கலாசாரத்தை வேரறுக்கும் தீர்ப்புரைகள்!

ஒன்றிலே இருக்கும் சிறப்பை மற்றொன்றிலே காண முடியாது. எந்தக் கடலின் நீரை எடுத்து நாவிலே இட்டாலும்,

ஒன்றிலே இருக்கும் சிறப்பை மற்றொன்றிலே காண முடியாது. எந்தக் கடலின் நீரை எடுத்து நாவிலே இட்டாலும், அது கரிக்கத்தான் செய்யும். ஆனால், கடற்கரை மணலிலே தோண்டப்படுகின்ற கிணறு பருகுவதற்குரிய நீரைத் தருகின்றது. அதற்காக ஒன்றோடு ஒன்று போட்டி போடுவதில்லை. 
சேவல்களுக்கு மட்டும் கொண்டை இருப்பதைப் பெண் கோழிகள் ஆணாதிக்கம் எனச் சொல்வதில்லை. ஆண் யானைகளுக்கு மட்டும் தந்தம் அமைந்திருப்பதைப் பெண் யானைகள் அடிமைத்தனமாகக் கருதுவதில்லை. ஆண் மயில்கள் மட்டும் தோகை பெற்றிருப்பதனால், பெண் மயில்கள் சமத்துவம் போய்விட்டதாகப் புலம்புவதில்லை.
இந்திய நாட்டினுடைய சட்டவியல் ஆதிகாலத்து அறநூல்களுக்கு எதிராக எதையும் போதித்ததில்லை. மாறாக, தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளையும் கலாசாரத்தையும் காப்பதாகவே அமைந்து வந்திருக்கின்றது. அதனால்தான் குற்றவாளிக் கூண்டிலே ஏறுகின்றவர்களைப் பகவத்கீதையின்மீது சத்தியப்பிரமாணம் வாங்குகின்ற வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்து வந்தது. 
அறம் சார்ந்த வாழ்க்கைக்கு அரண் போல நம்முடைய சட்டவியல் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்தியக் குற்றவியல் சட்டம் 497 என்பது பயிர்களைப் பாதுகாப்பதற்குரிய வேலியே தவிர, வேலியும் பயிரை மேயலாம் என்பதற்கான அனுமதி சீட்டன்று. ஆனால், இன்று 158 ஆண்டுகால கலாசாரத்தை வேரறுப்பது போன்ற தீர்ப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய குறுந்தொகை ஓர் ஆடவனுக்குரிய கடமையையும், ஒரு பெண்ணுக்குரிய கடமையையும் பேசியது. ஆடவனுக்குப் பொருளீட்டுதல் அல்லது போருக்குச் செல்லுதல் கடமையாகும். அதனை அவன் உயிர்போலக் கருத வேண்டும். அத்தகைய ஆடவனுக்கு மனையுள் வாழும் பெண் உயிர்போலத் திகழவேண்டும் (வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்) எனக் குறுந்தொகை பாடிற்று. 
உள்வாங்கிக் கொண்ட மகாகவி பாரதியார், ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே - மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை என எளிமைப்படுத்திப் பாடினார்.
குறுந்தொகைப் புலவனும் பாரதியாரும் ஒரே தராசில் வைத்து எடை போட்ட ஆடவரையும், பெண்டிரையும், திருவள்ளுவப் பெருந்தகை தனித்தனியே எடைபோட்டு, அவர்களுடைய கடமைகளைக் கட்டுக்கோப்பாக எடுத்துரைக்கின்றார். ஒரு பெண் என்பவர் யார் எனக்கேட்டுக் கொண்டு, அவரே பதிலும் தருகின்றார். 
கற்பு நெறியிலிருந்து தவறாமல் தன்னைக் காத்துக்கொண்டு, தன்னைக் கொண்டவனது நலத்தைப் பேணிக்காத்து, நலம் நிறைந்த குடிப்புகழையும் பேணிச் சோர்வின்றி, இயங்குபவளே சிறந்த பெண் என்றார் தெய்வப்புலவர் (தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் - குறள்:56).
பெண்ணுக்குரிய பண்புகளை வரையறுத்துக் கொடுத்ததுபோல், ஆணுக்குரிய ஒழுகலாறுகளையும் வைர வெட்டுபோல் செதுக்குகிறார், அப்பொய்யில் புலவர். ஒரு பெண்ணைப் போலவே ஆடவனும் தன்னைக் கற்பு நெறியில் காத்துக்கொண்டு, தன்னைக் கொண்டவள் நலத்தையும் பேணிக் காத்து, குடிப்பெருமையைக் குன்றாமல் காக்க வேண்டும். 
அப்படிக் காக்கின்ற ஆடவனுக்குத்தான் பெருமையுண்டு என்பதை, ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (குறள் எண்.974) எனும் குறள் மூலம் புலப்படுத்துகின்றார், திருவள்ளுவர். இப்படிப் பொன்னைப் போல் போற்றிப் பாதுகாத்த பண்பாட்டை, இன்றையச் சட்டவியல் தலைக்குப்புறக் கவிழ்த்துப் போடுகின்றது.
துஷ்யந்தன் ஏமாற்றுப் பேர்வழி என்பதற்காகத் துஷ்யந்தனைத் தண்டிக்கலாமே தவிர, சகுந்தலையையும் அந்த ஏமாற்று வேலையைச் செய்யலாம் என அனுமதிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அத்தவற்றைச் செய்ய சகுந்தலையை அனுமதித்தால், பரதன் வம்சம் என்ன ஆவது, பாரத வம்சம் என்னாவது? 
மனைவியைத் துறந்து புற வாழ்க்கை வாழ்ந்தான் என்பதற்காகக் கோவலன் தண்டிக்கப்பட்டானே தவிர, அதற்காக அப்படி வாழ்கின்ற புற வாழ்க்கையை இளங்கோவடிகள் எந்தப் பெண்ணுக்கும் தரவில்லையே!
நம்முடைய அறநூல் வல்லுநர்களும் இலக்கிய கர்த்தாக்களும் தமிழனுடைய பண்பாட்டு வாழ்க்கையைப் பொத்தல் விழாமல் போற்றிப் பாதுகாத்தார்களே தவிர, கத்தரிக்கோல் போட்டுக் கத்தரிக்கவில்லை. 
மகாபாரதத்தில் இடம் பெற்ற காந்தாரி வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டாகும். தன் கணவன் திருதராட்டிரன் ஒரு பிறவிக் குருடன் என்பதைக் கேள்விப்பட்ட காந்தாரி, ஒரு துணியை எடுத்துக் கண்கள் மறையக் கட்டிக்கொண்டு, இனி எந்த ஆடவனையும் பார்க்கமாட்டேன் எனச் சொல்லி வாழ்ந்து மறைந்திருக்கிறாள். காந்தாரி ஓர் இதிகாசப் பாத்திரம் என்றாலும், கரை காணாத கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் அல்லவா?
வாழ்க்கைப் பாடத்தை ஒரு பல்கலைக் கழகமாக இருந்து நமக்குப் போதித்தவர், கம்பர். ஓர் ஆடவன் தவறு செய்கின்றபோது, அவனைத் திருத்துபவளாக ஒரு பெண் இருக்கவேண்டும் என்பதை, ஒரு ஜோடிப் புறாக்களை வைத்து விளக்குகின்றார். மனிதர்களுக்குப் பாடம் சொல்ல வேண்டுமென்றால், உயிரினங்களை வைத்துச் சொன்னால்தான் அழுத்தமாகப் பதியும் என்பதைத் திடமாக நம்பியவர், கம்பர். இரை தேடச் சென்ற ஆண் புறா திரும்பிவரும்போது கோபுர வாசலில் ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் ஒரு பெண் புறாவை, உண்மையான பேடை என்று நம்பி, அதன் பக்கத்தில் சென்று உட்கார்ந்திருக்கிறது. இதனைத் தொலைவில் இருந்துப் பார்த்த பெண் புறா, தன் கணவன் வேறோர் பெண்ணோடு வாழத் தொடங்கிவிட்டான் என்று கருதி ஊடல் கொள்ளுகிறது. 
அந்த ஊடல் முற்றிப் பெண்புறா, இனி இந்த உலகத்தில் வாழக்கூடாது என்று நல்ல தவசிகள் வாழ்கின்ற விண்ணுலகம் சென்றுவிட்டதாம். இந்தக் காட்சியைப் படைத்த கம்பர், ஆண் புறாவைத் தண்டிக்க பெண்புறாவிற்கும் தவறு செய்கின்ற உரிமையை வழங்கவில்லை. பாடல் வருமாறு:
தாவில் பொற்றலத்தின் நல்தவத்தினோர்கள் தங்கு தாள்,
பூவுயிர்த்த கற்பகப் பொதும்பர், புக்கு ஒதுங்குமால்
ஆவியொத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே
(பாலகாண்டம், நகரப்படலம், 22-ஆவது பாடல்)
மகளிரின் மாண்பைக் காக்கும் காட்சி, ஏசுநாதர் வாழ்க்கையிலும் உண்டு. ஏசுநாதர் உபதேசித்துக் கொண்டுச் செல்கின்றபோது ஒரு சிற்றூரில், திருச்சபை வாசலில் தங்குகிறார். அப்பொழுது அவ்வூர்க்காரர்கள் நடத்தை கெட்ட ஒருத்தியை அழைத்துக் கொண்டு வந்து, அவர் முன் நிறுத்தி, இறைத்தூதரே! இவள் ஒரு கெட்ட நடத்தைக்காரி! இவளைத் தாங்கள் சரியான முறையில் தண்டிக்க வேண்டும்; என வேண்டுகின்றனர். 
அப்பொழுது ஏசுநாதர், உங்களிலே யாராவது ஒருவர் பாவச்செயலினைச் செய்யாதவர்களாக இருந்தால், கல்லெடுத்து அவள் மேல் எறியுங்கள் எனச் சொல்லிக் கீழே குனிந்து எதையோ எழுதினார். எழுதிவிட்டு அவர் தலை நிமிர்ந்து பார்த்தபொழுது, ஓர் ஆடவர்கூட அங்கு இல்லை; காக்காய் கூட்டத்தைவிட விரைந்து பறந்துவிட்டனர். 
ஏசுநாதர் அப்பெண் செய்த குற்றத்தை அங்கீகரிக்கவில்லை; நியாயப்படுத்தவும் இல்லை. அந்தக் குற்றம் ஆடவர்களிடத்தும் இல்லாதிருக்க வேண்டும் என்பதே, அவர் சொல்லாமல் சொன்ன நீதி.
திருக்குரானிலும் பெண்மையைப் போற்றிப் பாதுகாக்கும் ஓர் அரிய செய்தி காணப்படுகிறது. செல்வங்களுக்குள் தலை சிறந்த செல்வம் பெண்ணே! ஓர் ஆடவன் மனைவிக்கு ஆடையாக இருக்க வேண்டும்; ஒரு பெண் கணவனுக்கு ஆடையாக இருக்க வேண்டும் என இறைமறை செப்புகின்றது. காரணம், மானத்தைக் காப்பது ஆடையல்லவா? 
ஆண், பெண் சமத்துவத்தைப் பாரதி, பாடியதுபோல் மற்றெவரும் பாடவில்லை எனலாம்.
பெண் அறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதலின்பத்தைக் காத்திடு வோமடா!
திருமணமான ஒரு பெண் விருப்பப்பட்டால், யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் எனும் வாழ்க்கையைக், காட்டுமிருகங்கள் வாழ்கின்ற வாழ்க்கை என்றும், அப்படிச் சொல்லுபவரை வீரமிலா மனிதர்கள் என்றும் ஏசினான், பாரதி! ஐரோப்பாவுக்கு வேண்டுமானால், அந்த வாழ்க்கைப் பொருத்தப்படலாம்; இந்திய மண் ஏற்காது அந்த வாழ்க்கையை என்றான் அம் மாகவிஞன்.
காதலிலே விடுதலை என்றாங்கோர் கொள்கை
கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம் வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்,
வேதனையொன்று இல்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் தனைக்கூட வேண்டும் என்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
எனப் பொய்ம்மை வாதங்கள் சடசடவென வீழுமாறு, பாட்டால் முரசறைந்தான், பாரதி!
சுவாமி விவேகானந்தரின் சீடர், நிவேதிதா தேவி, சுவாமிஜி சித்தியடைந்தவுடன் ஒருமுறை அயர்லாந்துக்குச் சென்றார். இந்தியாவில் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு அங்கு வந்திருக்கின்ற நிவேதிதாவைப் பார்த்து, இந்தியா உங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்கிறீர்கள்; அங்கு மிகவும் ஆச்சரியப்படத்தக்க விசயம் என்று எதைக் கருதுகிறீர்கள்? எனக் கேட்டனர். 
நிவேதிதா அதற்குப் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தார். அப்பொழுது அவருடைய இளமைக்கால தோழியரில் ஒருவர், இந்தியாவின் இமயமலை உனக்கு ஆச்சரியமாகப் படவில்லையா? எனக் கேட்டார்.
அதற்கு நிவேதிதா இல்லை எனப் பதிலுரைத்தார். உடன் மற்றோர் தோழி, அங்கிருக்கும் தாஜ்மகால் உனக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லையா? எனக் கேட்டார்.
அதற்கு நிவேதிதா, எனக்கு இமயமலையோ, தாஜ்மகாலோ ஆச்சரியமாகப்படவில்லை. ஆனால், அந்த நாட்டிலே மழைக்கோ, வெயிலுக்கோ பயந்து பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காத தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வீரயுகக் கதைகளைச் சொல்லி, அவர்களை அர்ஜுனனாகவும், அபிமன்யூவாகவும் ஆக்குகிறார்களே, அதுதான் ஆச்சரியம் என்றார்.
அப்படி நிவேதிதா தேவி போன்ற பெண் துறவியாலேயே போற்றிப் புகழப்பட்ட பெண்மைக்குப் பங்கம் வராமல் காப்பதுதான் அறிவார்ந்த செயலாகும்; ஆண்மையுள்ள செயலாகும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com