நோய்முதல் நாடி அதுதணிக்கும் வழிநாடுவோம்!

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாலியல் முறைகேடு, பணமோசடி, லஞ்ச ஊழல் பற்றியசெய்திகளும்

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாலியல் முறைகேடு, பணமோசடி, லஞ்ச ஊழல் பற்றியசெய்திகளும், அவைதொடர்பான வழக்குகள்பகுதியாகின்றன. இவை தொடர்பான விவாதங்கள் நடத்துதல் காட்சிஊடகக்காரர்களின் பிழைப்பை எளிதாக்குகிறது. பன்னிரண்டுவயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவோருக்கு மரண தண்டனை எனச் சட்டமும் இயற்றியாயிற்று. ஏனைய குற்றச் செயல்களுக்கும் மரண தண்டனை என்றாக்கி விட்டால் அனைத்து வகையான குற்றச் செயல்களும் வெகுவாகக் குறைந்து விடும். எப்படி? குற்றச் செயல்கள் அனைத்திற்கும் மரண தண்டனை என்றாக்கி விட்டால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துவிடும். மக்கள்தொகை குறையும்போது குற்றங்களும் குறையத்தானே செய்யும் ? எந்தப் பிரச்சனைக்கும் மரண தண்டனை தீர்வாகாது. 
சின்னச்சின்ன வழிப்பறியிலும், கொள்ளையிலும் ஈடுபடும் இளைஞர்களின் நோக்கம் அதை வைத்துச் செல்வந்தர் ஆவதல்ல. குடித்துக் கும்மாளமிடுதலேஅவர்களின் நோக்கமாகிறது. வெவ்வேறு வகையான பண மோசடிகளில் ஈடுபடுவோருக்கும், பெரும்படியான லஞ்சஊழலில் திளைப்போருக்கும் செல்வந்தர்களாகிச் சுகபோகத்தைஅனுபவித்தல் நோக்கமாகிறது. அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தங்களின் தலைமையை நீட்டிக்கவும்,தங்களின் குடும்பத்தாரே அரசியல் வாரிசுகளாகவும் பெரும் பொருளைச் சேர்ப்பதுடன் தங்களுடைய கட்சிக்காரர்களின் ஊழலுக்கும் துணை செய்யவேண்டியவர்களாகிறார்கள்.
இளைஞர்களின் குற்றச் செயல்களை மட்டுப்படுத்த, அனைத்துவகையானமதுபானக் கடைகளையும் இழுத்து மூட வேண்டும். மதுவிலக்கு கள்ளச் சாராயத்திற்கு வழிவகுக்கும் எனல் சரியல்ல. பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடனும், காவல் துறையினர் மாமூலுக்கு ஆட்படாத பொறுப்புணர்வுடனும் செயற்பட்டால் கள்ளச்சாராய விற்பனை எப்படி நடைபெறும் ? இன்னொன்று, சாராயத்தில் கள்ளச் சாராயமென்ன ? நல்ல சாராயமென்ன ? அரசு விற்பனை செய்யும் நல்ல சாராயத்தால்தானே இளைய சமுதாயம் கெட்டுக் குட்டிச்சுவராகிறது ?
1967 தேர்தலையொட்டி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காமராசர், "நாட்டில் லஞ்ச ஊழல் கூடிக் கொண்டே போகிறதுஎன்கிறார்கள். அதற்கு என்னகாரணம் ? நாமதான் காரணம். நாம் என்னசெய்கிறோம் ? எவன் பணக்காரனோஅவனுக்கே மாலை போட்டு முதல் மரியாதை செய்கிறோம். அவன் நல்லவனா ? இந்தப் பணத்தை அவன் எப்படிச் சம்பாதித்தான் என்பது பற்றி நாம் கவலைப்படுவதில்லை. எனவே, அவனவனும் எப்படியாவது பணம் சம்பாதித்துப் பெரிய மனிதனாக முயல்கிறான். எனவே நாம மாறனும், யார் நல்லவரோஅவருக்கே மதிப்பும், மரியாதையும் காட்டவேண்டும். அப்படிச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்' எனக்குறிப்பிட்டார். காமராசரின் கருத்து மிகச் சரியானது என்பதில் மறுப்பில்லை. ஆனால் அத்தகைய சமூக மனமாற்றம் அவ்வளவுஎளிதல்ல. எனவே, மாற்றுவழிகளையும் ஆராய வேண்டியிருக்கிறது.
"மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி' என்பது ஆன்றோர் வாக்கு. எனவே லஞ்ச ஊழல் ஒழிப்பை மேலிருந்து தொடங்க வேண்டும். முதலமைச்சர், தலைமையமைச்சர் லஞ்ச ஊழலில் ஈடுபடாதவரானால் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கத் துணியமாட்டார்கள். அமைச்சர்கள் லஞ்சம் வாங்காதவரானால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க அஞ்சியொதுங்குவர். அதிகாரிகள் அஞ்சும் நிலையில் அலுவலகப் பணியாளர் யாரிடமும் கை நீட்டமாட்டார். மன்னர் நிலையில் இருக்கும் முதலமைச்சரைக் கட்டுப்படுத்துவதுஎப்படி?
முதலாவது, அரசியல் கட்சியின் தலைவர் பதவியில் அதிக அளவாக பத்தாண்டுகளுக்குமேல் ஒருவரே நீடிக்கக் கூடாது. அவ்வாறே முதலமைச்சராகவும், தலைமையமைச்சராகவும் ஒருவர் பத்தாண்டுகளுக்குமேல் நீடிக்கக்கூடாது. அவருக்குப் பின் அடுத்த பத்தாண்டுகளில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அந்தப் பதவிக்கு வரக்கூடாது என்றாக்கவேண்டும். அமெரிக்காவில் எவ்வளவு தூய்மையான தலைவராயினும் ஒருவர் இரு தடவைகளுக்கு (எட்டாண்டுகளுக்கு) மேல் அதிபர் பதவியில் தொடர முடியாது. ஆனாலும் அமெரிக்காதான் உலகின் சட்டாம்பிள்ளையாகிறது. எனவே, ஒரேதலைமை, வாரிசுஅரசியல் இரண்டும் ஒழியாதவரை லஞ்ச ஊழல் ஒழியாது. அடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தமது பெயரிலும், தம்முடைய மனைவி பெயரிலும் உள்ள சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் நடைமுறையாகிறது. அதுபோதாது. அவரவர்க்கும் அந்தச் சொத்தை வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பதற்குரிய ஆதாரத்தை பத்திரிகைகளில் வெளியிடுதலும் கட்டாயமாகப்பட வேண்டும். அத்துடன், ஒருவர் ஒருசொத்தை வாங்கும்போது அதற்கான தொகை எப்படிக் கிடைத்தது என்பது பற்றிய ஆதாரத்தையும் சமர்ப்பித்தால்தான் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதாகப் பத்திரப்பதிவு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். பினாமி பெயரில் சொத்து சேர்ப்பதைத் தடுத்துவிட்டால் லஞ்ச ஊழல் ஒழியும்.
சிறுவர் சிறுமியர் பாலியல் தொல்லைக்கு ஆளாதல் காலங்காலமாக உள்ளதுதான். அந்தக் காலத்தில் இலைமறை காயாக நடைபெற்ற அப்படியானசெய்திகளைப் பெரியவர்கள் கண்டுங்காணாதது போல் மறைத்துவிடுவர். தற்போதுசிறுவர் சிறுமியரைச் சேர்ந்த பெரியவர்கள் அதனைப் பெரிதுபடுத்தும் நிலைமையாதலால் குற்றவாளிகள் அதற்குப் பயந்து பாலியல் தொல்லையைக் கலையாக்கி மாட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறான செயல்களில் இளையோர் மட்டுமின்றிப் பெரியவர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். என்னகாரணம் ? அந்தரங்க உறுப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்படியான ஆடையணிந்து கதாநாயகிஆடும் குத்தாட்டம் தணிக்கைத் துறையினரின் தாராள விதிமுறைகளால் அப்படியே வெள்ளித்திரையில் காட்சியாக விரிகிறது. அதே பான்மையில் குடும்பப் பெண்களின் நடமாட்டமும் இயல்பாகிறது. இப்போது இணைய வசதிகள் என்பதன் வழியாகவும் ஆபாசக் காட்சிகள் அவரவர் கைக்குள் அடக்கமாகிறது. இவையெல்லாவற்றாலும் ஏற்படும் வக்கிர உணர்வைஅடக்கமாட்டாதவர்கள் தங்களுக்குவாய்ப்பான சூழலில் விபரீதச் செயலில் ஈடுபட்டுக் கொலைக் குற்றவாளியாகிறார்கள். மேற்படியானசெயல்களைக் கட்டுப்படுத்துதற்கான முயற்சியின்றி மரணதண்டனைஎன்பது சரியான தீர்வாகாது. இன்னொன்று, தொலைக்காட்சிகளில் நடைபெறும் சிறுவர், சிறுமியர்க்கான இசைப் போட்டிகளில் பாடப்படும் பாடல்களில் பெரும்பான்மையானவை திரைப்படங்களில் வரும் காதற் பாடல்களாகின்றன. அதுவொருபுறமிருக்க, காதல் பாட்டுகளைப் பாடியாடும் சிறுவர்,சிறுமியர் பெரியவர்களாகும்போது அந்தநினைப்புக்கு ஆளானால் அதற்கு யார் பொறுப்பு ?
இன்னொன்று, தங்களின் உடம்பைக் கொடுத்தும் தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பெண்களில் சிலர் தயாராகும் நிலையில் பாலியல் முறை கேடுகளுக்காக ஆண்களை மட்டும் குற்றவாளிகளாக்குதல் நியாயமல்ல. ஆண்களால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பது சரியான வாதமாகாது. "இவ்வாறாக நான் நிர்ப்பந்திக்கப்படுகிறேன்' எனக் காவல் துறையினருக்கும், மாநில ஆளுநருக்கும் மனித உரிமை ஆணையருக்கும் புகார் மனுஅளிக்கலாம். ஊடகங்களில் வெளியிடலாம். அதுதான் பாரதி விரும்பிய வீரப் பெண்மணிக்குஅடையாளம். 
இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையானகாரணம் இருக்கிறது. குட்டி போடுதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான இயற்கை நியதி. குட்டிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துதல் மனித இனத்திற்குமட்டும் உரிய தனிப்பண்பு. கட்டுப்பாடுதான் மனிதர்களை ஒரு சமூகமாக இணைந்து வாழவும் - செயற்படுவும் செய்கிறது. அந்தக் கட்டுப்பாடு குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக வேண்டும். நிர்பயாவின் கதையென்ன ? நடமாட்டம் குறைந்த நள்ளிரவில் ஆண் நண்பருடன் கூட்டம் குறைவான பேருந்தில் ஏற நேர்ந்ததன் விளைவுதான் கொடூரமான கொலையில் முடிந்தது. நேரங்கெட்ட நேரத்தில் ஆணுடன் சுற்றுவதுதான் பெண் சுதந்திரமா? எனவே முதலாவது, "பெற்றவர்கள் தம் பிள்ளைகளை எங்கேபோகிறாய் எதற்காகப் போகிறாய் - ஏன் இவ்வளவு காலதாமதம் என்றெல்லாம் கேட்டுக் கட்டுப்படுத்தக்கூடாது, பிள்ளைகளைச் சுதந்திரமாக விடவேண்டும்' என்றொரு மூடக்கருத்துரை முற்போக்கு என்னும் பெயரால் பரப்பப்படுதலை நிறுத்த வேண்டும். பெற்றவர்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து அன்பாகவும், நயமாகவும் கட்டுப்படுத்துதல் அவசியமாகும். பெரிய படிப்பு படித்துப் பெரிய உத்தியோகம் பெற்றுக் கை நிறைய சம்பாதிப்பதுமட்டும் போதாது. நல்ல பிள்ளை எனப் பெயர் பெறுதலும் முக்கியமானது என்பதைப் பிஞ்சு நெஞ்சத்திலேயே பதிக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தம்பிள்ளைகளை, நம்மால் மற்றவர்கள் சங்கடப்பட வேண்டாம் ; நட்டப்பட வேண்டாம் என்னும் மனப்பான்மையராகவளர்த்துவிட்டால் பிரச்னைக்கு இடமேது ? சரி, பிள்ளைகளை அத்தகைய மனப்பான்மையராக உருவாக்குதல் எப்படி? பெற்றவர்கள் அவ்வாறாக நடந்து கொள்வதன் வழியாகவே பிள்ளைகளையும் அவ்வாறாக உருவாக்கமுடியும். ஆக, முதலில் நாம் திருந்தவேண்டும். அதன் வழிப் பிள்ளைகளைத் திருத்தவேண்டும். அதன்வழிச் சமூகத்தைச் சீர்படுத்தவேண்டும். அதுவே நோய் முதல் நாடிஅது தணிக்கும் வழிநாடுதலாகிச் சமூகத்தைச் சீர்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com