மரணம் குறைந்திருக்கிறது.. நோயும் மருத்துவமனையும் குறையவில்லையே ஏன்?

மனிதர்களுடைய உடல் உபாதைகள் குறையாமலும், ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேதான் இருக்கின்றன. இதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளதா?
மரணம் குறைந்திருக்கிறது.. நோயும் மருத்துவமனையும் குறையவில்லையே ஏன்?

மருத்துவதுறையின் முன்னேற்றத்தால் மனிதர்களுடைய இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக ஓர்  ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் மனிதர்களுடைய உடல் உபாதைகள் குறையாமலும், ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேதான் இருக்கின்றன. இதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளதா?

- தியாகராஜன், திருச்செங்கோடு.

மூன்று வகையான வழிகளால் தான் மனிதர்கள் நோய்வாய்ப் படுவதாகவும், அவற்றின் சமமான நிலை அல்லது செயல்களால் ஆரோக்யம் நிலைத்திருப்பதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது.

அவை-


1. கால - பருவகாலம். முன்பனி, பின்பனிக் காலம், கோடைக் காலம், மழைக்காலம் என்று மூன்று வகையான பருவகாலங்களைத்தான் நாம் அடிக்கடி கடந்து போக வேண்டியிருக்கிறது. அவற்றில், ஒரு பருவகாலம் தன் இயற்கையான நிலையைவிட்டு குறைவாக இருந்தாலோ, அல்லது அதிகமாக இருந்தாலோ அல்லது காலம் தவறி மற்ற பருவகாலங்களின் நிலை தெரிந்தாலோ நோய்கள் ஏற்படும். உதாரணமாக - மழைக்காலத்தில் பெய்ய வேண்டிய மழையானது அளவில் குறைந்தாலோ, அல்லது அதிக அளவில் மழை பெய்தாலோ அல்லது மழைக் காலத்தில் கடுமையான கோடையைப் போல, வெயில் அடித்தாலோ அதுவே நோய்க்குக் காரணமாகும். அதே சமயம், மழைக்காலத்தில் மழை வேண்டிய அளவு பெய்து பயிர்களையும் மனிதர்களையும் மிருகங்களையும் துன்புறுத்தாத அளவில் இருந்தால், அதுவே ஆரோக்கியத்தை நிலை நிறுத்தக் கூடும்.

2. அர்த்த - சப்தம், தொடு உணர்ச்சி, பார்வைக்கு அகப்படும் பொருட்கள், நாக்கின் சுவை, முகர்தல் ஆகிய ஐம்புலங்களின் வழியாகச் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் குறைந்தாலோ, கூடினாலோ, தவறான வழியில் பயன்படுத்தினாலோ, அவையே நோயாக பரிணமித்து மனிதர்களை துன்புறுத்தும். உதாரணமாக காதைப் பயன்படுத்தாத வகையில் பஞ்சினால் மூடிக் கொண்டாலோ, அதிகமான இரைச்சல் தரும் ஒலிபெருக்கிகள், ரயில் சத்தம், வாகனசத்தம், தொழிற்சாலை சத்தம் போன்றவற்றை கேட்க நேர்ந்தாலோ, கேட்கக் கூடாத வார்த்தைகளை செவியினுள் வாங்கி, மனம் துக்கப்படுவதாலோ, நோய்கள் ஏற்படக் கூடும். இவை போலவே, மற்ற புலன்களையும் நாம் ஊகித்தறியலாம். புலன்களின் சமச்சீரான செயல்பாடுகளின் மூலமாக ஆரோக்யத்தை நிலை நாட்டலாம்.

3. கர்ம - உடலால், மனதில், வாக்கால் செய்யப்படும் செயல்களனைத்தும் அளவிற் குறைந்தாலோ, அதிகமானாலோ, முறை தவறிச் செய்தாலோ நோய்கள் அண்டக் கூடும். அவற்றின் சமச்சீரான செயல்களால் ஆரோக்யமானது நிலை நிறுத்தப்படுகிறது. உதாரணமாக, உடலால் செய்யப்பட வேண்டிய வேலைகளைச் சோம்பேறித்தனம் காரணமாக, செய்யாமலிருந்தாலோ, தன் சக்தியை மீறி உடலை வருத்தி அதிக அளவில் செய்தாலோ, அமரும் முறை, படுக்கும் முறை, நடக்கும் விதம் ஆகியவற்றை செய்யக் கூடாத வகையில் செய்தாலோ அதுவே பலவகை உபாதைகளுக்கு வித்திடக் கூடும். உடலை வருத்தாமல், சமநிலையில் வைத்திருந்து செய்யப்படும் செயல்களால் ஆரோக்யமானது பாதுகாக்கப்படுகிறது. 

நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் கால அளவு, நேர அளவு, எடுத்துக் கொள்ளும் முறை போன்றவை சரிவர தீர்மானிக்கப்படாமல் எடுத்துக் கொள்வதாலும் நோய்கள் நீங்குவதற்கு பதிலாக, அதிகரிக்கக்கூடும். “"விருந்தும்” மருந்தும் மூன்றுநாள்' என்ற சித்தாந்தம் ஏனோ மருந்துக்கு இன்று பொருந்தவில்லை. ஆனால் விருந்தோம்பல் மூன்று நாட்களெல்லாம் இன்று நீடிப்பதில்லை;  ஓரிரு நாட்களுடன் முடிந்துவிடுகிறது.  

(தொடரும்) 
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com