ஜிப்மரில் முதல் முறையாக ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை தொடக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் முறையாக ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நவீன டாவின்சி ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சைக் கருவி.
நவீன டாவின்சி ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சைக் கருவி.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் முறையாக ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மத்திய சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி நிறுவனமாகும். இங்கு மொத்தம் 5,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 6,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
சபரிமலைக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் செல்வதால் அங்கு மருத்துவ இடர்பாடுகள் நேரிடும் போது, டெலிமெடிசன் மூலம் சிகிச்சை தரும் வசதியையும் ஜிப்மர் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், புற, உள் நோயாளிகள் சிகிச்சை விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இணையம் மூலமே பரிசோதனைக்கான நாளை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
இதனிடையே ஜிப்மரில் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை அறிமுகம் செய்யப்படும் என, அதன் இயக்குநர் பரிஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்காக ரூ. 28.5 கோடி செலவில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்து. மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளையும் மிகத் துல்லியமாக ரோபோட் மூலம் மேற்கொள்ளலாம். இதற்காக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக சிறுநீரகவியல் துறையில் நோயாளி ஒருவருக்கு ரோபோட் மூலம் வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக இயக்குநர் பரிஜா கூறியதாவது: ரூ. 28. 5 கோடி செலவில் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தலா ரூ. 70 லட்சம் செலவில் 3 ரோபோட்டிக் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. முதலில் சிறுநீரகவியல் துறையில் ரோபாட்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை மிகத் துல்லியமாக மேற்கொள்ள முடியும். விரைவில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் ரோபோட்டிக் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com