கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?

தமிழகம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால், நியமனங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?

தமிழகம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால், நியமனங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் மொத்த உற்பத்தி மதிப்பில் கால்நடைப் பிரிவின் பங்களிப்பு 4.31 சதவீதமாக உள்ளது. அதன் உற்பத்தி மதிப்பு கடந்தாண்டு ரூ.55 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. தேசிய அளவில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கையில் தமிழகம் 2ஆவது இடம் வகிக்கிறது. வெள்ளாடுகளின் எண்ணிக்கையில் 4ஆவது இடத்திலும், பசு இனங்களின் எண்ணிக்கையில் 7ஆவது இடத்திலும், எருமைகளின் எண்ணிக்கையில் 14ஆவது இடத்திலும் தமிழகம் உள்ளது. எனவேதான், வேளாண்மைக்கு நிகராக கால்நடைகளையும் பாதுகாத்து வருகின்றனர் விவசாயிகள். 19ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 88.14 லட்சம் பசு இனங்கள், 7.81 லட்சம் எருமை இனங்கள், 47.87 லட்சம் செம்மறி ஆடுகள், 81.43 லட்சம் வெள்ளாடுகள், 1.84 லட்சம் பன்றிகள், 14 ஆயிரம் குதிரைகள், 11.73 கோடி கோழி இனங்கள் உள்ளன.
கால்நடை வளர்ப்போரின் தேவையைக் கருத்தில்கொண்டு 1959-60ல் 120 என்ற எண்ணிக்கையில் இருந்த கால்நடை நிலையங்களின் எண்ணிக்கை 2015-16ல் 2,704 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாது, 6 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 22 கால்நடை பெரு மருத்துவமனைகள், 139 கால்நடை மருத்துவமனைகள், 2,481 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இதில், பன்முக மற்றும் பெரு மருத்துவமனைகள் 24 மணிநேரமும், இதர மருத்துவமனைகள் காலையில் 8 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகலில் 3 முதல் 5 மணி வரையும் இயங்கும் வகையில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில், கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, நோய் கண்டறிதல், நோய்த் தடுப்பு, நோயைக் குணப்படுத்துதல், இனப்பெருக்க வசதி அளிக்கப்படுகிறது. மடிவீக்கம், கருப்பை நோய், சுவாசக் குழாய் நோய், ஒட்டுண்ணி நோய் மற்றும் வைட்டமின் தாதுப்பொருள்கள் குறைபாடு போன்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோமாரி நோய், தொண்டை அடைப்பான், சப்பை நோய், துள்ளுமாரி நோய் மற்றும் கோழிக் கழிச்சல் நோய் ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, ஈனியல் சிகிச்சை, விபத்து சிகிச்சை என கால்நடைகளுக்கான அனைத்து சிகிச்சைகளும், வருமுன் காக்கும் வகையில் தடுப்பூசித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக, மொத்தம் 13 ஆயிரத்து 668 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில், இயக்குநர் நிலையில் 2 பணியிடம், 5 கூடுதல் இயக்குநர், 33 இணை இயக்குநர்கள், 3 முதுநிலை ஆராய்ச்சி அலுவலர், 43 துணை இயக்குநர்கள், 311 உதவி இயக்குநர்கள், 7 ஆராய்ச்சி அலுவலர்கள், 2,764 கால்நடை உதவி மருத்துவர்கள், 165 முதுநிலை கால்நடை மேற்பார்வையளர்கள், 2,861 கால்நடை ஆய்வாளர்கள், 4,621 கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
கால்நடை மருந்தகங்களில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் 2 கால்நடை பராமரிப்பாளரும் பணியில் இருக்க வேண்டும். கால்நடை கிளை நிலையங்களில் கால்நடை ஆய்வாளர், உதவியாளர் பணியில் இருப்பர். இதில், கால்நடை உதவி மருத்துவர் நிலையில் மட்டும் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல, இதர நிலைகளிலும் 50 சதவீதத்துக்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புகார் கூறுகின்றனர்.
இதனால், அதிக எண்ணிக்கையில் கால்நடை மருந்தகங்கள் உள்ள மாவட்டங்களான விழுப்புரம்-145, சேலம்- 134, திருவண்ணாமலை- 113, வேலூர்- 112, திருநெல்வேலி-101, தஞ்சாவூர்-100 ஆகிய மாவட்டங்களில் ஒரு மருத்துவரே குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 10 இடங்களில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதே நிலைதான், இதர மாவட்டங்களிலும் உள்ளன. பெரும்பாலான மருந்தகங்களுக்கு நாள்தோறும் கால்நடைகளுடன் வரும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் உள்ளது.
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்துக்குப் பிறகு மருத்துவ சேவை இருமடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய சூழலில், ஏற்கெனவே அங்கீகாரம் அளிக்கப்பட்ட பணியிடத்திலேயே பெருமளவுக்கு பற்றாக்குறை இருப்பதால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையே உள்ளது. கால்நடை மருத்துவம் படித்த பட்டதாரிகளும் வேலைவாய்ப்பின்றி பரிதவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாளர் பிரிவை நிர்வகிக்கும் துணை இயக்குநர் அலுவலக வட்டாரத்தினர் கூறியது: துறை ரீதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து வரும் காலிப் பணியிடங்களில் வரம்புக்குள்பட்டு பூர்த்தி செய்ய வேண்டிய பணியிடங்களுக்கு நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. கால்நடை உதவி மருத்துவர் பணியிடம் என்பது அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். மேலும், அந்தப் பணியிடங்களில் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றனர்.
 

3,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்!

தமிழக அரசின் கால்நடை பாரமரிப்புத் துறையில் இப்போதைய நிலவரப்படி, கால்நடை உதவி மருத்துவர்கள் நிலையில் 1,000, கால்நடை ஆய்வாளர்கள் நிலையில் 1,000, கால்நடை பராமரிப்பு உதவியாளர் நிலையில் 1,500 உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை மாவட்ட அளவிலேயே கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் அல்லது உதவி இயக்குநர்களே நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாவட்ட வாரியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக மாநில அளவில் நியமிக்க முடிவு செய்ததையடுத்து 7.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை பரிசீலனை செய்து நியமனங்கள் செய்வதிலும் 7 மாதங்களுக்கு மேலாக கோப்புகள் கிடப்பிலேயே உள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com