பிளஸ் 2 கணிதத்தேர்வு: 6 மதிப்பெண் வினாக்கள் கடினம்

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிதாக இருந்தது இருப்பினும் 6 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த சில வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிதாக இருந்தது இருப்பினும் 6 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த சில வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர உதவும் கட் ஆஃப் மதிப்பெண்ணை தீர்மானிப்பதில் கணித பாடம் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தப் பாடத்தைப் பொருத்தவரை கடந்த 6 ஆண்டுகளில் எளிமை, கடினம், சராசரி என வினாத்தாளின் தன்மை மாறிக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான கணிதத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை முகப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய ரா.பூங்குழலி, எம்.ரம்யா, கே.கதிரவன் உள்ளிட்ட மாணவர்கள் கூறியது: கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. 6 மதிப்பெண் வினா பகுதியில், மையம் 2, 5 இயக்க வரைகளுக்கு இடைப்பட்ட தூரம் என்ற 55-ஆவது வினா, அதே கேள்வி எண்ணில் தொகை நுண் கணித பாடத்தில் கேட்கப்பட்டிருந்த மற்றொரு வினா உள்பட 3 வினாக்கள் கடினமாக இருந்தன. மேலும் கலப்பு எண்கள் குறித்து கேட்கப்பட்ட 45-ஆவது வினா சற்று குழப்பமாக இருந்தது.
இருப்பினும் 10 மதிப்பெண் வினா பகுதியில் மொத்தம் உள்ள 15 வினாக்களில் 1 வினாவை தவிர மற்ற வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. எனவே 180-க்கும் மேல் மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இது குறித்து வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் பாஸ்கர் கூறியது: நிகழாண்டு பிளஸ் கணித வினாத்தாள் சராசரி மாணவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்திருக்கும். குறிப்பாக 6 மதிப்பெண் பகுதியில் 15 வினாக்களில் கட்டாய வினா உள்பட 5 வினாக்கள் சற்று யோசித்து பதிலளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது.
காப்பி: 20 மாணவர்கள் பிடிபட்டனர்
பிளஸ் 2 கணிதம், விலங்கியல் பாடங்களில் காப்பியடித்ததாக 20 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கான தேர்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக கணிதத் தேர்வை 5 லட்சத்து 368 மாணவர்களும், விலங்கியல் தேர்வினை 87,125 மாணவர்களும் எழுதினர்.
இந்தநிலையில் சேலம், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விலங்கியல் பாடத்தில் காப்பியடித்ததாக 14 மாணவர்களும், கணித பாடத்தில் 6 மாணவர்களும் பிடிபட்டுள்ளனர். இந்த தகவலை அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com