டெங்கு: வளர்ந்த கொசுக்களை ஆய்வு செய்யத் திட்டம்

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் வளர்ச்சியடைந்த ஏடிஸ் வகை கொசுக்களைச் சேகரித்து, ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.
டெங்கு: வளர்ந்த கொசுக்களை ஆய்வு செய்யத் திட்டம்

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் வளர்ச்சியடைந்த ஏடிஸ் வகை கொசுக்களைச் சேகரித்து, ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதன் மூலம் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது வழக்கம்.
டெங்கு சவால்: பிற தொற்றுநோய்களை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தாலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பெரும் சவாலாக உள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 2016 -ஆம் ஆண்டில் 2,531 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேரடியாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே இந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிற பிரச்னைகளோடு டெங்கு காய்ச்சலும் தாக்கி உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
கட்டுப்படுத்த நடவடிக்கை: நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவது போன்று நோய் தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தமிழகப் பொது சுகாதாரத் துறையினர் களப்பணியாளர்களின் மூலம் கொசு உற்பத்தியைத் தடுப்பது, சுற்றுப்புறங்களில் கிடக்கும் பொருள்களில் தண்ணீர் தேங்கி கொசு இனப்பெருக்கம் செய்வதைத் தடுப்பது உள்ளிட்டப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஆய்வுத் திட்டம்: வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த கொசுக்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஓசூரில் உள்ள அரசு பூச்சியியல் மற்றும் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு நிறுவனம் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆராய்ச்சி நிறுவனமானது 1987 -ஆம் ஆண்டு, பிளேக் நோய் கண்காணிப்புக்காக ஓசூரில் நிறுவப்பட்டது. தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனைகள், கள ஆய்வுகள், தொற்றுநோய் மற்றும் விலங்குகளின் மூலம் பரவும் நோய்கள் குறித்த கண்காணிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கொசுக்கள் ஆய்வு: இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ள பகுதிகள், காய்ச்சல் பரவியுள்ள இடங்கள் ஆகியவற்றில் முட்டைகளில் இருந்து வெளியே வந்து வளர்ச்சியடைந்த கொசுக்கள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும் அந்த கொசுக்களைப் பரிசோதனை செய்து, அவற்றில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் இருப்பது கண்டறியப்படும்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
ஓசூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே ஜப்பானிய மூளைக்காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அதே முறையில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களையும் ஆய்வு செய்யத் தீர்மானித்துள்ளோம்.
ஏடிஸ் கொசுக்களை ஆய்வு செய்வதற்கான கருவிகள், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இன்னும் 6 மாதத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ஆராய்ச்சி தொடங்கும். இதன் மூலம் டெங்கு பாதிப்பு உள்ள இடங்களில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த முடியும் என்றார் அவர்.
ஏடிஸ் கொசுக்கள் பெருகுவது எப்படி?
டெங்கு, சிக்குன்குனியா, ஸிகா வைரஸ் உள்ளிட்டவை ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகின்றன. இந்தக் கொசுக்கள் நல்ல நீரில் உருவாகிதான் இனப்பெருக்கம் செய்கின்றன. வீடுகளில் திறந்த நிலையில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள், சுற்றுப்புறங்களில் கிடக்கும் டயர், தேங்காய் மட்டை உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கும்போது அதில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். மேலும், இந்த வகை கொசுக்கள் இரவு நேரங்களில் மனிதர்களைக் கடிக்காது. அதிகாலை, மாலை நேரங்களில்தான் பெரும்பாலும் கடிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com