'மூலிகைகளின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது'

புவியில் மூலிகைகளின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது என வேலூர் சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் சுனில் சாண்டி பேசினார்.
சர்வதேச கருத்தரங்கு மலரை வெளியிட்ட சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் சுனில் சாண்டி. உடன், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் உள்ளிட்டோர்.
சர்வதேச கருத்தரங்கு மலரை வெளியிட்ட சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் சுனில் சாண்டி. உடன், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் உள்ளிட்டோர்.

புவியில் மூலிகைகளின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது என வேலூர் சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் சுனில் சாண்டி பேசினார்.
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் வேலூர் திருவள்ளுவர் பல்கலை.யில், உயிரி வள தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கு (தஅஆப 2017) புதன்கிழமை தொடங்கியது.
இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம், இந்திய உயிரி திணைக்களம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்குக்கு பல்கலை. துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்தார்.
பதிவாளர் ப.அசோகன், புல முதல்வர் பெருவழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எர்னஸ்ட் டேவிட் வரவேற்றார். வேலூர் சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் சுனில் சாண்டி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
புவியில் உயிரினங்கள் வாழ போதுமான தூய காற்று, நல்ல தண்ணீர், போதுமான காய்கறிகள், நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால், பிளாஸ்டிக், தொழிற்சாலை கழிவுகள், வாகனப் புகை உள்ளிட்டவைகளால் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. உலக மருத்துவர்களுக்கெல்லாம் முன்னோடிகளாக விளங்கிய சரகர், சுஷ்ருதர், தன்வந்திரி உள்ளிட்டோர் வாழ்ந்த இந்தியா, மூலிகைகளின் இருப்பிடமாக விளங்குகிறது.
மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும் கீழ்க்காய்நெல்லி, எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட வேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகை மூலிகைகள் நாம் நாட்டில் உள்ளன. எனவே இயற்கை விதிமுறைகளை மீறாமல் இருந்தாலே நாம் நோயற்ற வாழ்க்கையை வாழ முடியும். இனிவரும் காலங்களில் உலகில் மிகவும் விலையுயர்ந்த பொருள்களாக தூய காற்றும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் இருக்கப்போகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து தாய்லாந்தின் சிங்க் மாய் பல்கலைக்கழக பேராசிரியர் சாம்லீ மெக்ஹாட்கோர்ன், வேலூர் விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் இரினா டிருபக்ட்ஸ் கோவா ஆகியோர் தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை மாணவர்கள் மத்தியில் விளக்கி பேசினர்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் விஜய் ஆனந்த், இணைப் பேராசிரியர் பாபு ஜனார்த்தனம், உதவிப் பேராசிரியர்கள் ஹரீஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com