மாணவர் சேர்க்கை ரத்து: திரிசங்கு நிலையில் 1,000 அரசு மருத்துவர்கள்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து 1,000 அரசு மருத்துவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
மாணவர் சேர்க்கை ரத்து: திரிசங்கு நிலையில் 1,000 அரசு மருத்துவர்கள்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து 1,000 அரசு மருத்துவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி முதுநிலை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீத போனஸ் மதிப்பெண் வழங்கும் வகையிலான ஓர் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில் 'நீட்' தேர்வு மதிப்பெண் மற்றும் போனஸ் மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மே 8 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.
95 சதவீதம் அரசு மருத்துவர்கள்: இந்தக் கலந்தாய்வில் 95 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ இடங்கள் கிடைத்தன. அரசுப் பணியில் இல்லாதோருக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மலைப்பிரதேசங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய சுமார் 1,000 மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ இடங்கள் கிடைத்தன.
காலியிடங்கள்: இதையடுத்து, அரசு மருத்துவர்கள் தாங்கள் பணியாற்றிய இடங்களிலிருந்து விடுபட்டு முதுநிலை படிப்பில் சேர்ந்தனர். முதுநிலை படிப்பில் சேர்ந்ததால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சுமார் 700 அரசு மருத்துவர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டது.
மீதம் உள்ள இடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த மருத்துவர்களை அமர்த்தும் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
புதிய குழப்பம்: இந்த நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதால், முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ள சுமார் 1,000 அரசு மருத்துவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் புதிய தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி அதில் முதுநிலை இடம் கிடைக்காதபட்சத்தில் அவர்களால் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது, படிப்பையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஞானப்பிரகாசம் கூறுகையில், '20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியிருந்தால் இதுபோன்ற பிரச்னைகளே ஏற்பட்டு இருக்காது. 95 சதவீத இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்படும் தருணத்தில், இப்படி ஒரு உத்தரவு வெளிவந்துள்ளது.
இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ளோரின் நிலை என்ன என்பது குழப்பமாக உள்ளது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com