பி.இ. முதலாமாண்டு மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுத ஆர்வம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு!

இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்) சேருவதற்கு தேசிய அளவிலான தகுதி தேர்வை (நீட்) எழுத, பி.இ. முதலாமாண்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பி.இ. முதலாமாண்டு மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுத ஆர்வம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு!

இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்) சேருவதற்கு தேசிய அளவிலான தகுதி தேர்வை (நீட்) எழுத, பி.இ. முதலாமாண்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காமல் பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர்கள், தகுதித் தேர்வின் மூலமாக வரும் கல்வியாண்டில் எப்படியாவது மருத்துவத்தில் சேர்ந்துவிடுவது என்ற முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல், ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 முடித்த மாணவர்களும் தீவிர பயிற்சியுடன் 'நீட்' தகுதித் தேர்வை சந்திக்க தயாராகி வருவது, நடப்பு கல்வியாண்டை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களின் எம்.பி.பி.எஸ். வாய்ப்பைக் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின் காரணமாக 'நீட்' தகுதித் தேர்வை எழுத வயது உச்சவரம்பே இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இந்தத் தகுதித் தேர்வை எழுத அதிகபட்ச வயது உச்ச வரம்பு 25 என, இத்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) நிர்ணயித்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 25 வயதுக்கு மேல் உள்ளவர்களும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, பிளஸ் 2 மதிப்பெண்ணைக் கணக்கில் கொள்ளாமல், முழுவதும் 'நீட்' தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடைபெற உள்ளது.

இதன் மூலம், ஏற்கெனவே பிளஸ் 2 முடித்து பல்வேறு படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும், மருத்துவராகும் கனவில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.

அதுபோல, அரசு மற்றும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ. முதலாமாண்டு படித்து வரும் மாணவர்களும் 'நீட்' தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி விடுதியில் தங்கி பி.இ. படித்து வந்த 20 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தற்போது 'நீட்' பயிற்சிக்காக கல்லூரி விடுதியைக் காலி செய்துவிட்டு இந்தத் தேர்வுக்கு படிப்பதற்காக வெளியில் இருந்து பொறியியல் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இதுபோல், மேலும் பல பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பொறியியல் பாடங்களில் கவனம் செலுத்துவதை விட்டு, 'நீட்' பயிற்சியில் தீவிரம் காட்டி வருவதாக தனியார் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பிரபல கல்வி ஆலோசகரும், தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகியுமான ஜெயபிரகாஷ் காந்தி கூறியது:

நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் ஒரே பாடத் திட்டத்தைக் கொண்டுவராமல், 'நீட்' தகுதித் தேர்வை கட்டாயமாக்குவது ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. அதுமட்டுமின்றி வயது உச்ச வரம்பும் நீக்கப்பட்டுவிட்டது. பிளஸ்-2 மதிப்பெண்ணுக்கும் முக்கியத்துவம் இல்லை என்றாகிவிட்டது.

இதனால், ஏற்கெனவே பிளஸ்-2 முடித்து கல்லூரிகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்கள், தற்போது எம்.பி.பி.எஸ். சேருவதற்காக 'நீட்' தேர்வு எழுத விரும்புகின்றனர். இது, நடப்பு பிளஸ் 2 மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கனவை கடுமையாக பாதிக்கும்.

இந்த கடும் போட்டியின் காரணமாக, பள்ளியில் பிளஸ் -1 படிக்கும் மாணவர்களும் பாடத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு 'நீட்' பயிற்சியில் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

என்னுடைய பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவரின் பெற்றோர், அந்த மாணவர் 'நீட்' பயிற்சிக்கு செல்வதற்காக பள்ளிக்கு தினமும் வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். இது கல்வித் தரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

இத்தனை ஆண்டுகள், மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்து முழுவதும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர்களான தமிழக மாணவர்கள், சிறப்பான முறையில்தான் மருத்துவம் பாரத்து வருகின்றனர். இதில் எந்தக் குறையும் இதுவரை ஏற்பட்டுவிடவில்லை.

எனவே, நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் கொண்டுவரும் வரை தமிழகத்தில் 'நீட்' தேர்வை அனுமதிக்கக்கூடாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com