'இந்தியாவில் 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சை தேவை'

இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்று மத்திய மருந்துகள் துறை முன்னாள் செயலர் வி.கே.சுப்புராஜ் கூறினார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்று மத்திய மருந்துகள் துறை முன்னாள் செயலர் வி.கே.சுப்புராஜ் கூறினார்.
கிலென்ஈகிள்ஸ் குளோபல் மருத்துவமனையின் சார்பில், ஒருங்கிணைந்த இதய செயலிழப்பு சிகிச்சைத் திட்டம் மற்றும் இதய செயலிழப்பு குறித்த இணையதள பதிவேடு ஆகியவைத் தொடங்கும் திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வி.கே.சுப்புராஜ் பேசியது:
கடந்த 2015 -ஆம் ஆண்டில் இந்தியா இதய நோய்களுக்கான தலைநகரமாக மாறும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. அந்த நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்றாலும், அதன் தீவிரம் என்ன என்பதைத் தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் குறித்த பதிவேடு எதுவும் இல்லை.
இதே போன்றதொரு பிரச்னையை 1972 -ஆம் ஆண்டு பின்லாந்து சந்தித்தது. அங்கு இதய நோய்களால் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அந்த நாட்டினர் பால் அதிகமாகப் பருகுவது வழக்கம். ஆய்வில் நாட்டில் பாலின் தரம் வேறு வேறாக மாறுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, ஒரே தரத்திலான பால் பயன்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதில், 20 ஆண்டுகளுக்குப் பின் இதய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்தியா போன்ற நாட்டுக்கு அது சாத்தியமில்லை. எனவே, தற்காத்துக் கொள்வதுதான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆனால், 4 லட்சம் பேருக்குத்தான் இந்த சிகிச்சைகள் கிடைக்கிறது. மீதம் 21 லட்சம் பேர் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் வாழ்கின்றனர். அதிக செலவு காரணமாக, பலர் தங்களுக்கு இதய பாதிப்பு இருப்பது தெரிந்தும், சிகிச்சை பெறாமலேயே உயிரிழக்கின்றனர் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ஐஜி ஆனந்த் மோகன், மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைகள் துறை இயக்குநர் டாக்டர் சந்தீப் அட்டாவார், இதய செயலிழப்பு மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com