முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: ஏப். 4-ஆம் தேதி கடைசிநாள்

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஏப்.4-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஏப்.4-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு உரிய 50 சதவீத இடங்களுக்கும், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கும் 50 சதவீத இடங்களுக்கும், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் மொத்த இடங்களுக்கும் ஒருங்கிணைந்த கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்  www.tnhealth.org, www.tnmedicalselection.org  என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரம்.
இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 4-ஆம் தேதி கடைசியாகும். இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிண்ட் எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 5 ஆகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், மருத்துவக் கல்வி தேர்வுக்குழு, 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களின் அடிப்படையிலான தகுதிப் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் நடைபெறும். கலந்தாய்வு நிறைவடைந்து முதுநிலை மருத்துவ வகுப்புகள் மே மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்?
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை (ஏப்.1) முடிவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் போதுமானதாக இல்லை. எனவே, 3 நாள்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தேர்வுக்குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் சில நாள்கள் நீட்டிப்பது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கால அவகாசம் நீட்டிப்பது குறித்த உத்தரவு சனிக்கிழமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com