காட்டுத் தீ விபத்து உணர்த்தும் பாடம்

வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பாவிக்காமல், யார் வேண்டுமானாலும் வனங்களுக்குள் செல்லலாம் என்ற நிலைப்பாட்டின் நேரிடைப் பலன்தான் அண்மையில் ஏற்பட்ட குரங்கணி சோக விபத்து.

வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பாவிக்காமல், யார் வேண்டுமானாலும் வனங்களுக்குள் செல்லலாம் என்ற நிலைப்பாட்டின் நேரிடைப் பலன்தான் அண்மையில் ஏற்பட்ட குரங்கணி சோக விபத்து. வனங்களுக்குள் செல்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்- வனத்துறையினர், வனங்களின் உள்ளே வசிப்பவர்கள், வெளியிலிருந்து வனங்களுக்குள் செல்பவர்கள்.
 இதில் வனத்துறையினர், வனங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைசார்ந்த வேலைகளுக்காக வனங்களுக்குள் செல்வது மிக அவசியமான ஒன்று. இவர்கள் காடுகளுக்குள் மிருகங்களின் நடமாட்டம், அவற்றின் பழக்கவழக்கங்கள் பற்றி நன்று அறிந்திருப்பார்கள். ஒரு இக்கட்டு என்று வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் காடுகளுக்குள் செல்லும்போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
 அடுத்த வகை, வனங்களின் உள்ளேயே பிறந்து வளர்ந்து வசித்து வரும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர், வனங்களைத் தங்கள் உள்ளங்கை ரேகைகளைப் போல அறிந்திருப்பர். உட்பாதைகள், விலங்குகளின் நடமாட்டம், எல்லாம் இவர்களுக்கு அத்துப்படி. ஒவ்வொரு யானைக் கூட்டத்தையம், அதிலுள்ள ஒவ்வொரு யானையையும் தனித்தனியாகக் கூட இவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலும். இவர்களில் பலரை வனத்துறையே வேட்டைத்தடுப்புக் காவலர்களாகப் பணியமர்த்தி, வனங்களின் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது.
 இவர்களுடைய உள்ளுணர்ச்சி, காடுகளைப் பற்றிய புரிதல் ஆகியவை இவர்களுக்குப் பாதுகாப்பு தருகின்றன. எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளவும், தப்பிக்கவும் தேவையான பலமும் சூழலறிவும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு காடுகளால் ஏற்படும் ஆபத்தும் விபத்தும் மிக மிகக் குறைவே!
 மூன்றாவது வகையைச் சேர்ந்த, வெளியிலிருந்து வனங்களுக்குள் செல்பவர்களால்தான் மிக அதிக அளவில் விபத்துகள் நேரிடுகின்றன. மனிதர்களுக்கும் விபத்துகள் ஏற்படுகின்றன, விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுகின்றன. விபத்துக்கள் காடுகளுக்கும் காட்டிலுள்ள விலங்குகளுக்கும் எனும்போது அதிக அளவில் வெளியில் தெரிவதுமில்லை, பேசப்படுவதுமில்லை. அதுவே விபத்து மனிதர்களுக்கு எனும்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு அரசின் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது விலங்குகளின் உயிரிழப்பு ஒரு விஷயமாகவே பொருட்படுத்தப்படுவதில்லை, மனித உயிரிழப்பு என்று வரும்போதுதான் எல்லா மட்டங்களிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது!
 அதிலும், மிருகங்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டோ, விரைவாகச் செல்லும் வண்டிகளினால் கொல்லப்பட்டாலோ, வெறும் அபராதமோ குறைந்தபட்ச சிறை தண்டனையோ தண்டனை! ஆனால் மனிதர்கள் மிருகங்களால் கொல்லப்பட்டால், அது என்ன காரணத்துக்காக என்றெல்லாம் யோசிக்காமல், மிருகங்கள் கடும் குற்றவாளிகளாககக் கருதப்பட்டு மரண தண்டனையே பெறுகின்றன, அதாவது சுட்டுத் கொல்லப்படுகின்றன!
 வெளியிலிருந்து வனங்களுக்குள் செல்பவர்களையும் மூன்று வகையாகப் பார்க்கலாம்-
 வனத்துறையின் முறையான அனுமதி பெற்று, அவர்களின் துணையோடு, கணக்கெடுப்பு, புள்ளிவிவரம் சேகரித்தல் போன்ற வனம் சார்ந்த பணிகளுக்குச் செல்லும் அரசுசாரா அமைப்புகள். இவர்கள் வனத்துறைக்கு உதவி செய்கின்றனரேயன்றி உபத்திரவம் செய்வதில்லை. தக்க துணையோடு செல்வதாலும், வனங்களுக்குள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாலும், கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்களை மதித்து நடந்து கொள்வதாலும், இவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை.
 இரண்டாவது, காலங்காலமாக வனங்களும் வழிபாட்டு இடங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டே இருந்து வருகின்றன. எல்லா வனக்கோட்டங்களிலும் அடர்ந்த காட்டுக்குள் ஏதாவது ஒரு கடவுள், அவருக்குச் சிறிய கோயில் இருக்கிறது. பெüர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில், பக்தர்கள் பகல், இரவு இருநேரமும் நடைப்பயணமாகக் கடவுளை வழிபட்டுப் பொங்கலிடுவது வழக்கமாக இருந்துவருகிறது. நவநாகரிக மலையேற்றம் மாதிரியில்லாமல் இந்த எளிய மக்களின் மலையேற்றம் சில மதம்சார்ந்த நம்பிக்கைகளோடு அந்தக் காலகட்டத்தில் காட்டின் அமைதிக்கும் விலங்குகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் நடந்துவந்திருக்கிறது. பிளாஸ்டிக்கும் செல்ஃபோனும் மலிந்துவிட்ட இக்காலத்தில் இந்த பக்திப் பயணமும் பாதை மாறிவிட்டது! வெள்ளிங்கிரி, ஏழுமலையான் கோயில், சபரிமலை, முத்திக்குளம், தெங்குமரஹாடா- இங்கெல்லாம் பக்தர்கள் மலையேற்றம் முடிந்து சென்ற பின், அவர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில், துணிகள், செருப்புகள் என்று "டன்'கணக்கில் அள்ளி வருகின்ற வேலையும் வனத்துறை தலையிலேயே விழுகிறது. அரசுசாரா அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் கூட இந்தச் சுத்தம் செய்யும் பணியைச் செய்கின்றனர். இந்தப் பக்தர்கள் சமைப்பதற்கு மூட்டும் தீ பல நேரங்களில் காட்டுத்தீ உருவாகக் காரணமாகி விடுகிறது. இவர்கள் பெருங்கூட்டமாகச் செல்வதால் விலங்குகள் இவர்களைக் கண்டு ஒதுங்கிவிடுகின்றன. அதனால் இவர்களுக்கு விபத்து நேருவதில்லை. இவர்களால் காடுகளுக்குத்தான் ஆபத்து! வனம் மற்றும் விலங்குகளின் வாழ்க்கைச் சூழலைப் பெரிதும் பாதிக்கிறது இவர்கள் ஏற்படுத்தும் சப்தமும் விட்டுச் செல்லும் கழிவுகளும்!
 மூன்றாவது வகையாக, வனத்துறையின் முறையான அனுமதி பெறாமல் உள்ளே செல்பவர்களுக்கு மட்டுமே, இப்போது குரங்கணியில் நேர்ந்தது போல் விபத்து நேரிடுகிறது. இதற்குக் காரணம் காட்டைப்பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல், வனத்துறை ஊழியர்களின் துணையும் இல்லாமல், காட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் அவர்கள் வனங்களுக்குள் செல்வதுதான்.
 புற்றீசல் போல் பல "மலையேற்றப் பயிற்சி மையங்கள்' தோன்றி உள்ளன. செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்திக் கொண்டு மலையேற்றத்திற்கு ஆள் சேர்க்கின்றன.
 இம்மையங்கள் உரிய அனுமதி பெற்றுத்தான் இயங்குகின்றனவா என்பதையெல்லாம் விசாரிக்காமல் பலரும் இவர்களுடன் மலையேற்றத்துக்குச் செல்கின்றார்கள். இப்படிச் செல்பவர்கள் எல்லாம் காடுகளை நேசிப்பவர்களோ, விலங்குகளை மதிப்பவர்களோ அல்ல. பெரும்பாலும் விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க விழைபவர்கள் மட்டுமே. காட்டில் நடந்துகொள்ளும் முறை பற்றி ஏதும் தெரியாதவர்கள். பெங்களூரில் சில கணினி மென் பொறியாளர்கள் காட்டில் வழிதவறித் தவித்ததும், பிறகு வனத்துறையினரால் மீட்கப்பட்டதும், வெள்ளிங்கிரி மலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தனியே அனுமதியின்றிச் சென்று செந்நாய்க் கூட்டத்தால் துரத்தப்பட்டுப் பின்னர் வனத்துறையினரால் காப்பாற்றப்பட்டதும் நாம் அறிந்த செய்திகளே!
 இதுதவிர வனங்களுக்குள் காளான்போல் முளைத்திருக்கும் அனுமதி பெறாத ஓய்வு விடுதிகள். இரவில் கூட சுற்றுலாப் பயணிகளைக் காடுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். இத்தகைய விடுதிகளையெல்லாம் இழுத்து மூடவேண்டும்.
 கானுயிர்ப் புகைப்படக் கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் காட்டுக்குள் நுழைந்து விலங்குகளைத் துரத்தோ துரத்தென்று துரத்தி, புகைப்படம் எடுத்துக் கண்காட்சி நடத்திப் பணமும் பேரும் சேர்க்கிறார்கள்.
 இன்னும் வருந்தத்தக்கது என்னவென்றால், கானுயிர் ஆர்வலர்கள் பலர் வனங்களுக்குள் மாணவர்களையும், பிறரையும் அழைத்துக்கொண்டு செல்வதை ஒரு வியாபாரமாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள்! வனங்களில் மலையேற்றம் செல்லும் ஒரு குழுவில் இருபது பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்று, பேனர் பிடித்துக் கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். வனத்துறையும் இந்த விதிமீறலைக் கண்டுகொள்வதே இல்லை.
 இவற்றையெல்லாம் விடக் கொடுமையானது, அரசே காடுகளைத் திறந்துவிட்டு, "வாருங்கள், மனிதர்களே! வாருங்கள், உல்லாசமாய் இருங்கள்'"என்று அழைப்பு விடுப்பதே. "சூழல் சுற்றுலா' என்ற பெயரில் காடுகளைக் காலி செய்தே தீருவது என்று அரசே கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்கிறது.
 தேக்கடி, பரளிக்காடு, ஒகனேக்கல், இங்கெல்லாம் சூழல் சுற்றுலா என்ற பெயரில் காடுகள் சின்னாபின்னமாக்கப்பட்டு வருகின்றன.
 கோவை வனக்கோட்டத்தில் காரமடை அருகே பரளிக்காடு வனப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் சூழல் சுற்றுலா ஆரம்பிக்கப்பட்டது. மலைவாழ் மக்களின் வருவாயைப் பெருக்க, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. சனி ஞாயிறுகளில் மட்டும் ஒரு நாளைக்கு 80 பயணிகளுக்கு மட்டும் அனுமதி என்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போது ஒரு நாளைக்கு 150 பயணிகள் என்று "அமோகமாக' நடைபெறுகிறது! அதாவது வனத்தின் "தாங்கும் சக்தியை'விட இருமடங்கு அதிகமான பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சமீபத்தில் சூழல் சுற்றுலா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதுவும் சனி ஞாயிறு மட்டும் என்று இருந்தது பிறகு டிசம்பர் மாதம் விடுமுறை நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மிகவும் பெரியது. இதில் பல பகுதிகள் மனிதர்கள் எளிதில் நுழைய முடியாத அடர்ந்த, சாலைவசதியற்ற, வனப்பகுதிகள். இங்குள்ள விலங்குகள் செழுமையாகவும் ஆரோக்கியமாகவும், பயமற்றும் இருக்கின்றன. இப்போது சுற்றுலாவுக்குத் திறந்துவிட்டபடியால் விலங்குகளின் வாழ்க்கை முறை மாறி அவை மிக்க மன அழுத்தத்துக்கு உள்ளாக நேரிடும். இதனால் மனிதர்- விலங்கு மோதல்கள் அதிகமாகும்.
 காடுகள் நமக்கு "அரண்'. கேளிக்கைக்கும் உல்லாசத்துக்கும் அங்கு இடமில்லை. ஒரு நாட்டின் படைத்தளங்களை எவ்வளவு இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் போற்றி வைத்திருக்கிறோமோ, அதேபோல் காடுகளையும் மிக பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அரசு முனைந்து, வனங்களில் வெளியார் நுழைவதை முற்றிலுமாகத் தடைசெய்ய வேண்டும். செய்யாவிடில் அடுத்த விபத்தை எதிர்பார்த்துத் தயாராய் காத்திருப்போம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com