பிளஸ் 1, பிளஸ் 2-க்கு தலா 600 மதிப்பெண்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளிலும் தலா 600 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2-க்கு தலா 600 மதிப்பெண்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளிலும் தலா 600 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் மாநில அளவில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
பிளஸ் 1 தேர்வுக்கு 600 மதிப்பெண்கள், பிளஸ் 2 தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் என மொத்தம் 1200 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றால் அந்தப் பாடத்தை பிளஸ் 2 வகுப்புக்குச் சென்ற பிறகு ஜூன், ஜூலை மாதத்தில் எழுதலாம். அல்லது பிளஸ் 2 இறுதித் தேர்வின் போதோ அல்லது கல்லூரிகளில் உள்ள போன்று அரியர் முறையிலோ எழுதிக் கொள்ளலாம்.
தொடர் கற்றலை ஊக்கப்படுத்த ஒவ்வொரு பாடத்திலும் 10 சதவீதம் மதிப்பெண்கள் அகமதிப்பீடாக அளிக்கப்படும்.
தேர்வு நேரம் குறைப்பு: தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் 35 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படும்.
பிளஸ் 1 செய்முறைத் தேர்வு, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுடன் இணைத்து நடத்தப்படும்.
இரண்டு தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஒருங்கிணைந்த முறையில் அளிக்கப்படும். இந்த மாற்றம் நிகழ் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.
பிளஸ் 1-இல் பொதுத் தேர்வு ஏன்?
 பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது குறித்துத் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு:
தமிழகத்தில் பிளஸ் 1 பாடங்களை கற்றுக் கொள்வதில் மாணவர்கள் முழு கவனம் செலுத்தாத சூழ்நிலை உள்ளது.
ஆனால், போட்டித் தேர்வுகளில் பிளஸ் 1 பாடத் திட்டத்தில் இருந்து ஏறத்தாழ 50 சதவீதத்துக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் பிளஸ் 1 மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களும், இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களும் சேர்த்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
நீட், ஐஐடி-ஜேஇஇ போன்ற தேர்வுகளை மாணவர்கள் எளிதில் சந்திக்க, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com