பெருந்தமனி வெடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மறுவாழ்வு

வயிற்றுப் பகுதியில் பெருந்தமனி வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

வயிற்றுப் பகுதியில் பெருந்தமனி வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ். பொன்னம்பலம் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முடித் திருத்தும் தொழில் செய்து வருபவர் மனோகரன் (52). கடந்த நவம்பரில் கடுமையான வயிற்று வலி, முதுகு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவரது வயிற்றில் உள்ள பெருந்தமனி வெடித்துள்ளதை அறிந்து, உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அவரை பரிந்துரைத்துள்ளார். அதன்படி, கடந்த நவம்பர் 8 -ஆம் தேதி நள்ளிரவு இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சைக்குத் தேவையான முந்தைய சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்பட்டன.
பொதுவாக நமது வயிற்றின் பெருந்தமனி 1.5 செ.மீ. முதல் 2 செ.மீ. வரையே இருக்கும். ஆனால், மனோகரனை பரிசோதித்ததில் அவரது வயிற்றின் உள்பகுதியில், பெருந்தமனி ரத்தக் குழாய் வெடித்து 7 செ.மீ. அளவுக்கு வீங்கியிருந்தது. இரத்தக் குழாய் வெடித்த பகுதியில் சுமார் அரை கிலோகிராம் அளவுக்கு காணப்பட்ட ரத்தக் கட்டிகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, வயிற்றில் உள்ள பெரிய இரத்தக் குழாயில் இருந்து இரண்டு கால்களுக்கும் செயற்கை இரத்த குழாய் பொருத்தி மனோகரனின் உயிர் காப்பாற்றப்பட்டது. பெருந்தமனி வெடிக்கும் நிலையில் 99 சதவிகிதம் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டால் சுமார் ரூ. 6 முதல் 8 லட்சம் வரை செலவாகும். ஸ்டான்லி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தநாள அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த பேராசிரியர் க. துளசிக்குமார் மற்றும் பேராசிரியர் க. இளஞ்சேரலாதன், மருத்துவர்கள் சி.சண்முக வேலாயுதம், பா. தீபன்குமார், மயக்கவியல் பேராசிரியர் குமுதாலிங்குராஜ், மருத்துவர் வாணி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளது என்றார் பொன்னம்பலம் நமச்சிவாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com