நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு: ஜூன் மாதத் தேர்வு ரத்து

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தேசிய அளவிலான தகுதித் தேர்வு நவம்பர் 19 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஜூன் மாதத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தேசிய அளவிலான தகுதித் தேர்வு நவம்பர் 19 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஜூன் மாதத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்தது.
கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.), நெட் தேர்வை நடத்தி வருகிறது.
2016 டிசம்பர் மாதத் தேர்வை, கடந்த ஜனவரி 22 -ஆம் தேதி நடத்திய சி.பி.எஸ்.இ., அதற்கு முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ஏராளமான தேர்வுகளை நடத்துவதன் மூலம் பணிச் சுமை அதிகரித்திருப்பதால், 'நெட்' தேர்வை இனி தங்களால் நடத்த இயலாது எனத் தெரிவித்திருந்தது.
ஆலோசனைக்குப் பிறகு, 'நெட்' தேர்வை சிபிஎஸ்இ தொடர்ந்து நடத்தும் என அண்மையில் யுஜிசி அறிவித்தது.
நவம்பர் 19 -இல் 'நெட்' தேர்வு: அதில், 2017 -ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு நவம்பர் 19 -ஆம் தேதி நடத்தப்படும். இதற்கு ஆகஸ்ட் 1 முதல் 30 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செலுத்தலாம். இதுதொடர்பான முழுமையான அறிவிப்பு ஜூலை 24 - ஆம் தேதி, சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத் தேர்வு ரத்து: 2017 ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டியத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக டிசம்பர் மாதத் தேர்வு நவம்பரில் நடத்தப்படுகிறது. இனி தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com