'நீ இந்த உணவை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் உனக்கு வயிறு இல்லை!’ நடாஷாவுக்கு நேர்ந்த கொடுமை!

உடல் உறுப்புகளில் எது முக்கியம் எது முக்கியம் இல்லாததது என்று யாராலும் சொல்ல முடியாது.
'நீ இந்த உணவை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் உனக்கு வயிறு இல்லை!’ நடாஷாவுக்கு நேர்ந்த கொடுமை!

உடல் உறுப்புகளில் எது முக்கியம் எது முக்கியம் இல்லாததது என்று யாராலும் சொல்ல முடியாது. உணர்தல், சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், இவற்றிற்குக் காரணமாக அமைந்திருக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள் மிக முக்கியமானவை. இந்த புலன்கள் அடங்கிய உடல் இயங்க சக்தி வேண்டும். அந்த சக்தியைக் கொடுப்பது சாப்பிடும் உணவு.

உட்கொள்ளும் உணவை ஜீரணித்து சத்துக்களை உறிஞ்சி உடலின் பல அவயவங்களுக்கும் அனுப்புவது இரைப்பை. அந்த இரைப்பை இல்லாமல் வாழ முடியுமா.? "முடியும்.. இரைப்பை இல்லாமல் நான் வாழ்கிறேனே' என்கிறார் நடாஷா. தான் சமைக்கும் உணவை கால் வயிறு கூட சாப்பிட முடியா விட்டாலும், குடும்பத்தினருக்காக வகைவகையான உணவு வகைகளை நளபாகத்தில் சமைத்துத் தள்ளுகிறார் நடாஷா. நடாஷாவுக்கு பிறக்கும் போது இரைப்பை இருந்தது. பிறகெப்படி இல்லாமல் போனது? நடாஷா மனம் திறக்கிறார்: 

'விதம் விதமான சுவையான உணவு வகைகள் தயாரிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். தவிர எனக்கு அருமையாக சமைக்கவும் வரும். எனது உணவு வகைகளுக்காக ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எனது வலைதள பக்கத்தில் வகைவகையான உணவுவகைகளை மட்டுமே பதிவு செய்துவருகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மருந்துக்குக் கூட வேறு விஷயம் இருக்காது. அந்த அளவுக்கு சமையல் பைத்தியம். ஆனால் என் துரதிர்ஷ்டம்... என்னதான் வகைவகையாக சமைத்தாலும், திருப்தியாக அவற்றை என்னால் உண்ண முடியாது. எப்படி இருக்கிறது என்று சுவை பார்க்கலாம். அவ்வளவுதான். எந்த உணவையும் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது மாதிரி தொட்டுக் கொள்ளலாம். அதையும் மருத்துவரின் அனுமதியுடன்தான் செய்ய முடியும். சப்பு கொட்டி வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று ஆர்வம், ஆசையை ஒதுக்கி வைக்க எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், சமைப்பதை மட்டும் நான் நிறுத்தியதில்லை. 

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது மும்பையில். தற்சமயம் வசிப்பது புணேயில். இங்கே பல பிரபலமான உணவகங்களுக்கு சமையல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறேன். கம கமவென்று சமைக்கவும் செய்கிறேன். 2010 வரை எல்லாரையும் போன்று வயிறு நிறைய சாப்பிட்டு வாழ்ந்தவள்தான். 2010-ல் இடது தோளில் வலி ஆரம்பித்தது. வலியென்றால் உயிர் போகிற வலி. சாப்பிடும்போது வலி உச்சத்தைத் தொடும். தோளில் வலி என்பதால் எலும்பு மருத்துவரைப் பார்த்தேன். எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். வேறு பல பரிசோதனைகள் செய்து கொள்ளச் சொன்னார். அறுவை சிகிச்சையும் இரண்டு முறை செய்தார். பிஸியோதெரப்பியும் தொடர்ந்தது. ஆனால் வலி குறையவில்லை. வலியை உணராமல் இருக்க மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கினேன். வலி கொஞ்சம் குறைந்தது. 2010-க்கு முன்பு எனது எடை எண்பத்திதெட்டு கிலோவாக இருந்தது. வலியை உணர்ந்த சில மாதங்களில் எனது எடை முப்பத்தெட்டாக குறைந்து போனது. அல்ட்ராசவுண்ட், சோனோகிராஃபி என்று தொடர் சோதனைகள் நடத்தினாலும், வலி ஏன், எதனால் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 

பல டாக்டர்களை மாற்றி மாற்றி பார்த்து கடைசியில் டாக்டர் எஸ். எஸ். பலேராவிடம் சென்றேன். அவரிடம் போகாமல் இருந்திருந்தால் நான் இல்லாமல் போயிருப்பேன். அவரது மருத்துவமனையில் படுக்கையில் முழங்கால்களை மடித்து உட்கார்ந்திருந்தேன். அப்படியிருந்தால் வலி குறைந்திருப்பதாக உணர்ந்ததால் அப்படி அமரத் தொடங்கினேன். நான் இருக்கும் நிலையைப் பார்த்த டாக்டர் பலேரா, உனக்கு வயிற்றில் அல்சர் ஏற்பட்டு ரணமாகியுள்ளது. அங்கிருந்து கசியும் ரத்தம்தான் உன்னை சித்திரவதை செய்யும் வலிக்கு மூல காரணம் என்றார். பரிசோதனை மூலம் டாக்டர் சொன்னது உண்மைதான் என்று தெரியவந்தது. 

மார்புப் பகுதியையும் வயிறையும் பிரிக்கும் சவ்வுப் பகுதியான உதரவிதானத்தில் இரண்டு விதமான புண்கள் ஏற்பட்டிருந்தன. புண்களிலிருந்து ரத்தமும் கசிய ஆரம்பித்துவிட்டது. வலியை உணராமல் இருக்க எனக்குத் தரப்பட்ட மாத்திரைகளினால் எனது வயிற்றின் உள்ளுறுப்புகள் சேதமாகி வேலை செய்வதை நிறுத்திக் கொண்டன. வலியை உணராமல் செய்யும் மாத்திரைகள் இரைப்பை, குடல்களுக்கு ஆபத்தை வரவழைக்கும் என்று அப்போதுதான் தெரிந்தது. உதரவிதானத்திலிருந்து தோள்பட்டையை இணைக்கும் நரம்பின் வழியாக வலி தோள்பட்டையைப் பாடுபடுத்தியது. அதை தோளின் எலும்பில் ஏற்பட்ட வலியென்று நான் மட்டுமல்ல இதர டாக்டர்களும் தவறாக முடிவு செய்துவிட்டோம். 

அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. ஆனால் அறுவை சிகிச்சையின்போது உயிரும் பிரியலாம் என்று டாக்டர் பலேரா சொன்னார். நானும் பெற்றோரும் வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தோம். அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நீண்டது. முடிவில், அல்சர் புண்களால் சிதைந்து போயிருந்த இரைப்பையை நீக்கினார்கள். அதனால் பயந்த மாதிரி உயிருக்கு ஆபத்து ஏதும் வரவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் நான் உணவை சாப்பிட முயன்ற போது, "நீ இந்த உணவை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் உனக்கு வயிறு இல்லை... அதாவது இரைப்பை இல்லை..' என்று அம்மா சொன்னார். 

அம்மா என்ன சொல்கிறார் என்று எனக்கு உடனே புரியவில்லை. வயிரைத் தொட்டுப் பார்த்தேன். வயிறு இருக்கிறதே... பிறகு ஏன் வயிறு இல்லை.. இரைப்பை இல்லை என்கிறார் என்று புரியாமல் விழித்தேன். அம்மா அறுவை சிகிச்சையின் போது நடந்தது என்ன என்று விரிவாகச் சொல்ல, எனக்குப் புரிந்தது. இரைப்பைத்தான் வயிற்றின் பிரதான உறுப்பு என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. இரைப்பைத்தான் உண்ணும் உணவை அரைத்து பிசைந்து கூழாக்கி சத்துக்களை உறிஞ்சிக் கொண்டு குடலுக்கு அனுப்புகிறது. என்ன சாப்பிட்டாலும் இரைப்பை இல்லாததினால் உணவு நேரடியாக குடலுக்கு வந்துவிடும். குடல் அதை ஜீரணிக்க முயலும். பிறகு அதை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கும். அதனால் என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் கழிவறைக்குப் போக வேண்டிய கட்டாயம் எனக்கு. அதனால், தினமும் சுமார் எட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவினைச் சாப்பிட்டு வருகிறேன். 

பெரும்பாலும் திரவ உணவை, காய்கறிகளை சார்ந்துள்ளேன். அடிக்கடி மருத்துவரை கண்டு பரிசோதனை செய்து கொள்கிறேன். வயிற்றில் தானே உருவாகும் விட்டமின் பி எனக்கு உருவாகாது. எனக்கு விட்டமின் டி குறைபாடும் உண்டு. அதனால் இந்த விட்டமின்களை மாதம் ஒருமுறை ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொள்கிறேன். இனிப்புள்ள உணவு வகைகளை நான் ஒதுக்கியே ஆகவேண்டும். உடல் நான் விருப்பப்படுகிற மாதிரி ஒத்துழைக்காததால், உடலுக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொண்டேன். அதனால் எனக்கும் பெற்றோர்க்கும் கணவருக்கும் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க முடிந்திருக்கிறது. எனது கணவர் சுவீடன் நாட்டுக்காரர். காதல் திருமணம். குழந்தைகள் வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறோம்' என்கிறார் நடாஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com