அச்சமூட்டும் வாகனப் பொருளாதாரம்

இன்றைய நிலையில் நமது நாட்டின் மனிதவளத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருவது வாகன விபத்துகள்தான்.

இன்றைய நிலையில் நமது நாட்டின் மனிதவளத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருவது வாகன விபத்துகள்தான். வாகன விபத்துகளை இயல்பானவை, தற்செயலானவை, தவிர்க்கமுடியாதவை என்கிற மூன்று கோணங்களில் தவறாகப் புரிந்து கொண்டு கடந்து போவதற்கு நமது சமூகம் பழகிவிட்டது. இது மிகத்துயரமானதும், சமூக அறிவியலுக்குப் புறம்பானதும் ஆகும்.
தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் சராசரியாக ஆண்டுக்கு 1,50,000, தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 17,000 எனும் கணக்கில் மனித உயிர்களை சாலை விபத்துகளில் நாம் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வாகன விபத்துகளில் உயிரையும், உடலுறுப்புகளையும் இழப்பவர்களில் 60 விழுக்காட்டினர் நமது சமூகத்தின் மனிதவளப் பிரிவினராகவே உள்ளனர். அதிலும் பெரும்பாலோர், குடும்பங்களின் பொருளாதாரச் சக்திகளாக இருப்பவர்களே. வாகனங்களின் தரமும், அவை பயணிக்கின்ற சாலைகளின் தரமும், அவற்றைச் செலுத்துவோரின் தரமும், வாகனப் போக்குவரத்து அலுவலர்களின் தரமும் எந்த அமைப்பினராலும் முறையாக சோதிக்கப்படுவதில்லை.
வாகனப் பொருளாதாரம் என்கிற ஒரு புதிய உத்தி இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தனது தேவைக்காக ஒருவர் வாங்குகின்ற வாகனம் மற்றவர்களுக்கான காமதேனுவாக மாறி காசு கொடுக்கிறது. வாகனம் வாங்கப் பணம் செலுத்தத் தொடங்கும் வாகன உரிமையாளர் ஒருவர், அதற்குப்பிறகு அதைப் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு முறையும் ஏதோவொரு வகையில் எவருக்கேனும் பணம் கொடுத்தாக வேண்டும். எரிபொருள், வழி மறிப்பின் பொருட்டான கையூட்டு, வழிமறிப்பின் போதான தண்டத்தொகை, சுங்கச்சாவடிக் கட்டணம், சாலை வரி, ஆண்டுதோறும் புதுப்பித்தாக வேண்டிய காப்பீட்டுத்தொகை, விபத்துகளின் பொருட்டான வழக்குச் செலவுகள், விபத்துகளின் பொருட்டான கட்டப்பஞ்சாயத்துத் தொகை, அரசு மற்றும் தனியார் இடங்களிலும், வணிக வளாகங்களிலும் கட்டியாக வேண்டிய நிறுத்தக் கட்டணம், பொது இடங்களில் இடையூறாக நிறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி லாரிகளில் குவியல் குவியலாக அள்ளிச் செல்லப்பட்ட பிறகு கட்டியாக வேண்டிய தண்டத்தொகை, களவுபோன வாகனங்களின் பொருட்டான வழக்குச் செலவுகள் என்றெல்லாம் பல்வேறு வகையில் நமது வாகனப் பொருளாதாரம் கிளைவிரித்துத் தழைத்துக் கொண்டிருக்கிறது. 
இன்னொரு பக்கம் மாநகரங்களின் 
காவல் நிலையங்களிலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் வழக்குகளில் சிக்கிய நிலையில் குவிக்கப்பட்டுக் கிடக்கின்ற வாகனங்கள். பெறப்படுகின்ற புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காதவர்கள், ஆனால் வாகனங்களை மறித்து வழக்குப் பதிவு செய்பவர்கள் எனும் புகாருக்கு காவல்துறையினர் ஆளாகியிருக்கின்றனர். வாகனங்களைச் செலுத்துபவர்கள் குற்ற உணர்ச்சிக்கும், அவற்றில் பயணிப்பவர்கள் அச்ச உணர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கின்றனர். 
சாலை விபத்துகளைத் தவிர்க்க "சாலைப் பாதுகாப்பு வாரம்', "வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம்', "வாகன ஓட்டுனர்களுக்கான உளவியல் பயிற்சிகள்' என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் "விபத்துப் பாதுகாப்புக்குழு' எனும் பெயரில் ஒரு குழு தேவை என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 2007-ஆம் ஆண்டு இந்தியாவில் 1,14,590 ஆக இருந்த சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் 1,50,000க்கும் மேலாக உயர்ந்திருக்கிறது.
புதிய மேம்பாலங்கள், நவீன நான்கு
வழிச்சாலைகள், காவல் ரோந்து வாகனங்கள், போக்குவரத்து வழித்தட மருத்துவ உதவி வாகனங்கள் போன்ற பல்வேறு விதமான பயணநல நடவடிக்கைகள் விபத்துகளைக் குறைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான்குவழிச் சாலைகளில்தான் விபத்துகள் அதிகரித்துள்ளன. வாலாஜாபேட்டை - பூவிருந்தவில்லி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,103 விபத்துகள் நடந்துள்ளன. 
நமது அரசுகளும், தனியார் நிறுவனங்களும் தனி நபர்களின் வாகனங்களைத் தங்களது வருமானத்திற்கான கருவிகளாகக் கருதுகின்றன. தனிமனிதர்களின் அசையும் சொத்துகளில் பல வகையில், மற்றவர்களுக்கான பணப் பயன்களை அளிக்கக்கூடியவை வாகனங்கள்தான். ஒருவர் ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு தங்கச் சங்கிலியையும், ஒரு லட்ச ரூபாய்க்கு ஓர் இரு சக்கர வாகனத்தையும் வாங்கினால் ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு தங்கச்சங்கிலியை 1.25 லட்சம் ரூபாய்க்கும், இருசக்கர வாகனத்தை 10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம். மேலும் அந்த ஐந்தாண்டுக் காலத்தில் அந்த வாகனத்தின் பொருட்டு அவ்வப்போது அவர் செய்து வந்த தொடர் செலவினங்கள் அதன் முதலீட்டுத் தொகையையே மிஞ்சியிருக்கும். 
நமது நாட்டில் வாகனங்களின் ஓட்டுனர்கள் அடிக்கடி மன அழுத்தம், பதற்றம், அச்சம் போன்ற உணர்வுகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருப்பினுங்கூட, காவலர்களால் அவர்கள் மறிக்கப்படுகையில் பொது இடத்தில் குற்ற உணர்ச்சிக்கும் அவமானத்திற்கும் ஆளாவதோடு, விலைமதிப்பு மிக்க தங்களின் நேரத்தையும் இழக்கின்றனர். அரசின் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவதில்லை. காவல்
துறையினர் அவற்றை மறித்து ஓட்டுனரிடம் காப்பீட்டு ஆவணத்தைக் கேட்பதில்லை, அப்படிக் கேட்கவும் முடியாது. விபத்துகள் நேரும்போது போக்குவரத்து நிர்வாகங்களே வழக்குகளின் வாயிலாக அவற்றைச் சந்தித்து, நீதிமன்றத்தின் வாயிலாக வழக்கிலும் மேல்முறையீட்டிலும் காலம் கடத்துகிற உத்தியைக் கடைப்பிடித்து வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் போக்குவரத்துத்துறை வாகனங்களும் சொத்துகளும் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.
மேலும், பெருகி வருகின்ற வாகன விபத்துகளால் காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை ஆகிய மூன்று துறைகளும் மிகக் கூடுதலான பணிகளைச் சுமக்க நேர்ந்திருக்கிறது. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 1,700 இறந்த உடல்களைக் கூறாய்வு செய்தாக வேண்டிய நிலையில் நமது அரசு மருத்துவமனைகள் உள்ளன. இத்தனை வழக்குகளையும் காவல் துறையினர்தான் நடத்தியாக வேண்டும். நீதிமன்றங்கள் அவற்றுக்குத் தீர்ப்பு சொல்லியாக வேண்டும். இது, விபத்துக்களின் பொருட்டான உயிரிழப்புகளுக்கு மட்டுமேயான கணக்கு. மற்றபடி உடற்சிதைவு, வாகனத்திருட்டு, வாகனத்தில் வந்து திருட்டு, வாகனங்களின் பொருட்டான பல்வகை மோதல்கள் போன்றவை தனித்தனிக் கணக்குகளாகும்.
ஆக, வாகனப் போக்குவரத்து முறைகளை கையாளத் தெரியாமல் இருப்பனால் நிலைமை இன்னும் பல மடங்கு மோசமாக மாறும் என்பதில் ஐயமில்லை. பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்
படுகின்ற வாகனங்களாலும் நெரிசல் அதிகரிக்கிறது. பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் அவை ஏலம் விடப்படும் என்று சென்னைப் பெருநகர மாநகராட்சி அண்மையில் அறிவித்திருக்கிறது.
வாகனப் பாதைகளின் தரம், வாகனங்களின் தரம், வாகன ஓட்டுநர்களின் தரம் ஆகியவற்றில் நிறைந்திருக்கின்ற பெருங்
குறைபாடுகளே விபத்துகளுக்கான காரணங்களாக அமைகின்றன. இம்மூன்று வகையான குறைபாடுகளில் முதன்மையானது வாகன ஓட்டுனர்களின் தரமே ஆகும். வாகனங்களை இயக்குகின்ற மனிதர்களே மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும் இருக்கவேண்டும். ஆனால் 93 விழுக்காடு விபத்துகள் வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவுகளால் ஏற்படுகின்றன என்பது ஆய்வுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கான இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானியத் தொகை அளித்து மேலும் ஒரு லட்சம் இருசக்கர வாகனங்களைக் களத்தில் இறக்க ரூ. 250 கோடியை ஒதுக்கியிருக்கியிருக்கிறது தமிழக அரசு. அவ்வளவும் காப்பீடு, நிறுத்துமிடக்கட்டணம், எரிபொருள், பழுதுநீக்கம், உள்ளிட்டப் பல்வேறு வகையில் அரசுக்கும் தனியாருக்கும் பணப்பயன்களை அளிக்க இருக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நடைபாதைகள் அற்றுப்போய்விட்ட, ஆக்கிரமிக்கப்பட்டு விட்ட, மிதிவண்டிகளுக்கு எனப் பாதைகளே இல்லாத, தரமற்ற சாலைகளைக் கொண்ட மாநகரங்களை பல லட்சக்கணக்கான உதிரி வாகனங்களால் நிரப்பி, நிலைமையை மேலும் சிக்கலாக்குவது ஓர் அரசின் திட்டமாக இருக்கக் கூடாது. மக்களுக்குத் தேவைப்படாத, மக்கள் கோரிக்கை வைக்காத அனைத்துத் திட்டங்களுக்கும் இது பொருந்தும்.
நமது மாநகரங்களில் அரசின் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சீரழிந்த நிலையில், இயங்கிக் கொண்டிருக்கின்றன. மழையின் போது மேற்கூரை ஒழுகக்
கூடிய நிலையில் இருக்கின்ற, தட தடத்தபடியும், ஓலமிட்டபடியும் ஓடிக்கொண்டிருக்கின்ற நமது அரசுப்பேருந்துகள் சொகுசு, சாதாரணம் என்றெல்லாம் கட்டணத்தில் மட்டும் வேறுபடுத்தப்பட்டிருப்பது அவலத்தின் உச்சமாகும். தரமான சேவையை அளிக்காமல் பணம் பறிக்கிற புதிய புதிய உத்திகளை மட்டுமே நமது அரசு கடைப்பிடித்து வருகிறது. அரசு, பொதுப் போக்குவரத்து பற்றிய தெளிவைப்பெறும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களிடமும் ஆய்வறிக்கைகளைப் பெற்று அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com