உடல் பருமன், சோம்பேறித்தனம் நீங்க...!

தேவையற்ற கொழுப்பு அம்சங்கள் தவிர்க்கச் செய்து வறண்டதாக்கலாம்.
உடல் பருமன், சோம்பேறித்தனம் நீங்க...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனது மகனுக்கு வயது 39. எடை 110 கிலோ. நடைப்பயிற்சி முதலிய எந்தவித உடற்பயிற்சிகளும் இல்லாமல் எப்போதும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளையும், டீவி சீரியல்களையும் பார்த்துப் பொழுது போக்கி வருகிறான். எப்போதும் சப்பாத்தி மட்டுமேதான் சாப்பிடுகிறான். அரிசி சாதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடும் என்கிறான். இது உண்மையா?    

                                                            எம். எஸ். நளினி, சென்னை-33.

ஒரு வகையில் அவருடைய நினைப்பு சரியாகத்தான் உள்ளது. அஷ்டாங்க சங்க்ரஹம் எனும் ஆயுர்வேத நூலில் பல வகையான சம்பா நெல்கள் மற்றும் அரிசி பற்றிய வர்ணனையில் இனிப்புச் சுவையுள்ளவை; உணவின் செரிமான இறுதியில் இனிப்பாகவே இருப்பவை; பசையுள்ளவை; வீரியத்தை வளர்ப்பவை; மலத்தைக் கட்டுபவை; மலத்தைக் குறைப்பவை; குளிர்ச்சியானவை என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. கோதுமையைக் மட்டுமே மாவாக்கி, சப்பாத்தி சாப்பிடும் நிலையில், கோதுமையைப் பற்றிய விவரமும் நாம் அந்நூலிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது - வீரியத்தை வளர்ப்பது; குளிர்ச்சியானது; எளிதில் செரிக்காத குணமுடையது; பசையுள்ளது; உயிரையளிப்பது; வாதம் மற்றும் பித்த தோஷங்களைப் போக்குவது; முறிந்த உறுப்புகளை சேர்க்க வல்லது; இனிப்பானது; உடலை நிலை நிறுத்துவது; மலமிளக்கி. மெல்லிய நீண்ட கோதுமை உடலுக்கு உகந்தது. குளிர்ச்சி, துவர்ப்பு, இனிப்புச் சுவையுடன் லேசான தன்மையுடையது.

உங்களுடைய மகனுடைய பிரச்னையே சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைதான். அதில்தான் ஆபத்து அதிகமுள்ளது. சிறு வயதிலிருந்தே அதிக செல்லம் கொடுத்து நீங்கள் வளர்த்திருந்தாலோ அல்லது தாய்-தந்தையரின் நேர்ப்பார்வையில் கண்டிப்பும், நல்உபதேசமும் இல்லாமல் வளரும் பிள்ளையாக இருந்திருந்தால், இது போன்ற வாழ்க்கையை அவர் இத்தனை வயது வந்திருந்தாலும் எதிர்கால சிந்தனை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். 39 வயதில் உபதேசம் தலைக்கு ஏறாது. அதனால் கீழ் காணும் சில ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் அவர் உடல் பருமனையும், சோம்பேறித்தனத்தையும் மாற்ற முயற்சிக்கலாம்.

உடலையும் தலையையும் விரேசனம் என்ற முறைப்படி சுத்தப்படுத்துதல். விரேசனம் என்றால் வாந்தி மற்றும் பேதி மருந்து கொடுத்து குடலை சுத்தப்படுத்துவதுடன், மூக்கினுள் விடும் மூலிகைத் தைலங்களால் தலைப்பகுதியைச் சுத்தப்படுத்துவதுமாகும். இதனால் தலையைச் சார்ந்த தமஸ் எனும் மனோ தோஷம் விலகுவதால், மனமும் மூளையும் சுறுசுறுப்படையும்.

இரத்தத்தை வெளியேற்றுதல்  ரத்தக் குழாயைக் கீறி இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை முறையால் இரத்தத்தில் தேங்கியுள்ள அழுக்குகளைக் களையலாம் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் அவருடைய சோம்பலினால் ஏற்பட்ட இரத்த அழுக்குகள் நீங்கும்.

மூலிகைப்புகை பிடித்தல் -  ஊமத்தம் இலையை காய வைத்து நெருப்பில் போட்டு வரும் புகையை முகர்வதால் மூளையிலுள்ள சோர்வையும் சோம்பலையும் மாற்றலாம்.

பசி, தாகம் ஏற்படும் வகையில் உபவாசமிருத்தல் -  இதனால் தேவையற்ற கொழுப்பு அம்சங்கள் தவிர்க்கச் செய்து வறண்டதாக்கலாம். சிந்தனையைத் தூண்டச் செய்யும் வகையில்  வேலைகளைத் தரலாம். இதனாலும் மூளையைச் சுறுசுறுப்பாக்கலாம். அவருக்கு பிடித்தமான விஷயங்களைச் சிந்தனை செய்து நன்மை பெறும் வகையில் இந்த சிகிச்சை முறையைக் கையாள வேண்டும். உதாரணமாக பாட்டிலும், வாத்தியம் இசைப்பதிலும் ஆர்வமுள்ளவராக இருந்தால் அவற்றையே பயிற்சி செய்து அவை மேலும் மெருகுற செய்யும் சிந்தனைகளைத் தூண்டி  மகிழ்ச்சியுறலாம். இன்பம் தராத படுக்கையைப் பயன் படுத்தல் ஒரு சிகிச்சை முறையாகும். இதனால் அதிக தூக்கமின்றி சோம்பலை நீக்கலாம்.

ஸத்துவம் எனும் நற்குணத்தின் ஏற்றம், பெருந்தன்மை, தமோகுண மின்மை, வறண்ட உணவு ஆகியவற்றின் மூலம் அவருடைய சோம்பலான வாழ்க்கை முறையை மாற்றி வாழ்க்கையை பயனுறும் வகையில் அமைக்கலாம். ஆயுர்வேத மருந்துகளாகிய வரணாதி கஷாயம் மற்றும் லோத்ராஸவம் போன்ற மருந்துகள் உடல் பருமனைக் குறைப்பவை. சிலாசத்து எனும் பற்பம் உடலைக் குறைப்பதுடன் ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் தரக் கூடியது. அணு தைலத்தை மூக்கினுள் விட்டு உறிஞ்சுவதால் தமோ குணம் எனும் மனோ தோஷமானது மூளையில் இருந்து நீங்கி விடும். குடல் சுத்தி முறைகளை ஆயுர்வேத மருத்துவ மனையில் தங்கி செய்து கொள்ள வேண்டியது அவசியமானது. 
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com