கப்பிங் தெரப்பி: இது ஒரு மாறுபட்ட சிகிச்சை முறை!

கப்பிங் தெரப்பி என்பது ஒரு மாறுபட்ட மருத்துவ முறை ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக சீனர்களால் உருவாக்கப்பட்டது இது என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
கப்பிங் தெரப்பி: இது ஒரு மாறுபட்ட சிகிச்சை முறை!

ஜாக்கி சான் மற்றும் ஜேடன் ஸ்மித் நடித்த ‘கராத்தே கிட்’ படத்தைப் பார்த்த எவராலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஜாக்கி சில கண்ணாடி குடுவைகளையும், நெருப்பையும் உபயோகித்து சிறுவன் ஜேடன் ஸ்மித்தின் காயத்தை குணப்படுத்துவதைப் போன்ற காட்சியை மறந்திருக்க முடியாது. அந்தச் சிகிச்சை முறைக்குப் பெயர்தான் கப்பிங் தெரப்பி.

கப்பிங் தெரப்பி என்பது ஒரு மாறுபட்ட மருத்துவ முறை ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக சீனர்களால் உருவாக்கப்பட்டது இது என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. ஆனால், ஒரு சிலர் எகிப்தை சேர்ந்த கிரேக்கர்கள் கி.மு.1500 முதலே இந்த முறையைக் கையாண்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.

“அக்குபஞ்சர் மற்றும் கப்பிங் மருத்துவத்தால் உடலில் ஏற்படக்கூடிய பாதிக்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தி விடலாம்” என்று சீன இரசவாதி  ஜீ ஹாங் கூறியது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. 

கண்ணாடி அல்லது மூங்கிலாலான கோப்பைகளை பயன்படுத்தி எலும்பு இடமாற்றம், தசை பிடிப்பு, காய்ச்சல், உடல் வலி, ரத்தம் சுத்திகரிப்பு, மன அழுத்தம் மற்றும் பல பிரச்னைகளை கப்பிங் சிகிச்சையால் சீர் செய்யலாம்.   
கப்பிங் தெரப்பியை மூன்று விதமாகச் செய்யலாம்;

  1. உலர்ந்த கப்பிங் (டிரை கப்பிங்)
  2. நெருப்பு கப்பிங் (ஃபையர் கப்பிங்)
  3. ஈரமான கப்பிங் (வெட் கப்பிங்)
     

1. உலர்ந்த கப்பிங் (டிரை கப்பிங்):

இந்த கப்பிங் முறை ரத்த ஓட்டத்தைச் சீர் படுத்துவது மற்றும் தசை பிடிப்புகளைச் சரி செய்வது போன்ற பலன்களை வழங்கக் கூடியது. பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் பலரும் இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்கிறார்கள்.   

2. நெருப்பு கப்பிங் (ஃபையர் கப்பிங்):

இந்த முறையில் சிறு உருண்டை வடிவிலான பஞ்சை சுத்தமான சாராயத்தில் நனைத்து நெருப்பைப் பற்றவைப்பர். பிறகு விரைவாக நெருப்பைச் சிறை பிடிப்பது போன்று கண்ணாடி குவளையை தோலுடன் சேர்த்து அழுத்துவர், காற்று இல்லாத காரணத்தால் நெருப்பு அனைத்து விட்டாலும் அந்த வெப்பமானது குவளையின் உள்ளேயே நிலைத்து இருக்கும். இதன் மூலமாகத் தசை பிடிப்பு, கழுத்து வலி, கவலை, ஒற்றைத் தலைவலி, வாதம் போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். 

3. ஈரமான கப்பிங் (வெட் கப்பிங்):

கோப்பைகளை நமது தோலின் மேற்பரப்பில் வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதன் வழியாகக் கெட்ட அல்லது தூய்மையற்ற ரத்த கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவது ஒரு முறையாகும். நமக்கு வரக்கூடிய பல நோய்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரத்தத்துடன் தொடர்புடையது. அதன் அடிப்படையில் தூய்மையற்ற ரத்தத்தை நீக்குவதன் மூலம் நோய்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

கப்பிங் தெரப்பி செய்து கொண்ட பிரபலங்கள்:

மைக்கேல் ஃபெல்ப்ஸ்:

ஒலிம்பிக் போட்டியில் 22 தங்கப்பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது அவரது உடல் முழுவதும் வட்ட வடிவில் தழும்புகள் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. பிறகு அதுகுறித்த விளக்கத்தை அவர் கூறும்போது தொடர்ச்சியான பயிற்சி காரணமாக ஏற்படும் தசை பிடிப்பு, சுளுக்கு போன்ற அனைத்து பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு கப்பிங் தெரப்பிதான் என்றார்.

ஓவியா:

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து காதல் பிரச்னையால் மன அழுத்தத்துடன் வெளியேறிய நடிகை ஓவியாவும் மன அழுத்தம் மற்றும் கவலையில் இருந்து விடுபட கப்பிங் தெரப்பி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இதுவரை ஓவியா அதிகாரப் பூர்வமாக எதுவும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தத்தைத் தீர்க்குமா கப்பிங் தெரப்பி?

மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு அனைத்து வயதினருக்கும் பொதுவானது. ஆனால், அந்த எண்ணங்களால் நீண்ட காலம் வரை பாதிக்கப்பட்டால் தற்கொலை முடிவு வரை சிலரை அது இட்டுச்செல்லும். கப்பிங் சிகிச்சை நச்சுகள் மற்றும் கழிவுகளை நமது உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அவ்வாறு பார்த்தால் பெரும்பாலான பிரச்னைகள் மன ரீதியாக நம்மைத் தாக்குவதற்கு காரணம் தூக்கமின்மைதான். இந்தச் சிகிச்சையின் போது உடலின் கழிவுகள் அகற்றப்படுவதால் முதலில் உடல் ரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம், அதைத் தொடர்ந்து துக்கமின்மை போன்றவை சீராகி மன ரீதியான அழுத்தத்தை குறைக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.  

கப்பிங் சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏதும் இல்லையா என்று கேட்டால், நிச்சயம் பக்க விளைவுகளும் உண்டு என்பதுதான் பதில். இந்தச் சிகிச்சை செய்த பின்பு சருமத்தில் ஏற்படும் வட்ட வடிவிலான தழும்புகள் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் நோய்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்தச் சிகிச்சை முறையை நீங்களும் மேற்கொள்ள விரும்பினால் மருத்துவரும், இடமும் மிகவும் முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com