நீட் தேர்வு : பஞ்சாப் மாணவர் நவ்தீப் சிங் முதலிடம்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பஞ்சாப் மாணவர் நவ்தீப் சிங் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
நீட் தேர்வு : பஞ்சாப் மாணவர் நவ்தீப் சிங் முதலிடம்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பஞ்சாப் மாணவர் நவ்தீப் சிங் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 11 லட்சத்து 38,890 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் அதிகபட்சமாக ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13,033 பேரும் ஹிந்தியில் 1 லட்சத்து 20,663 பேரும் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தனர். தமிழில் தேர்வெழுத 15,206 பேர் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 10 லட்சத்து 90,085 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
6.11 லட்சம் பேர் தேர்ச்சி: தேர்வு முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 6 லட்சத்து 11,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வை எழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் 11 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, மேற்கொண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முதல் மாணவர்: அகில இந்திய அளவில் பஞ்சாப்பைச் சேர்ந்த நவ்தீப் சிங் என்ற மாணவர் 697 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார். இவர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அர்சித் குப்தா மற்றும் மனீஷ் முல்சந்தானி ஆகியோர் 695 மதிப்பெண் பெற்று முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.
65 ஆயிரம் இடங்கள்: இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி நாடு முழுவதும் மொத்தம் 470 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 65,170 எம்.பி.பி.எஸ். இடங்களும், 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீடு: மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாநில ஒதுக்கீடு: மாநில ஒதுக்கீட்டு இடங்களை அந்தந்த மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் கலந்தாய்வு மூலம் நிரப்புவர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் மாநில அரசே கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 25 இடங்களில் தமிழகத்துக்கு இடமில்லை

நீட் தேர்வு முடிவில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
தமிழகத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதியதில் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியில்எழுதியுள்ளனர். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. மேலும் மொத்த மதிப்பெண் 720-க்கு தமிழக மாணவர்கள் சராசரியாக 300 மதிப்பெண் வரையே பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் சங்கீர்த் சதானந்தா என்ற மாணவர் 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். கேரளத்தில் 3 மாணவர்களும், தெலங்கானாவில் 2 மாணவர்களும், ஆந்திரத்தில் ஒரு மாணவியும் முதல் 25 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
மாணவிகளைக் காட்டிலும் மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். மதிப்பெண் பட்டியலில் முதல் 7 இடங்களையும் மாணவர்களே பெற்றுள்ளனர். 25 பேர்களில் 9 பேர் மட்டுமே மாணவிகள் மீதம் 16 பேர் மாணவர்களே ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com