ஆஸ்துமா நோயாளிக்கு ஏற்ற உணவு வகைகள்!

ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேவையான முக்கிய சத்துக்களும் உணவுகளும் வழங்குகிறார் உணவியல் நிபுணர் ப.வண்டார்குழலி இராஜசேகர்
ஆஸ்துமா நோயாளிக்கு ஏற்ற உணவு வகைகள்!

சென்ற வாரத் தொடர்ச்சி...

ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேவையான முக்கிய சத்துக்களும் உணவுகளும் வழங்குகிறார் உணவியல் நிபுணர் ப.வண்டார்குழலி இராஜசேகர்.

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் செல் சிதைவைத் தவிர்க்கும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் நிறைந்த உணவுகள், நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் ஏற்படும் செல் சிதைவைத் தவிர்க்கிறது. பச்சை காய்கறிகள், பழங்கள், கேரட், பெர்ரி வகை பழங்கள் போன்றவற்றில் இந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளன. 

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் ஆகியவை நுரையீரலிலுள்ள காற்றறைகள் மற்றும் மூச்சுக்குழல்களில் உற்பத்தியாகும் லுகோடிரையன்ஸ் (bronchoconstrictive leukotrienes) என்ற ஒவ்வாமையை உருவாக்கும் பொருளால் ஏற்படும் சுவாசக் குழாய்களின் இறுக்கத் தன்மையும், சுருக்கத்தையும் குறைக்கின்றன. இவ்விரண்டு சத்துக்களும், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களிலும், ஆளி விதை, வால்நட், முட்டை, முழு தானியங்கள், எள் போன்ற உணவுகளிலும் போதுமான அளவு கிடைக்கின்றன. 

சுவாசப்பாதை மற்றும் சிறு காற்றறைகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கி, மென்மையாக தசைகளைக் காக்கும் நிவாரணியாக மக்னீசியம் சத்து உதவி செய்கிறது. இந்த குறிப்பிட்ட சத்தானது, அடர் பச்சை நிறமுள்ள கீரைகள் மற்றும் காய்கள், பரங்கி விதை, பாதாம் கொட்டை போன்ற உணவுகளில் இருக்கின்றது. குறிப்பாக தூதுவேளை, பொன்னாங்கன்னி, பசலை, வல்லாரை போன்ற கீரைகள் நன்மையளிக்கும். 

சுவாசக் குழலின் சுருக்கத்தைக் குறைத்து, சீரான சுவாசத்தைக் கொடுப்பதற்காக மூளைச் செல்களுக்கு உணர்வுகளை அனுப்ப உதவி புரியும் மீத்தைல்சான்தேன் (Methylxanthines) என்ற பொருள் காபிக் கொட்டையில் உள்ள கபின் என்ற உட்பொருளில் இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, கலப்படமில்லாத காபியை ஒரு நாளைக்கு ஒரு கப் மட்டுமே குடிப்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்மையே. 

ஆஸ்துமா நோயாளி, நீரிழிவு நோயாளியாக இல்லாத நிலையில், கலப்படமில்லாத சுத்தமான தேன், அதிலும் குறிப்பாக ஒரு வருடம் பழைய தேன் ஒரு தேக்கரண்டி, உணவிற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் குடிப்பதால், இருமலால், தொண்டை மற்றும் உணவுக்குழலில் ஏற்பட்டிருக்கும் அழற்சி சரி செய்யப்படுகிறது. 

ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிவாரணமளிக்கும் மருந்துகளும் சில உணவுகளுடன் சேரும்போது ஏற்படும் சத்துக் குறைபாடு, சில குறிப்பிட்ட அழற்சிப் பொருட்கள் அதிகரித்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டே உணவுமுறை வரையறுக்கப்பட வேண்டும். இதில், நோயாளியினுடைய வயது, பாலினம், நோயின் தீவிரம், நோயின் நிலை ஆகியவை மிக முக்கியமாகும். எனவே, அவைகளுக்குத் தகுந்தவாறும், நோயாளியின் தனிப்பட்ட உணவுப் பட்டியல் தயாரித்தல் என்றும் நலம் பயக்கும். மேலும், ஆஸ்துமா நோய்க்குத் தரப்படும் மருந்துகளால் வாய் மற்றும் தொண்டை வறட்சி, குமட்டல், வாந்தி, அதிக சோடியத்தால் கால்களில் வீக்கம், பொட்டாசியம் சத்துக் குறைதல், வயிற்றுப்போக்கு, கை நடுக்கம், தலைவலி, தொடர்ச்சியான இருமலால் உணவு செரிமான மண்டலத்தில் கீழிறங்காமல் எதிர்த்திசையில் மேலேறி வாந்தி போல் வருதல் ஆகியவை பெரும்பாலும் ஏற்படும். எனவே அவற்றை சரிசெய்யும் விதத்தில் திட உணவுகளைத் தவிர்த்து, பழச்சாறு, சூப், மசித்த சோறு அல்லது காய்கள், கஞ்சி போன்ற திரவ நிலையில் இருக்கும் உணவுகள் இருமலைக் குறைப்பதுடன் எளிதில் செரிமானத்திற்கும் உதவி புரியும். 

ஆஸ்துமா நோயாளிகள், அவர்களுக்குத் தேவையான சத்துள்ள உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதுடன், அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், தங்களது ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்து குறைபாடுகள் நிவர்த்தியாகிவிட்டனவா என்றும் மருத்துவரிடமும், உணவியல் வல்லுநர்களிடமும் ஆலோசனைகள் பெற்றுவருவதால், ஆஸ்துமாவிற்கு நிரந்தரத் தீர்வு பெறுவதுடன் அன்றாட வாழ்க்கையை நிம்மதியுடன் வாழலாம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிவாரணமளிக்கும்.

மஞ்சள், மிளகு மசாலா பால்

தேவையானவை: பால் - 100 மி.லி. , நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி, பூண்டு - 3 பல், பொடி செய்வதற்கு: கொம்பு மஞ்சள் - இரண்டு துண்டுகள், மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, திப்பிலி - 4, ஏலக்காய் - 3, சுக்கு - இரண்டு துண்டுகள்.

செய்முறை: பொடி செய்வதற்கு கொடுத்துள்ள அனைத்தையும், மிக்ஸியில் அரைத்து காற்று புகாத புட்டியில் வைத்துக் கொள்ளவும். பாலைக் கொதிக்க விட்டு, அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, நாட்டு சர்க்கரை மற்றும் அரைத்த பொடியில் அரை தேக்கரண்டி சேர்த்து ஒரு கொதிவிட்டு, வடிகட்டி பருகவும். பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், இந்தப்பாலை குடித்து வருவதால், அதிக அளவில் தேங்கியுள்ள சளி, இரத்தத்திலும் குடலிலும் உள்ள நச்சுக்கள் மற்றும் வாயு போன்றவை வெளியேற்றப்படுகின்றன. இதனால் நுரையீரலும் சுவாச மண்டலமும் நலம் பெற்று, நோயின் தீவிரம், அதனால் ஏற்படும் தொற்று ஆகியவற்றை கட்டுப்படுத்தப்படுகின்றன. 

தூதுவளை, இஞ்சி துவையல்

தேவையானவை: தூதுவளைக்கீரை - 2 கைப்பிடி, இஞ்சி - விரல் நீளத் துண்டு, சின்ன வெங்காயம் - 2, பச்சை மிளகாய் -1, பூண்டு - 5 பற்கள், கல் உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை: தூதுவளைக்கீரையை நன்கு சுத்தம் செய்யவும். இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, கடைசியில் தூதுவளைக்கீரையை சேர்க்கவும். சிறிதளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள நல்லெண்ணெயில், அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, சூடு ஆறியபின் சுத்தமான பாத்திரத்தில் துவையலை மூடி வைத்துக்கொண்டு, தேவையானபோது உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு வாரம் நன்றாக இருக்கும்.
தூதுவளையில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் நுண்பொருட்கள், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை சுவாச மண்டலத்திற்கு நன்மையளிப்பதால், இந்தத் துவையலை ஆஸ்துமா நோயாளிகள் உணவாக சேர்த்துக் கொள்ளலாம். தொண்டை எரிச்சல் இருந்தால், மிளகாயைத் தவிர்க்கலாம். 

தொகுப்பு: சுஜித்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com