முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து: 3 நாள்களுக்குள் புதிய தகுதிப் பட்டியல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிரடியாக ரத்து செய்தது.

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிரடியாக ரத்து செய்தது. மூன்று நாள்களுக்குள் புதிய தகுதிப் பட்டியலைத் தயார் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யக் கோரி மருத்துவர் பிரணிதா தாக்கல் செய்த மனு விவரம்:
இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான புதிய விதிப்படி, கிராமப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின் போது, சலுகை மதிப்பெண் வழங்கப்படாது. ஆனால், எளிதில் அணுக முடியாத, மலைப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த விதிகளுக்கு மாறாக, கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் (Weightage)  வழங்கும் வகையில், கிராமப்புறம் என்ற பிரிவை இணைத்து கடந்த மே 6-ஆம் தேதி தமிழக அரசின் சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.
அரசின் இந்த நடைமுறையால், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தனியார் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும். எனவே, புதிய அரசாணை அடிப்படையில் வெளியிடப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதிப் பட்டியலை ரத்து செய்து மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, கடந்த மார்ச் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநில அரசின் விளக்கக் குறிப்பேட்டில் உள்ள பகுதிகளில் கிராமப்புற பகுதிகளை இணைத்து திருத்தம் கொண்டு வந்து, கடந்த மே 6-ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை (எண்.1054) ரத்து செய்கிறோம். அதேநேரத்தில், மே 7-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலில், மாநில அரசின் விளக்கக் குறிப்பேட்டில் இணைக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மதிப்பெண்கள் செல்லும். எனவே புதிய தகுதிப்பட்டியலைத் தயார் செய்து மூன்று நாள்களுக்குள் வெளியிட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com