தேவை: ஒரு நல்ல மாற்றம்!

ஓர் அரசின் முக்கியமான மூன்று அங்கங்கள்: ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள். இம் மூன்று அங்கங்களும் நல்வழியில் திறம்படச் செயல்பட்டால் அந்த அரசின்

ஓர் அரசின் முக்கியமான மூன்று அங்கங்கள்: ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள். இம் மூன்று அங்கங்களும் நல்வழியில் திறம்படச் செயல்பட்டால் அந்த அரசின் ஆட்சி நல்லாட்சியாக அமையும். ஒன்று பழுதுபட்டால் கூட விபரீதமான விளைவுகள் உண்டாகும். தற்போது நம் நாட்டின் பல மாநிலங்களில் குறிப்பாக, தமிழ் நாட்டில் இதுதான் நிலைமையாக இருக்கிறது. இந்நிலைமை மாறி நல்லாட்சி மலர வேண்டுமானால், இம்மூன்று அங்கங்களிலும் நல்ல மாற்றம் ஏற்படுவது அவசியம்.
அரசியல் என்பது ஒரு வியாபாரமாகி விட்டது. இவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு எடுக்கலாம் என்று கணக்கிட்டுப் பார்த்துத்தான் எல்லா நிலைகளிலும் அரசியலில் நுழைகிறார்கள். நிர்வாகத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும், சமூகத்துக்கு எவ்வித சேவையும் செய்யாதவர்களும் அரசியலுக்கு வந்தால் எப்படி நல்லாட்சி செலுத்த முடியும்? 
எல்லா வேலைகளுக்கும் ஒரு குறைந்தபட்ச, குறிப்பிட்ட கல்வித்தகுதி தேவைப்படுகிறது. அரசியலைத் தவிர, மருத்துவம் படித்தவர்தான் மருத்துவராக முடியும், பொறியியல் படித்தவர்தான் பொறியியல் வல்லுநராக முடியும் என்றெல்லாம் இருக்கும்போது, அரசியலுக்கு வருபவர்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாகக் கீழ்க்காணும் இரண்டு தகுதிகளில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ கட்டாயமாக்க வேண்டும். ஒன்று, அரசியல், நிர்வாகம் இவற்றில் இளங்கலைப் பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். 
இரண்டு, ஏதாவதொரு பட்டப் படிப்போடு, இரண்டு ஆண்டு காலமாவது ஏதாவதொரு துறையில் ஏதாவதொரு வகையில் சமூகத்துக்குத் தொண்டாற்றியிருக்க வேண்டும். மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போல் அரசியலிலும் எல்லா நிலைகளிலும் உள்ள ஊழியர்களுக்கும், அரசே சம்பளத்தையும், பிற சலுகைகளையும் நிர்ணயம் செய்துவிடலாம். சலுகைகள் தருவதோடு அவர்களைக் கண்காணிப்பு வளையத்துக்குள்ளும் கொண்டுவந்து விடலாம். அதாவது, வேலை செய்யாதவர்களையும், ஊழல்வாதிகளையும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தகுதி நீக்கம் செய்ய வழிவகை செய்யலாம்.
தமிழகத்தைப் பொருத்தவரை, திரைப்படத் துறையிலிருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை முழுமையான நல்லாட்சி தந்ததில்லை. இனி வரப்போகிறவர்களும் நல்லாட்சி தர வாய்ப்பில்லை. தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால்!
ஒரு சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் பெண்கள்தான். தாய், சகோதரி, மனைவி என்று எல்லா நிலைகளிலும் ஒரு குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்பவர் பெண்களே. பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்துதான் ஒரு சமுதாயம் உருவாகிறது. 
ஆக, ஒரு சமுதாயம் நல்ல வகையில் இருக்கிறது என்றால் அதற்குப் பெண்களின் பங்களிப்பு பிரதானமாக உள்ளது என்று பொருள். அப்படிப்பட்ட பெண்களை மதிக்காத - போற்றாத அரசியல்வாதிகள் நல்லாட்சி தர முடியாது. மகள் வயதில் இருக்கும் பெண்ணைத் திரையில் அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டவர்களும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டவர்களும், அரசியலுக்கு வந்து ஆட்சியிலும் அமர்ந்தால், நாடு என்னாகும்? 
ஆனால், அவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். இன்று, அரசியலுக்கு வரவிழையும் திரைத்துறையினர் இனியாவது பெண்களை எவ்விதத்திலும் இழிவுபடுத்தும் வண்ணம் நடிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக மக்களிடம் உறுதி கூறி, அதன்படி நடந்தும் கொண்டால், பெண்களின் வாக்குகளை நேர்மையான முறையில் பெற வாய்ப்பிருக்கிறது.
திரைத்துறையிலிருந்து நிறைய பெண்களும் அரசியலுக்கு வருகிறார்கள். வரட்டும்; நல்லதுதான். இன்னும் 33 சதவீதத்தை நாம் எட்டவில்லையே! ஆனால், அவர்களும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்ணியமற்ற முறையில் ஆடை அணிந்து ஆடிப்பாடி நடித்துவிட்டுப் பிறகு ஆட்சி செய்யவந்தால் மக்கள் மதிப்பார்களா? ஒருக்கால் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் நடித்த படங்கû ள அவர்களே திரும்பிப் பார்க்க நேரிடும்போது, 'அடச்சே' என்று கூச்சப்படும் வண்ணம் இருக்கலாமா? பண்போடு மட்டுமே இனி நடிப்போம் என்று நடிகைகளும் உறுதிகூறி அதன்படி நடக்கட்டும், பிறகு அரசியலுக்கு வரட்டும்.
தற்போது அரசியலில் இருக்கும் பலர் குற்றப் பின்னணி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் எப்படிக் குற்றமற்ற ஆட்சி நடத்த முடியும்? குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது தடைசெய்யப்பட வேண்டும்.
மதச் சார்புடையவர்கள் அரசியலுக்கு வரும்போது மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவர்களது மத நம்பிக்கைகளை நிர்வாகத்தில் திணிக்க மாட்டோம் என்று உறுதி கூறினால் மட்டுமே அவர்கள் எல்லாத் தரப்பினரையும் ஈர்க்க முடியும்.
எந்தவித விளம்பரமும் இல்லாமல் சமூகத் தொண்டாற்றி வரும் பலரும், நிர்வாகமும் அரசியலும் நன்கறிந்த நேர்மையாளர்கள் பலரும் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். இதுவும் சரியன்று. நியாயப்படி, இவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; ஆட்சியில் அமர வேண்டும். 
ஆனால், பணபலம், சாதி, அரசியல் போன்றவற்றை எதிர்த்து இவர்களால் வெற்றிபெற முடிவதில்லை. இதிலும் ஒரு மாற்றம் ஏற்படுவது நல்லது. அரசியல் கட்சிகள் இத்தகைய நல்லோரைத் தங்கள் கட்சியின் சார்பாகத் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும். ஊடகங்களும் இவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். 
இன்னும், படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்து போகாமல், 'இது நம் தேசம், இதை நாம் நல்ல முறையில் ஆள வேண்டும்,' என்ற உத்வேகத்தோடு, ஒரே சமயத்தில், பெருமளவில் அரசியலில் நுழைய வேண்டும். ஓய்வுபெற்ற நேர்மையான ஆட்சிப்பணி அதிகாரிகள், நீதிபதிகள் இத்தகைய இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆட்சி, நிர்வாகம் பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவையெல்லாம் நடந்தால் அரசியலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். 
அரசு அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். கையூட்டு, ஊழல், அளவுக்கதிகமான சொத்து சேர்த்தல், வேலையே செய்யாமல் சம்பளம் பெறுவது. ஏற்கெனவே பழம் தின்று கொட்டை போட்ட அரசு ஊழியர்களிடத்தில் மாற்றம் ஏதும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. 
இனிவரும் காலத்திலாவது இளைஞர்கள் அரசுஅலுவல்களை ஏற்று, அவற்றைத் திறம்படி நேர்மையாகச் செய்ய வேண்டும். இன்னின்ன படிப்புக்கு இன்னின்ன வேலை என்று கல்லூரியில் நுழையும் முன்பே இளைஞர்களுக்கு வழிகாட்டி, அவர்களை முறைப்படுத்த வேண்டும். தேவையில்லாமல் தேர்வுக்கு மேல் தேர்வு எழுதி, படிப்பது ஒன்று வேலை பார்ப்பது ஒன்று என்று இளைஞர்கள் வேலையில் சேரும்போதே அலுத்துச் சலித்து வந்தால், அவர்களிடம் நல்ல நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது. 
எல்லா அரசுத் துறைகளிலும் ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை; மறுபக்கம் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் கூட்டம். இதை மாற்றி, அனைவருக்கும் பல்வேறு நிலைகளில், அவரவர் மதிப்பெண்களுக்கு ஏற்ப அரசு வேலை என்று வகை செய்தல் நல்லது.
பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு இருப்பது போல் வேலைவாய்ப்பு பிற படிப்புகளுக்கு இல்லை. சரித்திரத்தை எடுத்துக் கொள்வோம். நம் தமிழகத்தில் எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 
அவற்றின் பராமரிப்பு, விளம்பரப்படுத்துதல், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டுதல் முதலிய பணிகளை அரசுப் பணிகளாக்கி, அவற்றில் வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறு கல்வித் தகுதிகள், ஊதியங்கள் என்று அரசே நிர்ணயம் செய்தால், சரித்திரம் படிக்கும் பலருக்கும் வேலை கிடைக்கும், சுற்றுலாவும் மேம்படும்,நிர்வாகமும் நடக்கும். வேலைப்பளுவைக் குறைக்கும் வண்ணம் நிறைய அலுவலர்களை நியமித்து நிறைவாக ஊதியமும் கொடுத்தால், தீயவழியில் பணம் சேர்க்கும் எண்ணம் மாறும்.
உயர் பதவிகளில் இருப்பவர்கள் முறைகேடாகப் பணம் சேர்ப்பது அவர்களது பேராசையினால்தான். வழக்கு, நீதிமன்றம், இவையெல்லாம் இவர்களைத் தண்டிக்க மட்டுமே முடியும். மனமாற்றம்தான் இத்தீங்கைப் போக்க இயலும். நேர்மை, நல்லொழுக்கம், கடமையுணர்வு போன்ற நல்லியல்புகளை மாணவப் பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும். அதுமட்டும் போதாது, மூத்த தலைமுறையினர் இவற்றைக் கடைப்பிடித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். 
மக்கள் மன்றத்தை எடுத்துக் கொள்வோம். மக்கள் கூட்டத்திலிருந்துதான் ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் வருகின்றனர். இவர்களிடத்தில்தான் அதிக அளவு மாற்றம் தேவைப்படுகிறது. இலவசங்களால் சோம்பேறிகளாகி, திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் மூழ்கித் தரம் தாழ்ந்து, தவறான தலைவர்கள் பின்னால், தவறான கொள்கைகளைப் பற்றிக்கொண்டு, தவறான ஆட்சிக்கு அடிகோலியிருப்பவர்கள் மக்களே! 
மக்கள் மனங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், ஒரு சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். சாதி, மதங்களைத் தாண்டிச் சிந்திக்கத் தெரிந்த சான்றோர்களும், நன்னெறி பிறழாத ஒழுக்க சீலர்களும், இறைவழியில் நடக்கும் இறையன்பர்களும், ஒன்று சேர்ந்து மக்களின் மனங்களை மாற்றி நல்வழிப்படுத்த வேண்டும். மக்களும் இந்த மாற்றங்களை விரும்பி ஏற்க வேண்டும்.
தடுமாறித் தடம்புரண்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்குத் தேவை ஒரு நல்ல மாற்றம். அந்த மாற்றம் விரைவில் வரும் என்று உறுதியாக நம்புவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com