குரூப்-1 தேர்வில் முறைகேடு; உண்மைக்கு புறம்பானது: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப்-1 தேர்வில் முறைகேடு; உண்மைக்கு புறம்பானது: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு பணியாளர்

சென்னை: குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்யவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். இது உண்மைக்கு புறம்பானது என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் ்ளித்துள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 8.11.2015 அன்று நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வை 1,17,696 பேர் எழுதினர். இதில், தேர்ச்சி பெற்ற 3,816 பேருக்கு கடந்த ஆண்டு ஜூலை 29, 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் சென்னை மையத்தில் முதன்மைத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,926.

இந்த தேர்வின்போது ஒவ்வொரு மையத்திலும் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்குவது முதல், தேர்வு முடிந்து விடைத்தாள்களை கட்டுகளாக கட்டி முத்திரையிடப்பட்டு ஒப்படைக்கப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளும் தேர்வு பணிக்காக அமர்த்தப்பட்டவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் தேர்வாணைய அலுவலகத்தில் ஒவ்வொரு விடைத்தாளிலும் பதில் எண்கள் (டம்மி நம்பர்) இடப்பட்டு, விடைத்தாள்களை திருத்துவதற்காக வேறொரு பிரிவிற்கு மாற்றப்படுகிறது. விடைத்தாள்கள் பெறுவது, பதில் எண் இடுவது, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வது மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவது வரை அனைத்து பணிகளும் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலரின் கீழ் உள்ள பிரிவுகளால் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு விடைத்தாளும் அனுபவமிக்க மதிப்பீட்டாளர்களைக் கொண்டு இரண்டு முறை மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால் 3-வது மதிப்பீடும் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்புடனும், ரகசியத்துடனும், சந்தேகத்திற்கு இடமின்றியும் எந்தவித விதி மீறலுக்கும் இடம் கொடுக்காமல் நடைபெறுகிறது. பின்பு, தகுதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

ஆனால், இந்த தேர்வில் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது; உள் நோக்கம் கொண்டது. இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் இளைஞர்களின், குறிப்பாக தேர்வர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அவர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும், விரக்தியையும் ஏற்படுத்தும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நவீன மற்றும் வெளிப்படையான முறையில் தேர்வுகளை நடத்துவதில் தேசிய அளவில் ஒரு சிறந்த நிறுவனமாக கருதப்படுகிறது.
அப்படியிருக்கையில், ராமதாஸ் வெளியிட்டுள்ள அடிப்படை ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான அவதூறான செய்திகள் தேர்வாணையத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com