திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெப்பத்தில் வெந்து நோவும் பச்சிளம் குழந்தைகள்!

திண்டுக்கல் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் குளிரூட்டும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் வெப்பக் காற்றில் குழந்தைகள் பராமரிக்கப்படும் ஆபத்தான சூழல் உள்ளது.
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்படும் சிசுக்கள்.(கோப்பு படம்).
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்படும் சிசுக்கள்.(கோப்பு படம்).

திண்டுக்கல் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் குளிரூட்டும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் வெப்பக் காற்றில் குழந்தைகள் பராமரிக்கப்படும் ஆபத்தான சூழல் உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கான தனிப் பிரிவில், இங்கு பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி வெளியிடங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைமாத குழந்தைகள், மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இன்குபேட்டர், செயற்கை சுவாசக் கருவிகள், போட்டோதெரபி, குறிப்பிட்ட விசையுடன் மருந்து செலுத்துவதற்கான கருவி, வெப்பம் அளிக்கும் கருவி உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன.
இங்கு ஒரே நேரத்தில் 30 முதல் 50 குழந்தைகளை வைத்து பாரமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சைப் பிரிவில் குளிரூட்டும் வசதிக்காக 8 குளிரூட்டும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 8 இயந்திரங்களும் கடந்த 15 மாதங்களாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெளிக் காற்றோட்டத்திற்காக ஜன்னல் கதவுகளை மருத்துவமனை ஊழியர்கள் திறந்து வைத்துள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நண்பகல் முதல் மாலை வரை அனல் காற்று வீசுகிறது. இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் காற்றோட்டத்திற்காக மின்விசிறிகள் பயன்படுத்தப்படுவதால் வெளியிலிருந்து வரும் வெப்பக் காற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் வெளிப்புறங்களிலிருந்து கொசு, வண்டு உள்ளிட்ட பூச்சிகளாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும் இந்த சிகிச்சைப் பிரிவில் பழுதடைந்த குளிரூட்டும் இயந்திரங்களை சீரமைப்பதில் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து அச்சுறுத்தலில் இருந்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் கூறியது: பழுதடைந்துள்ள குளிரூட்டும் இயந்திரங்களின் நிலையை ஆய்வு செய்து அதனை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த முடியுமா? அல்லது புதிய இயந்திரங்கள் வாங்க வேண்டுமா என்பது குறித்து பொதுப்பணித்துறையினர் (மின்சாரப் பிரிவு)தான் முடிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும், இதுவரை ஆய்வு செய்வதற்கு கூட வரவில்லை. புதிய குளிரூட்டும் இயந்திரங்கள் வாங்க மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யவும் தயாராக உள்ளோம். பொதுப்பணித்துறையினரின் முடிவுக்காக கடந்த 15 மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com