திரிபலா சூரணத்தின் பயன்கள்!

என் வயது 70. நான் கடந்த 25 வருடங்களாக நீரிழிவு நோயினால் அவதியுறுகிறேன்.
திரிபலா சூரணத்தின் பயன்கள்!

என் வயது 70. நான் கடந்த 25 வருடங்களாக நீரிழிவு நோயினால் அவதியுறுகிறேன். இன்சுலின் எடுத்துக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறுவைச் சிகிச்சை இரத்த அடைப்புக்காக இருதயத்தில் பைபாஸ் செய்யப்பட்டது. அதுமுதல் clopilet என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். ரத்தம் உறைதலைத் தடுக்க நான் 5 வருடங்களாக திரிபலா சூரணம் தினமும் அரை தேக்கரண்டி சாப்பிடுகிறேன். இதில் உள்ள கடுக்காய் ரத்தம் உறைதலை ஏற்படுத்துமா? நான் இதனைத் தொடர்ந்து சாப்பிடலாமா? ஏதும் பக்கவிளைவுகள் உண்டா?

பி.நடராஜன், சென்னை-23.

துவர்ப்புச் சுவையுடைய கடுக்காய், லேசானது, அதனால் செரிப்பதற்கு எளிதானது, பசித்தீயை வளர்க்கும். சீரணத்தை அளிக்கும். உஷ்ணம் எனும் சூடான வீர்யமுடையது. இளகச் செய்யும் தன்மையுடையது. இதனாலேயே நீரிழிவு நோயினால் ஏற்படும் இதய நோய்களுக்கு அருமருந்தாகும். உடலிலுள்ள பல உறுப்புகளின் உட்பகுதிகளில் சென்று செயலாற்றக் கூடிய கடுக்காயின் பெருமைகளை அறிந்திருந்த நம் முன்னோர், கடுக்காய்த் தோலை நெய்யில் வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு இளமையைத் தக்க வைத்துக் கொண்டனர்.

கல்லீரலைப் பாதிக்கும் காமாலை, இரைப்பை மற்றும் சிறு குடல் இணையும் பகுதியில் அமைந்துள்ள க்ரஹணி எனும் வால்வுப் பகுதியில் ஏற்படும் தொய்வு, நீரிழிவு நோயினால் ஏற்படும் உடல் இளைப்பு, சிறுநீரின் உட்புறத் தேக்கத்தினால் ஏற்படும் உடல் வீக்கம், குடலில் ஏற்படும் நீரோட்டத்தினால் உண்டாகும் பேதி, மண்ணீரல் உபாதைகள் போன்றவை, கடுக்காயின் உட்புற உபயோகத்தினால் குணமடையக் கூடியவை. உஷ்ணம் மற்றும் இளக்கும் தன்மையுடையதால் ரத்த உறைதலை கடுக்காய் ஏற்படுத்துவதில்லை. கப, வாத நோய்களைக் குணப்படுத்தும்.

துவர்ப்புச் சுவையுடைய எந்த உணவும் மருந்தும் கபம், பித்தம், ரத்தம் இவற்றினால் ஏற்படும் தீமைகளை அழிக்கின்றன. கடுக்காய் தோலைத் தண்ணீரில் வேக வைத்து நன்கு உலர்ந்ததும் பொடித்து, தேன் குழைத்துச் சாப்பிட்டால் பேதி நிற்கும். அதே கடுக்காய்த் தோலை வெறுமனே பொடித்து வெந்நீருடன் சாப்பிட, மலச்சிக்கலை நீக்குகிறது. துவர்ப்புச் சுவை உடலில் நீர்ப்பசையின் ஏற்றத்தைத் தடுத்து வறட்சியைத் தருகிறது. ரத்தத்திலுள்ள ஈரத்தை உலர்த்தி அதன் ஓட்டத்தைச் சீராக்குகிறது. புண்களை ஆற்றக் கூடியது. அங்குமிங்கும் கட்டிக் கிடக்கக் கூடிய உட்புற குழாயிலுள்ள மலங்களைச் சுரண்டி வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

கடுக்காயுடன் சேர்க்கப்படும் நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயின் கூட்டிற்கே திரிபலை என்று பெயர். நெல்லிக்காயும் கடுக்காய் போன்றே குணமுள்ளது. ஆனால் குளிர்ச்சியான வீரிய முடையது. இனிப்புச் சுவையும் அதிலுள்ளதால் குறிப்பாக, பித்தத்தைப் போக்குவதில் சிறந்தது. சீரணமான பின் உவர்ப்பு குணம் கொண்டதால் கபத்தையும், புளிப்பினால் வாயுவையும் குணப்படுத்துகிறது. இதயத்திற்கு இதமானது. நல்ல பார்வையை அளிக்கும். குரலைச் சீர்படுத்தும். கடுமையான காய்ச்சலைத் தணிக்கும்.

தான்றிக்காய், நெல்லிக்கனியைக் காட்டிலும் குறைவான குணமுள்ளது. துவர்ப்பு, இனிப்புச் சுவையுமுடையது. குளிர்ச்சியான வீர்யமுடையது. இருமல், மூச்சுத்திணறல், தொண்டை நோய், கபம், பித்தம், கண்நோய் போக்கும். கூந்தலை வளர்க்கும். இந்தக் காயின் விதையினுள்ளே இருக்கும் பருப்பைக் கொண்டு கண்ணிற்கு மை தீட்டினால். கண்ணில் பூ (கேட்டராக்ட்) விழுதலைத் தவிர்க்கலாம்.

இவை மூன்றும் சம அளவு எடுத்துத் தூள் செய்துச் சாப்பிட- கண்நோய்களை அகற்றும். காயத்தை ஆற்றும். தோல் வியாதியைத் தூக்கி எறியும். பிசுபிசுப்பு, கொழுப்பு, நீரிழிவு, கபம் இவற்றைப் போக்கும் இரத்தம் தொடர்பான நோயை அகற்றும்.

இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியாகச் சாப்பிடுவதை விட, அவற்றின் சேர்க்கை மிகவும் விசேஷமானது என்பதை நம் முன்னோர் கண்டறிந்தனர். தனியாகச் செய்ய முடியாத சிறப்பான செயல்களை, மருந்துகளின் சேர்க்கையானது அவற்றின் தனித்தன்மையை விட்டு விட்டு, அவற்றின் சேர்க்கையினால் செய்கின்றன. அதனால் நீங்கள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் திரிபலையைச் சாப்பிடலாம். இந்த சூரண மருந்தை ஐந்து கிராம் எடுத்து இருநூற்றைம்பது மி.லி. தண்ணீருடன் கொதிக்க வைத்து அறுபது மி.லி.யாக குறுக்கி வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.


(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com