இமயம் முதல் குமரி வரை 

அண்மைக்காலமாக தேசியம் என்ற சொல் தமிழ் இதழ்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்திய தேசியம் போற்றத்தக்க பல தனித்தன்மைகளை உள்ளடக்கியது.

அண்மைக்காலமாக தேசியம் என்ற சொல் தமிழ் இதழ்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்திய தேசியம் போற்றத்தக்க பல தனித்தன்மைகளை உள்ளடக்கியது. இதனை ஐரோப்பிய யூனியனுடனோ ஐக்கிய அமெரிக்க நாட்டுடனோ ஒப்பிடமுடியாது. முன்னது, 
வர்த்தக நலனை மட்டுமே கருத்திற்கொண்டு உருவானது. பின்னது, ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பல நாட்டு மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி, பிரிட்டனுக்கு எதிராக ஏற்படுத்திக்கொண்ட கூட்டமைப்பு. அதனால்தான் வட அமெரிக்காவின் செனட் எனப்படுகிற மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமாக இரண்டிரண்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியாவைப் பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர்கள்தான் அவர்களை வென்று ஏக இந்தியாவைத் தோற்றுவித்தனர். ஆங்கிலேயர்கள் இவ்வாறு செய்யவில்லையென்றால் இந்திய தேசியம் என்ற ஒன்றே இராது என்றெல்லாம் சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். 
தமிழ்நாடு கூட ஒரே அரசின்கீழ் என்றும் இருந்தது கிடையாது. சேர, சோழ, பாண்டியர்களும் மேலும் பல சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தனர். சேர, சோழ, பாண்டிய நாடுகள் தவிர, நடு நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு என்ற உட்பிரிவுகளும் இருந்துவந்தன. அதனால், தமிழ்நாடு கிடையாது என்பதுபோல இருக்கிறது, இந்திய தேசியத்துக்கு எதிரான கருத்தாக்கம்.
தேசியம் என்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் இயல்புகள், வாழ்வியல் முறை, எண்ணங்கள், சிந்தனைகள், கலாசாரம் ஆகியவற்றால் அமைவது. அரசு என்பது வேறு; தேசியம் என்பது வேறு. அரசுகளும் ஆட்சிகளும் அந்தந்த அரசர்களின் ஆற்றல், பகை வெல்லும் திறன், விருப்பம் ஆகியவற்றை ஒட்டி அமையும். ஆட்சிகள் மாறினாலும் தேசியம் மாறாது. இன்றைய ஜனநாயகத்தில் மாநிலங்கள், நிர்வாக வசதிக்கேற்ப அமையும். 
ஆங்கிலேயர் ஆட்சியில் பல மொழிகள் பேசும் மக்கள், ஒரே மாநிலத்தில் இருந்த நிலையை மாற்றி, மொழிவாரி மாநிலங்களைத் தோற்றுவித்தது சுதந்திர இந்தியா. பின்னர், ஒரே மொழி பேசும் மாநிலங்களையும் நிர்வாக நலன் கருதி உத்தரகண்ட் என்றும், சத்தீஸ்கர் என்றும், ஜார்க்கண்ட் என்றும், தெலங்கானா என்றும் பிரித்தோம். சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டை வளர்ச்சி கருதி, வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் எழுப்பினார். எனவே, மொழியும் மாநிலங்கள் பிரிப்பும் தேசியத்தின் கூறுகள் ஆகமாட்டா.
ஒவ்வொரு தேசியத்திற்கும் முதல் அடையாளம் அங்கு வாழும் மக்களின் இயல்புகள். அவற்றின் அடிப்படையிலேயே அவர்களின் எண்ணங்கள், அவற்றால் முதிர்ந்த சிந்தனைகள், வாழ்வின் குறிக்கோள், கலாசாரம் ஆகியவை பரிணமிக்கின்றன. 
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு ஓர் இயல்பு இருக்கும். பிரெஞ்சுக்காரர்கள் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை நேசிக்கும் இயல்பினர். இந்தியர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பார் சுவாமி விவேகானந்தர். இவ்வியல்புகள் சரியா, தவறா என்பது அவரவர்கள் கருத்துக்கு உட்படும். ஆனால், இவ்வுண்மை நிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இமயம் முதல் குமரி வரை பல ஒற்றுமைகள் நிலவுவதைத்தான், இமயம் முதல் குமரிவரை என்கிற சொற்றொடர் காட்டுகிறது. இது வடமொழியில், ஆ சேது ஹிமாசலம் என்று சொல்லப்படும். இவ்வழக்காறுகள் ஆங்கிலேயர்களோ முகலாயர்களோ இந்தியாவை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதற்கு முன்னரே தோன்றியுள்ளன. வடநாட்டிலுள்ள ஒருவர் காசியில் நீராடிவிட்டு ராமேஸ்வரத்தில் நீராடவேண்டும் என்பதும் அவ்வாறே. இரண்டு தீர்த்தங்களிலும் நீராடல் எல்லாருக்கும் அவசியம் என்ற விதியும் இந்திய தேசியத்தின் வெளிப்பாடு. 
பாரதப்போரில், தமிழ்நாட்டின் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இரு தரப்பினருக்கும் வரையாது உணவளித்ததும் இந்திய தேசியத்தின் இயல்பே. அதனால்தான் தமிழ்ப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயரால் வடநாட்டுப் பொற்கோட்டு இமயத்தையும் தென்னாட்டுப் பொதியத்தையும் ஒன்றாகக் காணமுடிந்தது.
வடநாட்டு அயோத்தி அரசனான ராமபிரான், தமிழ்நாட்டுக் கடலுக்கு வந்ததும், இடையில் குகனையும் சுக்ரீவனையும் விபீடனையும் இளவல்களாக ஏற்றுக்கொண்டதும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அழியா அடையாளங்கள் என்பார் அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புராணங்கள் என்று ஒதுக்குவது சரியல்ல. இவை இதிகாசங்கள் எனப்படும். இதி காசம் என்றால் இவ்வாறு நிகழ்ந்தது என்று பொருள். இவற்றை நம்ப மறுப்பவர்களும் தேசிய சிந்தனை அந்நூல்களில் காணப்படுவதை மறுக்கமுடியாது.
வடநாட்டு ராமாயணத்தின் ஏக பத்தினி விரதமும் தமிழ்நாட்டுத் திருவள்ளுவம் ஏத்தும் கற்புநெறியும் ஒரே தேசிய சிந்தனையன்றோ? ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து என்று வடமொழி கூறுவதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புறநானூறு புகல்வதும் ஒன்றுதானே? குஜராத்தில் பிறந்த காந்தி தமிழ்நாட்டு விவசாயியைப் பார்த்துத்தானே அரைவேட்டி கட்ட ஆரம்பிக்கிறார்?
வங்கத்தில் பிறந்த விவேகானந்தரை உலக சர்வ சமய மாநாட்டிற்கு அனுப்பியது தமிழ்நாடுதானே? விவேகானந்தர் திரும்பி வருகையில் வங்கம் செல்லாது தமிழ்நாட்டு மண்ணில் புரண்டு மகிழ்ந்ததும் இயல்பான தேசிய உணர்வின் வேட்கைதானே? வங்கத்து அரவிந்தர் புதுச்சேரியில் புகுந்து ஆன்மத் தேடல் நிகழ்த்தியதும் தேசியச் சிந்தனைதானே?
பாரதியாரின் சிந்துநதியின் மிசையும், சுந்தரத் தெலுங்கும், கங்கைநதிப்புரத்து கோதுமையும், காவிரியின் வெற்றிலையும், மராட்டியர் கவிதையும், சேரத்துத் தந்தங்களும் கூறுவது இந்திய தேசியமன்றோ? செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரதியாரே இந்திய தேசியத்தை வரையறை செய்துவிட்டாரே?
1962-இல் சீனப் படையெடுப்பின்போது வேற்றுமை என்ற பேச்சுக்கே இடம் கொடாது, இந்தியர்கள் அனைவரும் ஒரேகுரலில் வீறுகொண்டு எழுந்ததை நாம் பார்த்தோமே! பல நாடுகளின் எதிர்பார்ப்புகளையும் விழைவுகளையும் தவிடுபொடியாக்கி ஒன்றுபட்ட இந்தியா உலக அரங்கிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பீடுநடைபோட்டு வருகிறது. செய்யவேண்டுவன அதிகம் இருந்தாலும் தாமதத்திற்கோ, குறைகளுக்கோ இந்திய தேசியம் தடையல்ல. 
தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் தரமறுக்கிறதென்றால், அந்தமாநில அரசின் தவறன்றி வேறில்லை. இந்திய தேசியத்தாலும் ஒருமைப்பாட்டாலும் செய்யமுடியாததை வேறெந்த சக்தியாலும் நிறைவேற்றமுடியாது. முன்னர் காங்கிரஸ் ஆட்சிகளில் செய்ததைப்போல் மாநில அரசுகளை மத்திய அரசு, நினைத்தவண்ணம் அகற்ற முடியாது. 
குறைகளோ, வேற்றுமைகளோ இருந்தால், அவற்றைத் தீர்க்க உச்சநீதிமன்றம் உள்ளது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பயிலும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசின் உதவியுடன் வெற்றிகிட்டவில்லையா?
இருப்பினும் சில தவறான அச்சங்கள் தோன்றுவதும் தோற்றுவிக்கப்படுவதும் இயல்பே. வடமொழி திணிக்கப்படுவதாக ஒரு தவறான கருத்து உலவுகிறது. தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலும் வடமொழி கற்பிக்கப்படுவதில்லை. வடமொழி, தமிழ்மொழி போல ஒரு செம்மொழி. தமிழ் மொழி மற்ற மொழியினராலும் படிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிற நாம், வடமொழியை யாரும் விருப்பப்பாடமாகக் கூடப் படிக்கக்கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்? யாரோ சிலர் வடமொழி படிப்பதால், தமிழ் அழியும் என்று அஞ்சுவது ஏற்புடையதல்ல. அது, தமிழின் சீரிளமைத் திறனை ஐயுறுவதாகும்.
தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலமும் பயிற்று மொழிகளாக உள்ளன. வேலைவாய்ப்பு, மேற்படிப்பு முதலியவற்றைக் கருத்திற்கொண்டு சிலர் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். மாவட்ட நிலைவரை உள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது; தீர்ப்புகளும் தமிழிலேயே எழுதப்படுகின்றன. உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் ஆங்கிலம் பயன்படுவது தேவை என்ற கருத்து தவறல்ல. எது எவ்வாறாயினும் இவற்றை உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுத் தீர்வு காணலாம். உச்சநீதிமன்றத்தில் தமிழர்களும் நீதிபதிகளாக உள்ளனர். 
நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ. போன்ற விஷயங்களில் எதிர்ப்பு கிளம்பியபோது, கல்வியை மாநிலப்பட்டியலுக்குத் திரும்பத்தரவேண்டும் என்று சில குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அன்றைய இந்திரா காந்தி அரசுதான். காங்கிரஸின் கூட்டணிக் கட்சியாகப் பல பத்தாண்டுகள் திமுக இருந்துள்ளது. 
தனக்கு வேண்டிய துறைகளை அடம்பிடித்துப் பெறும் வல்லமைகொண்ட திமுக கல்வித்துறையைக் கேட்கவுமில்லை, அது மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவுமில்லை. இதற்கு இந்திய தேசியத்தைக் குறை கூறுவது அறமா? 
இந்திய தேசியம் என்பது புனிதமானது. அது தேச பக்தியையும் மாநிலங்களின் மாண்பையும் உள்ளடக்கியது. லட்சோப லட்ச மக்கள் அதற்காக தியாகம் செய்துள்ளனர். அதனைப் போற்றுவோம். எல்லா மக்களின் நியாயமான உரிமைகளையும் வேட்கைகளையும் நிறைவு செய்வோம். 
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 
வாழிய பாரத மணித்திரு நாடு! 
என்பதுதான் சரியான தேசிய அணுகு
முறையாக இருக்க முடியும்!

கட்டுரையாளர்:
அஞ்சல் துறை அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com