கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி: மருத்துவர் முகமது ரேலா

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தமிழக அரசு உரிய நிதி உதவி வழங்கி உறுதுணையாகத் திகழ்கிறது
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற சி.ரேகா, எஸ்.சங்கவி குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்கிறார் டாக்டர் முகமது ரேலா. உடன் மருத்துவர் நரேஷ் சண்முகம், குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அ
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற சி.ரேகா, எஸ்.சங்கவி குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்கிறார் டாக்டர் முகமது ரேலா. உடன் மருத்துவர் நரேஷ் சண்முகம், குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அ

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தமிழக அரசு உரிய நிதி உதவி வழங்கி உறுதுணையாகத் திகழ்கிறது என்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது ரேலா கூறினார்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் 18 மணி நேரத்தில் 3 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கி இருக்கின்றனர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக்குழுவினர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து குளோபல் மருத்துவமனை கல்லீரல் நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைத்துறை இயக்குநர் முகமது ரேலா செய்தியாளர்களிடம் கூறியது:
18 மணி நேரத்தில் 6 மாத, 18 மாத வயதுள்ள இரு குழந்தைகள் மற்றும் 8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவ உலகில் புதிய சாதனை.
நான்கு குழுக்கள் ஒருங்கிணைந்து 18 மணிநேரம் மேற்கொண்ட சிகிச்சை மூலம் 3 குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளனர்.
இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்தில் இதர மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் அதிக அளவில் நடைபெறுகிறது.
மாநில அரசின் நிதி உதவி மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் குறிப்பாக குழந்தைகள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்து இருக்கும் 3 குழந்தைகளில் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள வெள்ளியாவிளை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிறிஸ்துதாஸ்-பிச்சிரோஸ் தம்பதியின் 8 வயது மகள் ரேகாவும் ஒருவர்.
ரேகாவுக்கு கல்லீரல் நோய் மட்டுமல்லாமல்,அவளது நுரையீரலும் பாதிக்கப்பட்டு இருந்தது. நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி ரேகாவிற்கு சிகிச்சை அளிக்க வசதியில்லாத நிலையில், வெள்ளியாவிளை கிராமத்தின் நல்மேய்ப்பர் ஆலயத்தின் பாதிரியார் எஸ்.வின்சென்ட் தலைமையில் ஊர்மக்கள் நிதி திரட்டி, சிகிச்சைக்கு ரேகாவை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
ஏழை சிறுமியின் நோயைக் குணமாக்க ஊரே திரண்டு நிதி உதவி திரட்டி வழங்கி, மருத்துவ சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி இருப்பதை அறிந்து வியப்படைந்தோம்.
அவளுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மூளைச் சாவு மூலம் உயிரிழந்த 12 வயது சிறுமியிடம் இருந்து
உடல் உறுப்பு தானம் மூலம் பெற்ற கல்லீரலை ரேகா மற்றும் 18 மாதக் குழந்தை சங்கவிக்குப் பொருத்தினோம்.
ரேகா கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவச் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பல பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வு இன்றி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க இயலாத நிலையில் உள்ளனர்.
ரேகாவைப் போன்று அவர்களும் தங்களது குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி உயிர் காக்க முடியும் என்றார் அவர்.
மருத்துவர் நரேஷ் சண்முகம், மருத்துவ இயக்குநர் கெளதமன், தலைமை செயல் அதிகாரி ஹரிஷ் மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com