பரமபதம் விளையாடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளலாமா?

நாம் பொழுது போக்கிற்காக விளையாடும் பரமபதத்தில் சிலர் புதுமையை புகுத்தி நாம் அனைவருக்கும் தேவையான சில முக்கிய தகவல்களை தரும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்.
பரமபதம் விளையாடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளலாமா?

வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமபதம் விளையாடுவது பலரது வழக்கம். அதில் பாம்பின் வாயில் படாமல் ஏணிகளில் ஏறி பெருமாளை வந்தடைந்தால் அவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் நிச்சயம் என்றும், புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே ஏணியில் ஏற முடியும் மற்றும் பாவம் செய்தவர்கள் பாம்பால் கொத்துப் பட்டு மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுவார்கள் அதாவது மீண்டும் மனித பிறவி எடுத்து எல்லாத் துயரங்களுக்கும் ஆளாவார்கள் என்பது நம்பிக்கை. இது ஒரு பக்கம் இருந்தாலும், பரமபதம் ஒரு கிராமிய விளையாட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது நாம் காலகாலமாக விளையாடும் பரமபதம், ஆனால் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் நான் பார்த்த ஒரு நவீன பரமபதம் எனது கவனத்தை கவர்ந்தது. நாம் பொழுது போக்கிற்காக விளையாடும் பரமபதத்தில் சிலர் புதுமையை புகுத்தி நாம் அனைவருக்கும் தேவையான சில முக்கிய தகவல்களை தரும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர், மேலும் விளையாடுவோர் மனதில் நன்கு பதியும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதைக் குழந்தைகள் பெரியவர்களென யார் விளையாடினாலும் இதில் இருக்கும் கருத்து அனைவரையும் கவர்ந்து அவர்கள் மனதில் நிச்சயம் பதியும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி என்னதான் இதில் இறுக்கு என்று பார்ப்போமா?

இந்தப் பரமபதத்தில் நீங்கள் வெற்றியடைய மொத்தம் 54 படிகள் இருக்கின்றது, எப்போதும் போல தாயக்கட்டையை உருட்டி ஒவ்வொரு படியாக நீங்கள் முன்னேற வேண்டும். ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால் ஒரு சில படிகளில் உடல் ஆரோக்கியம் தொடர்பான சில விஷயங்கள் எழுதியிருக்கும், அதில் ஆரோக்கியமான செயலை நீங்கள் செய்ததாக வந்தால் அந்தப் படியில் இருக்கும் ஏணியில் ஏறி விரைவாகப் பல படிகளைக் கடந்து விடுவீர்கள், அதே சமயம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயலை நீங்கள் செய்தால் அங்கு இருக்கும் பாம்பால்  கொத்தப்பட்டுப் பல படிகள் கீழே இறங்கி விடுவீர்கள்.

ஏணிகள் மற்றும் பாம்புகளின் இரு முனைகளிலும் ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற செயல் ஒன்றும் அதற்கான விளைவுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு 4-வது படியை நீங்கள் அடைந்தால் உணவை நன்கு மென்று சாப்பிட்டீர்கள் என்று அர்த்தம் அதனால் ஏணியின் வழியாக ஏறி நல்ல ஜீரணத்தன்மை உடையவர் என்கிற 15-வது படிக்கு நீங்கள் செல்வீர்கள். அதே போல் 29-வது படியை நீங்கள் அடைந்தீர்கள் என்றால் நீங்கள் அதிகம் மைதா, சர்க்கரை வகைகளைச் சாப்பிட்டுள்ளீர்கள் என்று அர்த்தம் அதனால் சோர்வு, மந்தம் மற்றும் பலவீனம் அடைந்து பாம்பால் கொத்துப் பட்டு மீண்டும் 5-வது படிக்கு வந்துவிடுவீர்கள்.

இதைப் போன்ற பல அரிய மருத்துவ தகவல்களை விளையாடிக்கொண்டே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உப்பு குறைவாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டால் ஆரோக்கியமான உடல் எடையைப் பெற முடியும், காய்கனிகளை விரும்பிச் சாப்பிட்டால் பொலிவான சருமத்தை பெறலாம், தினமும் காலை உணவைத் தவறாமல் சாப்பிட்டால் வகுப்பில் முழு கவனம் செலுத்தலாம், மாடிப் படிகளை பயன் படுத்துவதால் நல்ல உடற்தகுதியைப் பெறலாம் போன்றவை ஏணிகளுக்கான குறிப்புகள்.

அதே போல் கோபமாகச் சாப்பிட்டால் அல்சர் வரும், அதிகம் வெளி உணவுகளைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், குளிர்பானம் குடிப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும், அதிகம் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால் உடல் பருமன் அடையும், புகைபிடித்தால் நுரையீரல் பாதிப்படையும் போன்றவை பாம்புகளின் அருகில் உள்ளக் குறிப்புகள் ஆகும். 

ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் ஏணிப்படிகளைப் போன்று நம்முன் தான் இருக்கும் அதைப் பிடித்து ஏறுவது என்பது நம் கையில் தான் உள்ளது, ஆனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல விஷயங்களும் பாம்புகளை போன்று நமது கால்களுக்கு நடுவில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும் அவற்றைப் புறக்கணித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே இந்த நவீன பரமபதம் நமக்குச் சொல்லும் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com