'மாணவர்களின் பெயர்-படத்துடன் விளம்பரம் தேடக் கூடாது'

மாணவ-மாணவிகளின் பெயர், புகைப்படங்களுடன் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

மாணவ-மாணவிகளின் பெயர், புகைப்படங்களுடன் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்ககம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கை:
ரேங்க் முறை ரத்து தொடர்பாக கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், கற்றலில் ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலைத் தவிர்த்திடவும் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் ரேங்க் முறை கைவிடப்பட்டது.
தவறாமல் பின்பற்றுங்கள்:
ரேங்க் முறை ரத்துக்கான அரசாணையின் உள்ளடக்கமான கருத்துகளை பள்ளி நிர்வாகங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். மாணவர்களின் நலன் கருதி அரசால் வெளியிடப்பட்ட அரசாரணையின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில், ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் - பதாகைகள் அமைத்தல், நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியிடுதல் போன்ற செயல்பாடுகளைப் பள்ளி நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும்.
அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் இதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை விளம்பரங்கள்: சில தனியார் பள்ளிகள், தங்களது பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ - மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக அவர்களது பெயர் - புகைப்படங்களுடன் செய்தித்தாள்களில் மிகப்பெரிய அளவுக்கு அண்மையில் விளம்பரங்களைச் செய்தன. இந்த விளம்பரங்கள் அரசு வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக இருப்பதால் அதுபோன்ற விளம்பரங்களை வெளியிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com