ராஜஸ்தானி சங்கப் பொன்விழா : கல்வி உதவித்தொகை பெற ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தானி சங்கத்தின் (தமிழ்நாடு பிரிவு) பொன்விழாவையொட்டி நிகழாண்டில் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க முடிவு

ராஜஸ்தானி சங்கத்தின் (தமிழ்நாடு பிரிவு) பொன்விழாவையொட்டி நிகழாண்டில் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் அசோக் குமார் மேத்தா, செயலர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சென்னையில் வியாழக்கிழமை (செப்.28) செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் ராஜஸ்தானி சங்கம் கடந்த 1967-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் பொன் விழா அக்டோபர் 1-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ளது. ராஜஸ்தானி சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்கள் 1,200 பேருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறோம். இந்த உதவித் தொகை ஒரு பருவத்துக்கு மட்டுமல்லாமல் பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படும். பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், சட்டம் உள்பட பல்வேறு துறைகளில் பயிலும் ஏழை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்விக்கான உதவிக்கான தொகை அந்தந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் நேரடியாகச் செலுத்தப்படும். கடந்த ஆண்டில் ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு ரூ.50 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம். 
எப்படி விண்ணப்பிப்பது? தகுதியுள்ள மாணவர்கள் ராஜஸ்தானி சங்கம் தமிழ்நாடு பிரிவு, எண் 220, என்.எஸ்.சி. போஸ் சாலை, கோல்டன் காம்ப்ளக்ஸ், 4-ஆவது தளம், சௌகார்பேட்டை, சென்னை. தொலைபேசி எண்:- 044- 25392438 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதேபோன்று கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் மாணவர்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம். 
மேலும் rajasthaniassn@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரி  தொடர்பு கொள்ளலாம். ஏழை மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே உதவித் தொகைகள் வழங்கப்படும். 
இது தவிர, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அடையாறில் உள்ள தர்மசாலா கட்டடத்தை மேம்படுத்துதல், தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் கண்பரிசோதனை முகாம்களை நடத்துதல், தொழில், படிப்பு மற்றும் மருத்துவ வசதிக்காக சென்னைக்கு வரும் ராஜஸ்தான் மக்களுக்கு ராஜஸ்தான் பவன் கட்டுதல், கண்காட்சி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com