வாக்குகளை விற்காதீர்!

நமது நாட்டில் 545 மக்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. இதில் மக்களால் 543 பேரும், குடியரசுத் தலைவரால் 2 பேரும் நியமிக்கப்படுவர்.

நமது நாட்டில் 545 மக்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. இதில் மக்களால் 543 பேரும், குடியரசுத் தலைவரால் 2 பேரும் நியமிக்கப்படுவர். இதே போல, 245 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களில் 233 பேர் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச மக்களாலும், 12 பேர் குடியரசுத் தலைவராலும் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழகத்தில் 39 மக்களவை, 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. நமது நாடு கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்படுவர். கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் தமிழகம் இதுவரை 15 சட்டப் பேரவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 1996 முதல் 2011 வரை 4 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது.
இந்திய அளவில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் என்பது தற்போது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதும் ஒரு வித லஞ்சம் தான் என்பது கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் நன்கு தெரிந்த நிலையிலேயே நடைபெறுகிறது. 
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட, தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகித்தன் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
தேர்தல்கள் நமக்கு புதிதல்ல; தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதும் புதிதல்ல. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை இந்திய தேர்தல் ஆணையமும், நடுநிலையாளர்களும், ஏன் சில அரசியல் கட்சிகளுமே கூட எதிர்த்து வரும் நிலையிலும், பணம் வழங்குவது நின்ற பாடில்லை. மாறாக அதிவேகமாக அதிகரித்து வருவதையே நாம் காணமுடிகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்னாகுமோ என நடுநிலையாளர்கள் கவலைப்படுகின்றனர். 
இது இப்படி இருக்க, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் என்னாவாகிறது? அதனை வாக்காளர்கள் எவ்விதம் செலவிடுகின்றனர் என அமெரிக்கா நாட்டின் கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அனிர்பன் மித்ரா, சபானா மித்ரா, அர்னாப் முகர்ஜி ஆகியோர் கொண்ட குழுவினர் "கேஷ் பார் வோட்ஸ்: எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, அண்மையில் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த முடிவுகள் மூலம் ஓட்டுக்கு வழங்கப்படும் பணம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிய முடிகிறது.
கடந்த 2004 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் விநியோகிக்கப்பட்ட பணத்தை வைத்து வாக்காளர்கள் என்ன செய்தனர் என்பது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஓட்டுக்காக வழங்கப்படும் பணம் பெரும்பாலும் கருப்புப் பணமாகவே உள்ளது. இந்த பணத்தினால் தேர்தலுக்கு 30 நாள்களுக்கு முன்பும், அதன் பின்பும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் வகைகள் 8,790 மில்லியன் ரூபாய்க்கும், மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் 20,150 மில்லியன் ரூபாய்க்கும், மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் 15,000 மில்லியன் ரூபாய்க்கும், துணி வகைகள் 41,000 மில்லியன் ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளன. அதே போல, உடல்நிலைக்காக 3,43,000 மில்லியன் ரூபாயும், கல்விக்காக (புத்தகங்கள், பள்ளி ஆடைகள் உள்ளிட்டவை) 1,81,000 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பருப்பு வகைகளின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இக்காலக் கட்டத்தில் கட்டுமானத் துறை அமைதியாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 4,210 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ரூ.12 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் புழக்கத்துக்கு வரலாம் எனவும், மக்களுக்கு வழங்கும் பணம் அல்லது பரிசு பொருள்கள் ஓட்டுகளாக மாறுகின்றனவா என்ற கேள்விக்கு ஓரளவுக்கு என்றும் பதில் கிடைத்துள்ளது.
நாம் பெரும்பாலும் வெளிப்படையாகக் காண்பது ஓட்டுக்கு கொடுக்கும் பணமானது மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கே பயன்படுகிறது என்பது தான். ஆனால் ஆய்வு முடிவுகள், கல்வி, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றிற்கு அதிகபட்சமாக செலவிடப்பட்டதை காட்டுகிறது. ஓட்டுக்கு வழங்கும் பணம், நல்ல விதத்திலேயே வாக்காளர்களால் செலவிடப்படுகிறது என்று கூறிக் கொண்டு நாம் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
இருப்பினும், ஓட்டுக்கு பணம் வாங்குவதால் நமது வாக்குகளை விற்கிறோம் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். வருங்காலத்தில் பணம் வழங்கினால் போதும், மக்கள் பணி செய்யாமலேயே ஓட்டு வாங்கி விடலாம் என்ற எண்ணம் தேர்தலில் நிற்பவருக்கு ஏற்பட்டு, ஜனநாயகம் பணநாயகமாகும் கேலிக்கூத்து அரங்கேறும். 
ஜனநாயகத்தில் ஓட்டு, நமக்குத் தேவையான நல்லாட்சியை ஏற்படுத்தக் கூடிய ஓர் ஆயுதம். நமது முன்னேற்றத்திற்கான அரசை உருவாக்க வல்லது என்பதை அறிந்து, வாக்காளர்கள் செயலாற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com