அரசு மருத்துவமனைகள் தரமானவையா? : நோயாளிகளிடம் ஆய்வு

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரமான சேவையையும், சுகாதாரத்தையும் உறுதி செய்கின்றனவா என்பது தொடர்பான ஆய்வு அறிக்கை 

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரமான சேவையையும், சுகாதாரத்தையும் உறுதி செய்கின்றனவா என்பது தொடர்பான ஆய்வு அறிக்கை அறப்போர் இயக்கத்தால் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை, கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் 50 நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதுதவிர சென்னையிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற்ற 110 நோயாளிகளிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள் குறித்து, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை சேவை திருப்திகரமாக உள்ளது என்று 66 சதவீதத்தினரும் செவிலியர்களின் சேவை திருப்தி அளிக்கிறது என்று 56 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். 68 சதவீதம் பேர் மருத்துவமனை தூய்மையாகப் பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். 
ஆனால், 73 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் குடிநீர் வசதி இல்லை அல்லது குடிநீர் அசுத்தமானதாக உள்ளது என்றும், 51 சதவீதம் பேர் மருத்துவமனையில் கழிப்பறை வசதிகள் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
அரசு மருத்துவமனைகளில் சேவையைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று 49 சதவீதம் பேரும், சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுத்தமான முறையில் இருப்பதாக 90 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். குடிநீர் வசதி உள்ளது என்று 83 சதவீதம் பேரும், கழிவறை வசதிகள் இருப்பதாக 80 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லை என்று 23 சதவீதம் பேர் தெரிவித்தனர். முழு நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதாக 6 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். 
பரிந்துரைகள்: அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மேலும் லஞ்சம் பெறுவதைத் தடுப்பதற்காக லஞ்ச ஒழிப்பு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களிலும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com