போர் இல்லாத புதிய உலகம்

போர் என்னும் கொடிய வினை மனிதன் தோன்றிய காலந்தொட்டுத் தொடர்ந்து வருவதுதான். ஏனைய உயிர்களுக்கிடையே நிகழும் போர்கள் வயிற்றுப்பாட்டுக்கானவை.

போர் என்னும் கொடிய வினை மனிதன் தோன்றிய காலந்தொட்டுத் தொடர்ந்து வருவதுதான். ஏனைய உயிர்களுக்கிடையே நிகழும் போர்கள் வயிற்றுப்பாட்டுக்கானவை. அதற்காக அவை தாமே களத்தில் நின்று போராடும். ஆனால், மாந்தர் நிகழ்த்தும் போர்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை தனிமனித விருப்பு வெறுப்புகளால் இச்சைகளால் ஏற்படுபவை. தனக்காகப் பலரையும் பலிகொடுக்கும் தன்மையுடையவை.
 போர்க்களத்தில் எதிரிகளின் படைகளைத் தாக்கி அவற்றை எதிர்கொண்டு அவர்தம் தாக்குதல்களையும் ஏற்று வீரமரணம் அடைபவனையே நல்ல மகனாக ஏற்றுக் கொண்ட வீரத்தாய்மார்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். கொடிய கொலை செய்யும் போரையும் வீரப்பயிற்சியாக்கி நன்னடை என்று சுட்டி, அதற்கும் அறம் வகுத்தது தமிழ் மரபு.
 அறிவியல் கருவிகளின் துணையில்லாது, வாளும் வேலும் களத்திலே மோதிக் கொண்ட காலத்திலேயே போருக்கான அறங்கள் வகுக்கப்பட்டன. அவையும் பூக்களின் பெயராகிய திணைகளாக இலக்கியத்தில் இலக்கணமாக இடம்பெற்றுள்ளன.
 வெட்சி- ஒரு நாட்டின் ஆநிரைகளைக் கவர்கின்ற போர்; கரந்தை- அதனைத் தடுத்து ஆநிரைகளை மீட்பது; வஞ்சி- அடுத்த நாட்டின் மீது படையெடுத்துச் செல்வது; காஞ்சி - அப்படையை மறித்து எல்லையிலேயே தற்காத்துக் கொள்வது; நொச்சி- அரசன் தனது அரண்மனைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு தாக்குதலுக்குச் சரியான நேரத்தைக் கருதியிருப்பது; உழிஞை- அந்த அரண்மனையை முற்றுகையிடுவது.
 இவ்வகையான போர்முறைகளுக்கு மேலான மற்றொரு போர்முறை உண்டு. அதற்கு வாகை என்று பெயர். இருதிறத்து அரசர்களும் அவர்தம் படைகளும் குறிப்பிட்ட ஒருநாளில் பொதுவிடம் ஒன்றில் கூடி, இந்த நாளில் இந்த நேரத்தில் நாம் போரிடலாம் எனத் திட்டமிட்டுப் போர்செய்யும் முறையே வாகை ஆகும். இப்போர் முறையில் வென்றவரையே வாகை சூடினார் என்று உலகம் வாழ்த்தும்.
 ஒவ்வொரு போர்முறைக்கும் தனித்தனி அறங்கள் உண்டு. சான்றாக முற்றுகை இடப்படுவதற்கு முன்பாக, கால்நடைகள், பெண்டிர், நோய்பீடித்தோர் உள்ளிட்டோரைப் பட்டியலிட்டு அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு அறிவித்ததாக நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.
 ஒரு நாட்டிற்குரிய பாதுகாப்புக்கு உரியதாக விளங்கும் போரின் தேவையையும் படைகளின் வலிமையையும் மறுக்காத திருவள்ளுவர் படைச்செருக்கு அதிகாரத்தில் நுண்மையான ஒரு குறளைப் பதித்திருக்கிறார்.
 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
 வன்க ணதுவே படை (குறள்-764)
 போர்க்களத்தில் (யார்க்கும்) அழிவின்றி எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாமல் வலிமையுடன் அஞ்சாது எதிர்த்து நிற்பதுவே நல்ல படை எனவும் அத்தகைய படையினை உடையதுவே நல்ல அரசு என்றும் காட்டும் அவரது கருத்தின் மூலமாகப் போரில் வெற்றிதான் முக்கியமே தவிர, அழிவு நோக்கமல்ல என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 போர்க்குரிய முதற்காரணமாகிய பகையைத் தொலைத்துவிட்டாலே போரை ஒழித்தது போலத்தான். இதனை இராமனும் போர்க்களத்தில் ஆயுதமிழந்தவனாக எதிராளியாக நிற்கிற இராவணனைக் கொன்றுவிடாமல் அவனைப் பார்த்து, "இன்று போய் போர்க்கு நாளை வா' என்று நன்னயம் செய்து நின்றான்.
 போர்க்களத்தில் பெற்ற பெருவெற்றியைக் கொண்டாட வந்த அசோக சக்ரவர்த்தி, அதன் கொடுமையையும் அவலங்களையும் கண்டு வெட்கித் தன்னுடைய படைவீரர்களை அமைதித் தூதுவர்களாக மாற்றி உலகெங்கிலும் அமைதி நிலவுதற்குத் தூதனுப்பினான்.
 சுதந்திரத்தை வேண்டி ஆங்கிலேயரை எதிர்த்த மகாத்மா காந்தி போருக்குப் பதிலாக சத்திய வழியிலான புதிய போராட்டத்தை மேற்கொண்டார். இதனைக் கத்தியில்லாத, இரத்தமில்லாத யுத்தம் என்று நாமக்கல் கவிஞர் போற்றினார்.
 மகாகவி பாரதியாரோ, அவருக்குப் பஞ்சகம் பாடும்போதில், "பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்' என்று குறிப்பிட்டுப் போற்றினார். அவ்வழியே அவருடைய தாசனாகிய பாவேந்தர், "புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்' என்று அறைகூவல் விடுத்தார்.
 ஆயினும், இன்றும் இந்த நிமிடத்திலும் கூட உலகின் பல பகுதிகளில் தனி நபர்களும் குழுக்களும் அதிகாரத்துக்காக கட்டவிழ்த்துவிடும் போர்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் கொடுமைக்கு ஆளாகிச் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லைப் பிரச்னை தொடங்கி உள்நாட்டுப் பிரச்னைகள் வரையிலும் போருக்குரிய காரணங்கள் பலவாகச் சொல்லப்பட்டாலும் அதன் விளைவுகள் மானுட உயிர்கள் மீதான கொடூரம் என்ற ஒன்றைத் தவிர வேறில்லை.
 பத்தாண்டுகளுக்குள் நடந்திருக்கிற போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில். வீடிழந்தோர் அதனினும் பன்மடங்கு.
 மானுட வாழ்வை வளப்படுத்துவதாகவும் அதன் மேன்மைக்குரிய பணிகளே தனது இலட்சியம் எனவும் அடிப்படைகளைக் கொண்டு தோன்றிய அறிவியலும், தொழில்நுட்பமும் அழிவினுக்கே முதற்காரணமாகிப் போருக்குத் துணை நிற்கின்றன. அறிவியல் வளர்ந்தது; அறம் தாழ்ந்தது. அறத்துக்கன்றி அதிகாரத்துக்கு மோதல் மூள்கிறது.
 அறிவியலின் வளர்ச்சியில் கொக்கரிக்கிற மனித குலத்தினை இந்த அசுரத் தனம் மற்றொரு பக்கம் அதைவிடவும் பெரிதாக வளர்ந்து நின்று இடிபோன்ற நகைப்பொலி எழுப்பிக் கேலி செய்கிறது.
 இரண்டு பெரிய உலகப் போர்களையும் அதன் கொடிய அழிவுகளையும் கண்ட பின்னும் இன்னும் இந்த நாடுகள் போர்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இனிவரும் இளந்தலைமுறையாவது போரில்லாத புதிய உலகத்தில் வாழட்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com