தோல் உபாதைக்கான காரணம்..!

பதினெட்டு வகையான தோல் உபாதைகள் மனிதர்களைத் தாக்கக் கூடும் என்று அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.
தோல் உபாதைக்கான காரணம்..!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 37. உடலில் ஆங்காங்கே அத்திப்பழம் போன்று சிவந்த நிறத்தில் சருமமும் அதைச் சுற்றியுள்ள முடிகளும் இருக்கின்றன. அந்தப் பகுதிகள் தடித்தும், நீர்க்கசிவும் ஏற்பட்டு, வெடித்தும், எரிச்சலும் ஏற்படுகின்றன. அதிகமான வலியும் உள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

- முருகன்,
ஆலந்தூர், சென்னை.

பதினெட்டு வகையான தோல் உபாதைகள் மனிதர்களைத் தாக்கக் கூடும் என்று அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. தாங்கள் குறிப்பிடும் உபாதையானது ஒதும்பரம் அதாவது அத்திக்காய் பெருநோய் எனும் வகையைச் சார்ந்ததாகத் தெரிகிறது. பித்ததோஷத்தின் சீற்றம் காரணமாக இந்த உபாதை ஏற்படுவதாகவும் அந்நூல் கூறுகிறது.

தோல் உபாதைக்கான காரணங்கள் - முறைகேடான உணவு, செயல் ஆகியவற்றாலும், முக்கியமாக ஒன்றோடு ஒன்று பொருந்தாத உணவு வகைகளாலும் தூண்டப்பட்ட வாத- பித்த- கப தோஷங்கள், உடலில் குறுக்காகச் செல்லும் ரத்தக் குழாய்களை அடைந்து, சருமம், நீர், ரத்தம், மாமிசம் ஆகியவற்றைக் கெடுக்கின்றன.

மேலும் கேடுற்ற தோஷங்கள் சருமம் முதலியவற்றைத் தளரச் செய்து பிறகு வெளிப்புறம் வந்து, சருமத்தில் நிற மாற்றத்தை உண்டாக்குகின்றன. தக்கவாறு சிகிச்சை செய்யாவிடில், இந்த உபாதை நாளடைவில் உடல் முழுவதையும் சிதைக்கும் தன்மை உள்ளது.

திக்தகம் என்றும் மஹாதிக்தகம் என்றும் தயாரிக்கப்படும் மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை உடலின் தன்மைக்கு ஏற்ப, சில காலம் பருகச் செய்வார்கள். இம்மருந்து உடலில் நன்கு பரவி, வாயுவைக் கீழ் நோக்கிச் செலுத்துதல், பசி நன்றாக ஏற்படுதல், மலத்தில் இம் மருந்தின் நெய்ப்பினை உணருதல், மேலும் இம் மருந்தைச் சாப்பிடுவதில் ஏற்படும் வெறுப்பு, மருந்தினால் ஏற்படும் களைப்பு ஆகியவை, மருந்தினுடைய செயல்பாடு நன்றாக வந்தடைந்து விட்டது என்பதை அறிந்தவுடன், இந்த நெய் மருந்தை மேலும் அருந்துவதற்குத் தரமாட்டார்கள்.

பதினைந்து கிராம் கருங்காலிக் கட்டையை ஒருலிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, ஒரு நாளில் பலதடவை சிறுகச், சிறுகப் பருகுவதற்குப் பயன்படுத்துவதற்கான உகந்த நேரமும் இதுவேயாகும்.

நெற்றி, கை, பாதம் போன்ற பகுதிகளிலுள்ள காரி ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து கெட்ட ரத்தத்தைக் கீறி வெளிப்படுத்துவார்கள். இதனால் உடலில் வாயு குவிந்துவிடாமல் தடுப்பதற்காக, மேலும் சில மூலிகை நெய் மருந்துகளைப் பருகச் செய்வார்கள்.

உணவில் புளி, உப்பு, காரம், தயிர், பால், வெல்லம், நீர் மற்றும் கடல் நீர்வாழ் பிராணிகள், எள்ளு, உளுந்து ஆகியவை தடை செய்யப்பட்டு, பழைய புழுங்கலரிசி, பார்லி, கோதுமை, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, கசப்பான இலைக்கறிகள், வறண்ட நிலத்தில் வாழும் ஆடு, கோழி, முயல் போன்றவை, புடலை, கருங்காலிக்கட்டைக் குடிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டே உணவைத் தயாரித்து வழங்குவார்கள்.

குடலைச் சுத்தம் செய்யும் பொருட்டு, படோலமூலாதி கஷாயம், மாணிபத்ரம் லேஹ்யம் போன்றவற்றைப் பயன்படுத்தி, கெட்டுப் போன ரத்தத்தை சுத்தப்படுத்தி, சருமத்தைப் பாதுகாத்தனர். உட்புற சுத்தத்தை நன்கு ஏற்படுத்திய பிறகே, வெளிப்புறப் பூச்சு மருந்துகளாகிய நால்பாமராதி தைலம், சததௌதக்ருதம் போன்றவற்றைப் பயன்படுத்தி தோல் உபாதைகளை பண்டைய ஆயுர்வேத மருந்துவர்கள் குணப்படுத்தினார்கள்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com