யாரெல்லாம் பகலில் தூங்கலாம்?

மதிய உணவிற்குப் பிறகு சிறிது ஓய்வும் உறக்கமும் சுமார் 15 - 20 நிமிட நேரம் தூங்கி உடனே விழித்தெழுந்து
யாரெல்லாம் பகலில் தூங்கலாம்?

என் வயது 37. பகலில் அதிகமாகத் தூக்கம் வருகிறது. அலுவலகம், பேருந்துப் பயணம், ரயில் பயணம் என்று எதுவாக இருந்தாலும் பகலில் தூங்கித் தூங்கி வழிகிறேன். இதனால் சட்டைப் பையிலிருந்த அலைபேசியைக் கூட பயணத்தின்போது திருடர்களால் இழந்திருக்கிறேன். பகல் தூக்கம் நல்லதா? கெட்டதா?

ராஜேந்திரன், கோவை.

மதிய உணவிற்குப் பிறகு சிறிது ஓய்வும் உறக்கமும் சுமார் 15 - 20 நிமிட நேரம் தூங்கி உடனே விழித்தெழுந்து சுறுசுறுப்பாகப் பணிகளில் ஈடுபடுபவர் உண்டு. இவர்களுக்கு இந்த உறக்கம் மாலைப் பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்க உதவும். இது நல்லதே. ஆனால் அலைபேசி, மணி பர்ஸ் போன்றவற்றைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பகல் தூக்கத்தை சுமார் ஒரு மணி நேரம் நீட்டித்தால் உடல் பருமன், அசதி, கொழுப்பு அடைப்பு, சோம்பல் போன்ற உபாதைகளை தோன்றச் செய்துவிடும். உடல் இளைத்து வறண்டிருப்பவருக்கு பகல் தூக்கத்தினால் உடல் பருமன் ஏற்படும்.

பொதுவாக பகலில் தூக்கமும் இரவில் விழிப்பும் கெட்டதே. இயற்கை விளைவான விழிப்பு ரஜோ குணத்தின் பகல் ஆதிக்கத்தால் ஏற்படுவதால், பகலில் சுறுசுறுப்பும், இரவில் தமோ குணத்தின் ஆதிக்கத்தால் தூக்கம் நம்மை இயற்கையாகவே தழுவிக் கொள்கிறது. அதனால் தமோ குணத்தில் வேலை செய்து, ரஜோ குணத்தில் தூங்குபவர்களுக்கு எண்ணற்ற உபாதைகளுக்கான விதையை உடலில் தூவத் தொடங்கி விடுகிறார்கள்.

சிலருக்கு இரவு உணவு தாமதமாகலாம். காலையில் வயிறு கனத்திருக்கிறது என்றால், மேலும் சிறிது நேரம் தூங்கி எழுந்தால் வயிற்றிலுள்ள உணவு செரித்து நல்ல பசி ஏற்பட்டுள்ளதை உணர்ந்தால், அந்த அளவில் பகல் தூக்கம் நல்லதே. இளம் வயதினர் பலரும் இன்றைய நிலையில் இரவில் தாமதமாகச் சாப்பிட்டு படுக்கைக்குச் செல்வதைக் காண முடிகிறது.

பகல் தூக்கம் சிலருக்கு நன்மை தரும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பாடுவதில் அதிகம் ஈடுபடுபவர் மூச்சுக்காற்றை அதிகம் பயன்படுத்துவதால் பிராண சக்தியை அதிகம் செலவிடுகின்றனர். அதனால் திரும்பப் பெற பகல் தூக்கம் உதவும். வேதம் ஓதுதல், வாய்விட்டு உரக்கப் படிதல், திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்வதும் செய்வதும், உடல் உழைப்பு அதிகம் தேவையான தச்சு, கொத்து, வெட்டுதல், தோண்டுதல் முதலிய தொழில்கள், சுமைதூக்கிச் செல்லுதல், அதிகதூரம் வழி நடத்தல் முதலியவற்றால் பிராண சக்தியை அதிகம் செலவு செய்யாதவர்கள் பகலில் தூங்கி, இழந்ததை மீண்டும் பெறலாம்.
வயிற்று வலி, அஜீரண நோயுள்ளவர், அடிபட்டு ரத்தம் அதிகம் சேதமானவர், உடல் இளைத்தவர், நோய்களால் பலம் இழந்தவர், மூச்சு விடுவதற்குக் கஷ்டம் தரும் இளைப்பு, விக்கல் உபாதையுள்ளவர், உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, அடிபட்டோ கடும் வேதனைக்குள்ளானவர், மனக்கலக்கமுள்ளவர், கோபம், சோகம், பயம் முதலிய உணர்ச்சிக் கொந்தளிப்பால் துன்புற்றவர், இவர்களுக்கு வேதனை குறையவும் இழந்த அமைதியை மீண்டும் பெறவும் உடல் இயக்கம் சுறுசுறுப்படையவும் பகல் தூக்கம் நல்லதே.

பகல் நீண்டு இரவு குறைந்த நாட்களான கோடை முதலிய பருவங்களில் வெப்ப மிகுதியால், உடலிலுள்ள புஷ்டிச் சத்து குறைந்து வறண்டுவிடும். பகல் தூக்கத்தால், கப சக்தி மிகுந்து உடல் மீண்டும் வலிவு பெறும். இரவு நேரம் குறைவாக இருப்பதால் ஏற்பட்ட தூக்கக் குறைவை பகல் தூக்கததால் ஈடு செய்து கொள்ள முடியும்.

இரவுத் தூக்கம் கெட்டுவிட்டால், மறுநாள் பகல் லேசான உணவைச் சாப்பிட்டு, இரவு விழித்திருந்த நேரத்தில் பாதி நேரம் மட்டும் தூங்குவது நல்லது. களைப்பு இல்லாதிருந்தால் அந்தத் தூக்கமும் அவசியமில்லை. 

வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோருக்கும் பகல் தூக்கம் மன அமைதியையும் பலத்தையும் தரும். வயதானவர்களுக்கு உணவால் தேய்வை ஈடுகட்ட முடியாது. ஓய்வால் தேய்வைக் குறைக்கலாம். அதனால் நல்ல ஓய்வு தரும் பகல் தூக்கம் இதமாகிறது. சிறுவர்களுக்கு வளர்ச்சியின் வேகத்தைத் துரிதப்படுத்தவும், தேய்வைக் குறைக்கவும் பகல் தூக்கம் உதவுகிறது.

நீங்கள் வயோதிகருமல்ல, சிறுவனுமல்ல என்பதாலும் பகல் தூக்கம் ஏற்பட்டு கஷ்டப்படுவதாலும், மூளையில் தமோ குண ஆதிக்கத்தால் துன்பப்படுவதாகத் தெரிகிறது. மூக்கினுள் அணுதைலம் நான்கு முதல் ஆறு சொட்டுகள் உணவிற்குப் பிறகுவிட்டு உறிஞ்சவும். நெற்றியில் ராஸ்னாதி சூரணம் இஞ்சிச் சாறுடன் குழைத்துச் சூடாக்கிப் பற்று இடவும். இரவில் வாயினுள் அரிமேதஸ்தைலம் விட்டுக் கொப்பளித்துத் துப்பவும். உணவிற்குப் பிறகு, வசம்பு அல்லது விரளி மஞ்சள் கட்டையைப் புகைத்து மூக்கினுள் விட்டுக் கொள்ளவும். உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை குறைக்கவும். இளநீர் 1-2 சொட்டு கண்களில் விடவும். இரவு படுக்கும் முன் இவை தமோ குணத்தைக் குறைக்க உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com