மாணவர்களுக்கான விலையில்லாப் பொருள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 விலையில்லாப் பொருள்கள் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செயலர் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செயலர் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 விலையில்லாப் பொருள்கள் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறையைச் செம்மைப்படுத்தும் வகையில் ஆசிரியர் சங்கங்கள், கல்வித்துறை அலுவலர் சங்கங்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு 67 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர் சங்கங்களிடம் குறைகள் கேட்கப்பட்டு அவற்றுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்படும்.
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சைக்கிள்கள், மடிக்கணினி, நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், காலணி, கணித உபகரணப் பெட்டி ஆகியவை உள்பட 14 பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பொருள்களை ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று எடுத்து வர சிரமமாக உள்ளது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குத் தீர்வு காணும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பளு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அந்தந்தப் பள்ளிகளுக்கே பொருள்கள் நேரடியாக வழங்கப்படும்.
பள்ளிகளுக்கு 4,700 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது அதில் சிறிய குறைபாடுகூட இல்லை. அந்தப் பணிக்கு பிளஸ் 2 முடித்து ஓராண்டு அனுபவம் இருந்தால் போதுமானது எனக் கருதினோம். ஆனால் தற்போóது இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் இதில் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர்.
பள்ளிகள் மீது நடவடிக்கை: ஸ்மார்ட் அட்டை மூலம் ஒரு மாணவர் வேறு பள்ளிக்குச் செல்லும்போது மாற்றுச் சான்றிதழ் தேவைப்படாத அளவுக்கு அந்த அட்டையிலேயே அனைத்துத் தகவல்களும் இடம்பெறும் அளவுக்கு தயார் செய்யவுள்ளோம்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களை முறையாகப் பதிவு செய்யாத பள்ளிகள் குறித்துத் தெரிய வந்தால் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்ள அனைத்து நூலகங்களும் செயல்பட இரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பழைய பாடத் திட்டம் தொடரும்: மத்திய அரசின் சார்பில் 4,340 பள்ளிகளுக்கு கணினிக் கல்வி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 1,000 பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படியே புத்தகங்கள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com