மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியீடு: நவ.2 -இல் நேர்காணல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை (அக்.19) வெளியாகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இன்று புதன்கிழமை (அக்.19) வெளியாகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நவம்பர் 2 -ஆம் தேதி நடைபெறும்.
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 750 பணியிடங்களுக்கு ஜூன் 19, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் இன்று புதன்கிழமை வெளியாகின்றன.
இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை பதிவிட்டு தங்களது மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.
நேர்காணல்: மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள், தமிழக அரசின் இடஒதுக்கீட்டின்படி ஒரு பதவிக்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நவம்பர் 2 -ஆம் தேதி நேர்காணல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான தேதி, இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தின் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஒரு தேர்வர் எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்ணை 85-க்கும், நேர்காணலுக்கான மதிப்பெண் 10-க்கும், கல்வித் தகுதியின் அடிப்படையில் 5 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கீடு செய்யப்படும். அதன்பின்பு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 044-2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
நீதிமன்ற உத்தரவு: ஏற்கெனவே தேர்வெழுதிய 525 தொழில்நுட்ப உதவியாளர்கள், 900 கள உதவியாளர்கள் ஆகிய இடங்களுக்கான தேர்வு முடிவுகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com