தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்

மத்திய அரசின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்


மத்திய அரசின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆக 4) ஆய்வு செய்தார்.

இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, தரமான, அதிநவீன சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்யும் வகையில், இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு லட்சம் மருத்துவ நண்பர்கள் (ஆயுஷ்மான் மித்ரன்) எனப்படும் உதவியாளர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எவ்வாறு மருத்துவ உதவியை பெறுவது என்பது குறித்து அறிந்துகொள்வதற்கு உதவிசெய்வார்கள். 

ஒரு லட்சம் மருத்துவ உதவியாளர்களை பணியமர்த்துவதற்காக சுகாதாரத் துறை அமைச்சகம், திறன் மேம்பாட்டு துறையிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கீகாரம் பெற்ற ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த உதவியாளர்  பணியில் ஈடுபடுவார். இவர்கள் நோயாளிகளுக்கு உதவி செய்வது மற்றும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்ட பயனாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கும் இடையே ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள். 

இவர்கள் திட்டத்திற்கான  தகுதி உள்ளதா என ஆய்வு செய்வது, திட்டத்தில் சேர்ப்பது மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதற்கான உதவி மையத்தையும் இவர்கள் செயல்படுத்துவர். 

இந்த திட்டத்தின் கீழ் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் மருத்துவ உதவியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை, நித்தி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள முன்னேற்றத்தை விரும்பும் பிஜப்பூர் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற விழாவில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதலாவது “சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தை” பிரதமர் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com