அழற்சியைக் குறைக்கும் பேரீச்சம்பழம்!

தேனில் ஊற வைத்தது போன்ற வழவழப்புடனும், நெய்ப்புத் தன்மையுடனும் கூடியது மற்றொரு வகை. (
அழற்சியைக் குறைக்கும் பேரீச்சம்பழம்!

எனக்கு குடிப்பழக்கத்தினால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் உட்புற அழற்சி, வறட்டு இருமல், சிறுநீர் எரிச்சல், தண்ணீர் தாகம் போன்றவை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். பேரீச்சம் பழம் சாப்பிட நல்லது என கேள்விப்படுகிறேன். இப்பழத்தின் மருத்துவ குணங்களை அறிய முடியுமா?
 -ராஜேந்திரன், சென்னை

ஈச்சை மூன்று வகைப்படும். அவையாவன:-
1.ஈச்சை- நம் தேசத்தின் பண்படாத நிலப் பரப்புகளில் பூமியின் மட்டத்திலிருந்து புதர் போன்று மண்டி வளரும் இனத்தவை ஈச்சை எனப்படும். (Phoenix humilis)

2. சிற்றீச்சை- வளர்ந்த மரங்களில் உண்டானவையும் பழுப்பு நிறத்தவையுமான பழங்களை சிற்றீச்சை என்பர். (லாடின்- Phoenix sytvestris)

3. பேரீச்சை- ஸிந்துப் பிரதேசம், பஞ்சாப் பிரதேசம், எகிப்து, அரேபியா முதலியவற்றில் விளைந்து பதப்படுத்தப் பட்டவற்றை பேரீச்சை என்பர். இவை வெளித் தோற்றத்தில் நெய்ப்பு இல்லாது உலர்ந்து சுருக்கங்களுடன் கூடிய ஒரு வகை.

தேனில் ஊற வைத்தது போன்ற வழவழப்புடனும், நெய்ப்புத் தன்மையுடனும் கூடியது மற்றொரு வகை. (லாடின்- Phoenix dactylifera)
இவை அனைத்தும் ஒரே விதமான குணங்கள் படைத்தவை எனினும், ஈச்சையைவிட சிற்றீச்சையும், சிற்றீச்சையை விடப் பேரீச்சையும் தரத்தில் உயர்ந்தவை.

இயற்கையாகவே இவற்றில் ஓர் கொழகொழப்பும் இனிப்பும், குளிர்ந்த தன்மையும் உண்டு. நெய்ப்புத்தன்மை வெளிப்படையாகத் தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் உள்ளுறுப்புகளுக்கு நெய்ப்புத் தன்மை செயலாற்ற வேண்டிய பணிகளை இவை சரிவரச் செய்கின்றன. இவ்விதம் உஷ்ணத்திற்கு மாறான குணங்கள் பொருந்தியதால் சிறிது தாமதித்தே ஜீரணமாகக் கூடும். ஜீரணித்த நிலையிலும் தன் இயற்கையான கொழ கொழப்பை ரத்தம் போன்ற பொருள்களுடன் கலக்கச் செய்து அவற்றையும் சிறிது தடிப்படையச் செய்கின்றது. எனவே ரத்தத்தை உருவாக்கும் கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறிது அதிகமாகவே உழைத்துச் செயல்பட வேண்டியிருப்பதால் அவற்றிற்கு ஓரளவு சிரமத்தையளிக்கும்.

ஆனால் அவயவங்களில் ஏற்படும் அழற்சி நிலைகளைப் போக்குவதற்கு இந்த குணங்கள் மிகவும் உதவுகின்றன. சக்திக்கு மீறிய சாகசச் செயல்களால் மார்பு பக்கத்தில் உள்ள அவயவங்களில் சிதைவு ஏற்பட்டோ, மற்ற விதமாகவோ, வலி, வறட்சி இவற்றுடன் கூட இருமல் தோன்றும் போது பேரீச்சையின் உபயோகம் அழற்சியைக் குறைத்து குணம் தருகிறது. சிறுநீர் நாள அழற்சியால் சிறுநீர், சீழ் கலந்தது போன்று வெளிப்படும் நிலையிலும் மேற்கூறியது போன்றே பேரீச்சை குணம் தருகிறது. அவ்விதமே உஷ்ணம் நிமித்தமாக வாய், மூக்கு முதலியவற்றின் வழியே ரத்தம் பெருக்கிடும் ரத்தபித்தம் எனும் வியாதி, சீத ரத்தபேதி, பித்த நீர் காரணமாக அவயங்களில் எரிச்சல், மற்றும் தண்ணீர் வேட்கை, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி முதலியவை குறைகின்றன. ருசியின்மை நீங்கிப் பொருள்களைச் சுவைக்க விருப்பமுண்டாவதுடன் பலம், புஷ்டி இவற்றை அளிக்கிறது. கபம் போன்றவை சுவாச நாளம் முதலியவற்றைப் பற்றிக் கொண்டு அடைப்பதன் மூலம் இருமல் உண்டாகும் போது பேரீச்சையின் உபயோகம் அடைப்பை எளிதில் நீக்கி இருமல், இழுப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது.

அ ஆ இ என்ற ஜீவ சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவற்றை உணவாக உபயோகித்தல் அவற்றின் பற்றாக்குறையைப் போக்கி உடலுக்கு வலிவூட்டுவதுடன் புத்துணர்ச்சியையும், போஷணையையும் கொடுக்கிறது. மலச்சிக்கலை அகற்றுகிறது. பெரிய வைசூரி, மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் உடல் மெலிந்த நிலையில் இவற்றைக் கொட்டைகளை நீக்கிப் பாலில் ஊற வைத்துக் கசக்கிப் பிழிந்து எடுத்துச் சிறியவர்களும் பெரியோர்களும் பருகுவதால் அவர்கள் உடல் ஊட்டம் பெறுகிறார்கள்.

புத்துணர்ச்சியும் பெறுகிறார்கள். சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து குடிக்கச் சாராயம் போன்ற வஸ்துக்களால் ஏற்பட்ட விஷத் தன்மை நீங்குகிறது.
இதில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் எளிதில் உள்ளுறுப்புகளுடன் சேரும் அளவில் அடைந்திருப்பதால் நல்ல ரசாயனமாகிறது.
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com