மதுரை எச்.சி.எல். நிறுவனத்தில் மேலும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர்

மதுரை எச்.சி.எல். நிறுவனத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மேலும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்

மதுரை எச்.சி.எல். நிறுவனத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மேலும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறினார்.

எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பொறியியல் பட்டப் படிப்பு சாராத பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கான அறிமுக கருத்தரங்கம் இலந்தைக்குளம் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெண்களுக்கான எச்.சி.எல்-ன் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து அந்நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

பெண்களுக்கான இந்த வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 700 பெண்கள் பதிவு செய்துள்ளனர். மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருக்கின்றனர். பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்கள்கூட 2 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர்.

அதிக மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பை முடிப்பவர்களில் பெரும் பகுதியினர் பெண்கள். இருப்பினும் அவர்களது இருப்பிடப் பகுதியில் சரியான வேலை இல்லாததால், வீட்டிலேயே இருக்கின்றனர்.

இத்தகைய பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் எச்.சி.எல். நிறுவனம் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே பணியாற்றி இடையிலேயே நின்றவர்கள், வணிகவியல், மானுடவியல், சமூக அறிவியல், அறிவியல் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த பட்டதாரிகள், எச்.சி.எல். நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் என நான்கு பிரிவுகளில் புதிய வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தகைய நபர்களுக்கு 3 மாதம் முதல் ஒரு வருடம் வரை பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்பிட்ட சில பயிற்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக் கட்டணம் வங்கிக் கடனுதவியாக அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்ட பிறகு 2 ஆண்டுக்குப் பிறகு மாதத் தவணையாக வங்கிக்கு செலுத்த வேண்டும்.

எச்.சி.எல். நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கென பிரத்யேக வசதிகள் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு மையம், மருத்துவ மையம், பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி வசதி போன்றவை இதில் அடங்கும்.

மதுரை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் 2016-இல் எச்.சி.எல். நிறுவனத்தின் செயல்பாடு தொடங்கியது. தற்போது 2 ஆயிரத்து 800 பணியாளர்கள் உள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மதுரை எச்.சி.எல். நிறுவனத்தில் மேலும் 3 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com