கோடையின் உக்கிரம்: அம்மை நோய் பரவும் அபாயம்

கோடைகாலம் தொடங்கி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சின்னம்மை நோய் பரவும் அபாயம் உள்ளது.

கோடைகாலம் தொடங்கி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சின்னம்மை நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெரியம்மை இந்தியாவில் இருந்து முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா அம்மைக்கான தடுப்பு ஊசி முகாம் தமிழக அரசால் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சின்னம்மை: கோடைகாலத்தில் பரவலாக வருவது 'சிக்கன் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் சின்னம்மையே. இது ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாகவோ, இருமல், தும்மல் மூலமோ பரவும். மேலும், சின்னமையினால் உடலில் ஏற்படும் கொப்புளத்தின் நீரைத் தொடுவதன் மூலமும் பரவும். பாதிக்கப்பட்ட நபருக்கு கொப்புளங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக முதல் ஐந்து நாள்களில் நோய்த் தொற்று பிறருக்கு பரவும். கொப்புளங்கள் காய்ந்து உதிரும் சமயத்திலும் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் முடக்கம்: இந்த நோயின் தாக்கத்தின்போது காய்ச்சல், உடலில் கொப்புளங்கள், கொப்புளங்களில் அரிப்பு ஆகியவை ஏற்படும். சின்னம்மை நோய் தாக்கினால், பிற நோய்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. சிலர் தொற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மட்டும் செல்கின்றனர். சென்னையைப் பொருத்தவரை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இதுவரை 20 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதியில் பரவும்: விடுதிகளில் தங்கிப் படிப்போர் அல்லது விடுதிகளில் வசிப்போருக்கு சின்னம்மை பரவக்கூடிய வாய்ப்பு அதிகம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மகளிர் விடுதி, தங்கும் விடுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நோயே தடுப்பு மருந்து: சில தொற்றுநோய்கள் ஒருமுறை வந்துவிட்டால் மீண்டும் ஏற்படாது. இதுதொடர்பாக தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.தமிழ்க்கனி கூறுகையில், 'சில நோய்கள் ஏற்பட்ட சமயத்தில் உடலில் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான அம்சம் உருவாகிவிடும். அந்த வகையில் ஒரு முறை சின்னம்மை வந்தால் மீண்டும் வராது' என்றார்.
இதுதொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் ரகுநந்தன் கூறியது:
சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானோருக்கு நுரையீரல் உள்ளிட்ட பிற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நோயாளிகளை வீட்டில் வைத்து கவனித்தாலும், அவர்களுக்கு நீண்ட நாள் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.
தடுப்பூசி: பிற நோய்களைப் போன்று சின்னம்மைக்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால், அதன் விலை அதிகம். எனவே, உயிரிழப்பை ஏற்படுத்தும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சின்னம்மைக்கான தடுப்பூசி சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியது:
முன்பெல்லாம் 10 முதல் 13 வயதுக்குள்ளாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் வந்துவிடும். ஆனால் தற்போது தனிக்குடும்பங்கள் அதிகரித்துவிட்டதால், குழந்தைகளுக்கு சிறு வயதில் சின்னம்மை வருவதில்லை. அதனால் 10 அல்லது பிளஸ் 2 படிக்கும்போது இந்த நோய் தாக்குகிறது. எனவே, தமிழக அரசு சிறுவயதில் சின்னம்மை பாதிக்காத குழந்தைகளுக்கு, 9 -ஆம் வகுப்பில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றனர்.
குறைவான பாதிப்பு: தமிழகத்தில் மிகவும் குறைவான அளவிலேயே சின்னம்மை பாதிப்பு ஏற்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியது:
ஆண்டுக்கு சில நூறு பேருக்கு மட்டுமே சின்னம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய்க்காக அதிக அளவில் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதில்லை. இதனால் தொற்றுநோய் மருத்துவமனைகள், மருந்தகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நோயாளியின் உறவினர்கள் மருந்து வாங்க வருவதைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிகிறோம் என்றார் அவர்.
சின்னம்மை தடுப்பது எப்படி?
சுகாதாரத்தைப் பேணுவதன் மூலமும், உணவுப் பழக்கவழக்கங்களின் மூலமும் சின்னம்மை நோய் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு கோடைகாலத்தில் நாளைக்கு 2 முறை குளிப்பது, வாரத்துக்கு இரு நாள்கள் நல்லெண்ணெய் குளிப்பது அவசியம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது காலை 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும். வெந்நீரிலும், அதிக குளிர்ந்த நீரிலும் குளிக்கக் கூடாது. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், தர்ப்பூசணி, இளநீர், பழச்சாறுகள், பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சின்னம்மையால் பாதிக்கப்பட்டோரை தனியாக வைத்துக் கவனிப்பதன் மூலம் பிறருக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com