோடி மட்டுமே. அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவு. சரியாகச் சொல்வதென்றால் 0.8 சதவீதம் மட்டுமே. அரசியல் ஸ்திரமின்மை இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
2015ஆம் ஆண்டிலிருந்தே, தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து வந்துள்ளன. கர்நாடகத்துக்கு 38%; குஜராத் 20%; மகாராஷ்டிரம் 12.2%; உத்தரப்பிரதேசம் 3%. ஆனால் தமிழ்யநாடு ஒரு சதவீதத்துக்கும் குறைவு. இந்த தகவல் மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்கத்தால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு இந்த நிலையிலிருந்து உடனடியாக மீள வேண்டும். அதற்குத் தேவை வெளிப்படையான தொழில் வளர்ச்சிக் கொள்கை; நம்பகமான நிலம் கையகப்படுத்தும் கொள்கை மற்றும் நடைமுறைகள்; தொழில்முனைவோருக்கு நியாயமான வரி மற்றும் கட்டணச் சலுகை, அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்பாடு, உயர்மட்டத்தில் துரிதமான மற்றும் வெளிப்படையான அரசு செயல்பாடுகள் ஆகியவையே.
நாட்டில் 90% தொழிலாளர்கள் அமைப்பு சாரா வேலைகளைச் செய்து வருகிறார்கள். இவர்களை மத்திய அரசு படிப்படியாக அமைப்பு ரீதியிலான தொழில் வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும். அதேபோல் நிரந்தரப் பணி இடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பணிகளில் ஈடுபடுவதற்கு முன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் முறை வரவேற்கத்தக்க ஏற்பாடு. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உத்திகளை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மொத்தத்தில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அதிகபட்ச முனைப்பு காட்டிட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com