'நெட்' தேர்வு: இனி இரண்டு தாள்கள் மட்டுமே உண்டு மூன்றாம் தாள் கிடையாது

தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும். மூன்றாவது தாள் இனி கிடையாது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும். மூன்றாவது தாள் இனி கிடையாது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்தத் தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. முதல் தாள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும். இரண்டாம் தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடிவடையும். மூன்றாம் தாள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவடையும்.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 
இதுதொடர்பான சிபிஎஸ்இ அறிவிப்பு:
'நெட்' தேர்வு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை 1 மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இதில் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும்.
வயது வரம்பு அதிகரிப்பு: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு இதுவரை அதிகபட்சம் 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி 30 வயதுடையவர்களும் இந்தத் தேர்வை எழுத முடியும்.
தேர்வு எப்போது?: 2018-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு ஜூலை 8 ஆம் தேதி நடத்தப்படும். மார்ச் 6 ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாளாகும். இதுதொடர்பாக விரிவான அறிவிப்பு சிபிஎஸ்இ இணையதளத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com