பசி ஏற்படுவது எதனால்? 

ஒரு சாண் வயிறு என்று எளிதாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் அது படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா! 
பசி ஏற்படுவது எதனால்? 

ஒரு சாண் வயிறு என்று எளிதாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் அது படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா! 

வயிறு காலியாக இருக்கிறது என்று வயிற்றுக்குத் தெரியுமா என்ன? பசி உண்டாகிறது. உடனே சாப்பிடுகிறோம். வயிறு நிறைந்திருந்தாலும் வயிற்றுக்கு தெரியப்போவது இல்லை. ஆனால் வயிறு நிரம்பியிருப்பதை உணர்கிறோம். சில சமயங்களில் வயிறு நிறைய சாப்பிட்டிருப்போம். சிறிது நேரத்திலேயே பசி எடுப்பது போல் இருக்கும். காரணம் புரியாது. இவை ஏன் உண்டாகின்றன? இவற்றை எப்படி நம்மால் உணர முடிகிறது? 

உதாரணமாக, டூ வீலர், ஃபோர் வீலர் வண்டிகள் பெட்ரோல் இருந்தால்தான் ஓடும். பெட்ரோல் தீர்ந்துவிட்டால், மக்கர் செய்ய ஆரம்பித்து விடும். வண்டி ஓட எரிசக்தி தேவைப்படுகிறது. அதே போல்தான், நம் உடலாகிய வண்டி செயல்பட ஆற்றல் அதாவது எனர்ஜி என்னும் எரிசக்தி தேவைப்படுகிறது. 

நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது அதிகமாக எனர்ஜி செலவாகி விடுகிறது. அதனால்தான் அதிகமாக பசி எடுக்கிறது. நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட, மூளையும், அவயங்களும் செயல்படுகின்றன. அப்பொழுதும் நமக்கு எனர்ஜி செலவாகிறது. 

நாம் செலவழிக்கும் எனர்ஜியை ஈடு செய்ய, சாப்பிட வேண்டி வருகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து, கிடைக்கும் ஸ்டார்ச் மூலம் க்ளூகோஸ் தயாரிக்கப்படுகிறது. வண்டிக்கு பெட்ரோல் எப்படி முக்கியமானதோ, அதுபோல்தான் உடலுக்கு க்ளூகோஸ் இன்றியமையாத ஒரு பொருள் ஆகும். ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு, ரத்தத்தில் க்ளூகோஸின் அளவு அதிகமாகக் காணப்படும். முக்கியமாக, மனிதனின் மூளைச் செயல்பாட்டிற்கு அதிகளவு க்ளூகோஸ் தேவைப்படுகிறது. ஏனென்றால், அது எப்பொழுதுமே விழிப்பு நிலையில் இருந்து கொண்டு அங்கங்கள் செயல்பட உதவுகிறது.

க்ளூகோஸ் இருந்தால்தான் நம் தசைகள் செயல்பட முடியும். அதனால்தான் அது அதிக அளவில் செலவழிந்து விடுகிறது. க்ளூகோஸ் குறைபாடு உண்டானதும், 'க்ளூகோஸ் குறைந்துவிட்டது. சீக்கிரம்  சாப்பிடு' என்கிற அறிவிப்பு நமக்குக் கிடைக்கிறது. உடனே பசி உண்டாகிறது. 

நமது செல்கள், எனர்ஜியைப் பெற, க்ளூகோஸ்க்கும், ஆக்ஸிஜனுக்கும் இடையே ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி, கரியமில வாயுவையும், தண்ணீரையும் தனியாகப் பிரித்து விடுகின்றன. நம் உடலில், ஊட்டச்சத்தினை சேமித்து வைக்க ஒரு அங்கம் உண்டு என்றால், அது கல்லீரல்தான். அதிகப்படியாக சேர்ந்து விடும் க்ளூகோஸானது,  'க்ளைகோஜின்'  ஆக கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. க்ளைகோஜினை ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் கல்லீரல் சேர்த்து வைக்கும். மிகுதியான க்ளைகோஜின், கொழுப்பாக, உடலிலேயே தங்கி விடுகிறது. ஒருவர், குண்டாகவோ, ஒல்லியாகவோ இருப்பது, இதைப்பொருத்துத்தான் அமைகிறது. 

நம் உடலுக்கு எனர்ஜி தேவைப்படும் பொழுது, கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. கொழுப்பிலிருந்து,  எனர்ஜியாக மாற்றப்படும் பொழுது, 'ஃப்ரீ ஃபாட்டி ஆசிட்' (free fatty acid) என்னும் வஸ்துவும் உண்டாகிறது. இந்த ஃப்ரீ ஃபாட்டி ஆசிட் என்கிற அமிலம்தான் நமக்கு பசி உணர்வை ஏற்படுத்துகிறது. இது, நம் ரத்தத்தில் அதிகப்படியாகக் காணப்படும் பொழுது, நம் ஹெட் குவார்ட்டர்ஸ் ஆன மூளைக்கு செய்தி எட்டி விடுகிறது. ஏனென்றால், எண்சாண் உடம்பையும் கண்ட்ரோல் செய்யும் மூளையின் அடிப்பாகத்தில்,   'தலாமஸ்' என்று கூறப்படும் மூளையின் நரம்பு முடிச்சு காணப்படுகிறது. 

தலாமஸ் தான் மூளையின் முக்கியமான பாகம். இந்தப்பாகம் தான், ஒருவருடைய இதயத்துடிப்பு, பசி, தாகம், தூக்கம், உடலின் வெப்பநிலை இவற்றை கண்காணிக்கின்றது. அதனால்தான், ஃப்ரீ ஃபாட்டி ஆசிட் ரத்தத்தில் அதிகமாகும் பொழுது, சேமிப்பிலிருக்கும் க்ளூகோஸானது செலவழிகிறது. சீக்கிரம் ஆகாரம் சாப்பிட வேண்டும் என்று உணர்த்தும் சமிக்ஞையாகத் தான் பசியை உண்டாக்குகிறது. நமக்கு ஏன் பசிக்கிறதென்று இப்பொழுது புரிகிறதல்லவா? 

ஒரு முக்கியமான விஷயம். நன்றாகப் பசி எடுக்கும் பொழுது அவசரம் அவசரமாக சாப்பிடுவது கூடாது. வயிறு நிறைந்த உணர்வு மூளைக்குப் போய் சேர்வதற்குள் தேவைக்கு அதிகமாக உண்பதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. இதனால் அதிகப்படியான க்ளூகோஸ், கொழுப்பாக மாறி வயிற்றில் தங்கும் பொழுது, தொப்பை விழும் சாத்தியம் இருக்கிறது. அதனால் எப்பொழுது சாப்பிட்டாலும், உணவை அவசரப்படாமல், நிதானமாகச் சாப்பிடுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com